Tuesday, April 23, 2024
Home » மின்சாரத் துறை சீர்திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

மின்சாரத் துறை சீர்திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

- இலங்கை, இந்தியா பத்திரிகைப் பேரவைகளுக்கிடையிலான ஒப்பந்தம்

by Prashahini
November 21, 2023 2:29 pm 0 comment

– ஒலி/ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுச் சட்டம் அறிமுகம்
– இவ்வார அமைச்சரவை கூட்டத்தில் 10 முடிவுகள்

மின்சாரத் துறை சீர்திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது தவிர நேற்று (20) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 09 தீர்மானங்களுக்கு இவ்வாறு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மின்சக்தித் துறையில் நிறுவன ரீதியான மறுசீரமைப்புக்களை அறிமுகப்படுத்தி சமகாலப் பொருளாதார, சமூக மற்றும் நிர்வாகத் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் புதிய மின்சாரச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக அமைச்சரவை இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2. அரச சேவையில் பிணக்குகளைத் தடுப்பதற்கும், தீர்ப்பதற்குமான பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்தல்

அரச சேவையில் பிணக்குகளைத் தடுப்பதற்கும், தீர்ப்பதற்குமான தனியார் துறைக்கு இணையான பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்தும் நோக்கில் சமூக உரையாடல், உளவள ஆலோசனை, மத்தியஸ்தம் மற்றும் பிணக்குத் தீர்த்தல் போன்ற கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு, பிணக்குகளைத் தடுப்பதற்கும், தீர்ப்பதற்குமான பொறிமுறையொன்று பற்றிய முன்னோடி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2020.11.16 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சுகாதார மற்றும் போக்குவரத்து துறைகளில் 04 நிலையங்களில் குறித்த முன்னோடி வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதற்காக சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தொழிநுட்பத்திற்கான நிதி உதவியும் கிடைத்துள்ளது.

குறித்த முன்னோடிக் வேலைத்திட்டத்தின் கீழ் சேவை நிலையங்களுக்கான கொத்தணிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் செயற்பாடுகளால் அந்தந்தத் தரப்பினர்களுடனான ஒத்துழைப்பு மேம்படுத்தப்பட்டு பிணக்குத் தடுப்பு மற்றும் தீர்ப்புக்களின் அடிப்படையொன்று உருவாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த முன்னோடி வேலைத்திட்டத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற அடைவுகளின் அடிப்படையில், கீழ்க்காணும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• அரச நிறுவனங்களில் சேவை நிலையக் கொத்தணிகளைத் தாபித்தல்
• சுகாதாரம், போக்குவரத்து, துறைமுகம் மற்றும் கப்பல்துறை, மின்சக்தி மற்றும் எரிசக்தி, கல்வி அத்துடன் ஏனைய துறைகளுக்கான தொழிற்சங்கங்களின் முகாமைத்துவப் பிரதிநிதிகளுடன் கூடிய துறைசார் குழுக்களைத் தாபித்தல்
• தொழிற்சங்கங்கள், குறித்த அமைச்சு/துறைசார் பேரவை, நிறுவனப் பணிப்பாளர் நாயகம், முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் மற்றும் தேசிய வரவு செலவுத்திட்டப் பிரதிநிதிகளுடன் கூடிய தேசிய அரச உரையாடல் குழுக்களைத் தாபித்தல்
• மாகாண மட்டத்தில் 09 இணக்க சபைகளை தாபித்தல்
• பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் தேசிய பிணக்குத் தீர்ப்புக் குழாமொன்றை அமைத்தல்

3. இலங்கை இராசரட்டைப் பல்கலைக்கழகம் மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழகத்திற்கும் இடையில் கூட்டு ஒப்பந்தத்தை மேற்கொள்ளல்

இயலளவு விருத்தி செய்தல், ஆராய்ச்சி ஒத்துழைப்புக்களைக் கட்டியமைத்தல் மற்றும் மிடுக்கான விவசாயத்துறைக்கான புத்தாக்கங்கள் மற்றும் கிராமிய மட்டத்திலான நடுகைப் பொருள் உள்ளீடுகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இலங்கை இராசரட்டைப் பல்கலைக்கழகம் மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழகத்திற்கும் இடையில் கூட்டு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ள வரைபு ஒப்பந்தத்திற்கு வெளிவிவகார அமைச்சு உடன்பாடு தெரிவித்துள்ளதுடன், சட்டமா அதிபரின் ஒப்புதலும் கிடைக்கப் பெற்றுள்ளது. அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

4. இலங்கைப் பத்திரிகைப் பேரவை மற்றும் இந்தியாவின் பத்திரிகைப் பேரவைக்கும் இடையிலான ஒத்துழைப்புத் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்

விடயஞ்சார் செயலமர்வுகள் மற்றும் மாநாடுகளை நடாத்துவதன் மூலம் வெகுசன ஊடகவியலாளர்களைத் தெளிவூட்டலும், திறன் விருத்தி செய்தலும், இருதரப்பினர்களுக்கிடையே வளங்களைப் பரிமாற்றிக் கொள்கின்ற வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தலும், வெகுசன ஊடக ஒழுக்கநெறிக் கோவையை மேம்படுத்துவதற்கும் ஏற்புடைய வகையிலான செயற்பாடுகள் மற்றும் வெகுசன ஊடகச் சுதந்திரம் மற்றும் அமைதியான வெகுசன ஊடகப் பாவனையை பரப்புதல் போன்ற துறைகளுக்குரிய இருதரப்பினர்களிடையேயான ஒத்துழைப்புக்களுக்காக இலங்கை பத்திரிகைப் பேரவை மற்றும் இந்தியாவின் பத்திரிகைப் பேரவைக்கும் இடையில் 05 ஆண்டுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 2018.11.16 ஆம் திகதி கையொப்பமிடப்பட்டுள்ளது.

குறித்த ஒப்பந்தத்தின் செல்லுபடியான காலப்பகுதி தற்போது முடிவடைந்துள்ளமையால், மேலும் 05 ஆண்டுகளுக்குப் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கான உத்தேச வரைபு ஒப்பந்தத்திற்கு வெளிவிவகார அமைச்சின் உடன்பாடும் கிடைத்துள்ளது. அதற்கமைய, உத்தேச புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

5. ஆறு மாதம் தொடக்கம் மூன்று வயது வரையான பிள்ளைகளுக்கு திரிபோஷ உள்ளிட்ட மேலதிக உணவுத்திட்டத்திற்கான அல்/பா டொக்சின் (Alpha Toxin) தடைதாண்டல் மட்டத்தைத் திருத்தம் செய்தல்

சுகாதார அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் மகப்பேறு மற்றும் சிறுவர் ஆரோக்கியம் தொடர்பான வேலைத்திட்டத்தின் கீழ் 06 மாதம் தொடக்கம் 05 வயது வரை குறைந்த போசாக்குடைய பிள்ளைகளுக்கு மேலதிக உணவாகவும், கர் ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு மேலதிகப் போசாக்குப் பதார்த்தமாக ‘திரிபோஷ’ வழங்கப்பட்டு வருகின்றது.

ஆனாலும், 1980 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க உணவுச் சட்டத்தின் கீழ் காணப்படும் ஒழுங்குவிதிகளில் விதிக்கப்பட்டுள்ள இறுக்கமான அல்/பா டொக்சின் தடைதாண்டல் மட்டம் காரணமாக திரிபோஷ உற்பத்திக்குத் தேவையான சோளத்தைப் பெற்றுக் கொள்வதில் சிரமங்கள் உள்ளன. அதனால், சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள அல்/பா டொக்சின் மட்டமான B1 வகைக்கான 5 ppb மட்டத்தை ஒட்டுமொத்த அல்/பா டொக்சின் மட்டத்தை 10 ppb ஆக ஏற்புடையதாக்கிக் கொள்வதற்க சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

6. நுவரெலியாவின் எலிசபச் மாவத்தையில் அமைந்துள்ள ‘பழைய சீ பாங்க் ரெஸ்ட் (Cey-Bank Rest) கட்டிடம் மற்றும் காணியை’ அபிவிருத்தி செய்து பேணிச் செல்லல்

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான நுவரெலியாவின் எலிசபச் மாவத்தையில் அமைந்துள்ள பழைய சீ பாங்க் ரெஸ்ட் (Cey-Bank Rest)) கட்டிடம் மற்றும் காணியை அபிவிருத்தி செய்து பேணிச் செல்வதற்காக தனியார் துறை முதலீட்டாளர்களிடம் போட்டி முதலீட்டு முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ளன. சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளை மதிப்பீடு செய்த பின்னர், அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பேச்சுவார்த்தைக் குழுவால் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் குறித்த சொத்தை 50 வருடகால குத்தகை அடிப்படையில் கொலோனியல் புரொபர்டீஸ் பிரைவெட் லிமிட்டட் இற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

7. இலங்கைத் தொழிலாளர்களை தொழில்களில் அமர்த்துதல் தொடர்பாக இலங்கைக் குடியரசு மற்றும் இஸ்ரேல் அரசுக்கும் இடையிலான ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துகின்ற திட்டம்

இலங்கை தொழிலாளர்களை இஸ்ரேல் அரசின் திட்டவட்டமான தொழிற் சந்தைத் துறைகளில் தற்காலிகமாக தொழிலில் அமர்த்துவதற்கு இஸ்ரேல் அரசுடன் ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கும், அதற்காக, இருதரப்பினருக்கும் இடையில் அடிப்படை ஆவணங்களில் கையொப்பமிடுவதற்கு 2020.02.05 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

குறித்த ஒப்பந்தத்திற்கமைய, இஸ்ரேலில் விவசாய நடவடிக்கைகளுக்காக தொழிலாளர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கு அந்நாட்டு சனத்தொகை, புலம்பெயர் மற்றும் தேச எல்லைகள் அதிகாரசபை எதிர்பார்க்கின்றது. அதற்கமைய, நடைமுறைப்படுத்தப்படும் திட்டத்தில் 2023.11.06 ஆம் திகதி இருதரப்பினரும் கையொப்பமிட்டமையைக் குறிப்பிட்டு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் சமர்ப்பித்த தகவல்களை அமைச்சரவை கருத்தில் கொண்டுள்ளது.

8. இலத்திரனியல் ஊடகங்களுக்கான ஒலி/ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுச் சட்டத்தை அறிமுகப்படுத்தல்

பேச்சுச் சுதந்திரம் மற்றும் கருத்துத் தெரிவிக்கும் சுதந்திரத்தை உயரிய வகையில் பாதுகாத்து சிறந்த ஊடகத்துறையை உறுதிப்படுத்தும் நோக்கில் இலத்திரனியல் ஊடகங்களுக்கான ஒலி/ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக சட்டமூலமொன்றை தயாரிப்பதற்காக வெகுசன ஊடக அமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை 2022.09.22 அன்று இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அங்கு, முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலத்தைத் தயாரிக்கும் போது கவனம் செலுத்த வேண்டிய கொள்கை ரீதியான விடயங்கள் பற்றி பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அவர்களின் தலைமையில் அமைச்சரவை உபகுழுவொன்று உருவாக்கப்பட்டதுடன், குறித்த குழுவால் முன்மொழியப்பட்டுள்ள ஒலி/ஒளிபரப்பு ஆணைக்குழுச் சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கு அடிப்படையாகக் கொள்வதற்காக பொருத்தமான ஏற்பாடுகளுடன் கூடிய அடிப்படைச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆரம்ப வரைபின் அடிப்படையில் சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக வெகுசன ஊடக அமைச்சர்  சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

9. இலங்கை – தாய்லாந்து உத்தேச சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (SLTFTA) தொடர்பான கலந்துரையாடல்

இலங்கை – தாய்லாந்து உத்தேச சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக நடாத்தப்படும் கலந்துரையாடல் 2023 டிசம்பர் மாதம் ஆகும் போது முடிவுறுத்தி 2024.02.03 ஆம் திகதி குறித்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. குறித்த கலந்துரையாடலின் 06 ஆம் மற்றும் 07 ஆம் சுற்றுக்களில் எட்டப்பட்ட உடன்பாடுகளுக்கமைய, இயைபு முறைக் குறியீடு (HS Code) 2022 இன் அடிப்படையில் 15 வருடங்களில் இயைபு முறைக் குறியீட்டில் 80மூ இனை தளர்த்துவதற்கும், 15 – 18 வருடங்கள் வரையான காலப்பகுதியில் இயைபு முறைக் குறியீட்டில் 5% வீதத்தை பகுதியளவில் தளர்த்துவதற்கும், இயைபு முறைக் குறியீட்டின் எஞ்சிய 5% வீதத்தை மறை (-) பட்டியலில் உட்சேர்ப்பதற்கும் இயலுமாகும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இலங்கை வரித் தளர்த்தல் வேலைத்திட்டம்  ஜனாதிபதியால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது.

10. முதலீட்டுச் சபையின் கீழ் அங்கீகாரம் பெற்றுக் கொண்டிராததும், ஏற்கனவேயுள்ள கம்பனி/1978 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க முதலீட்டுச் சபைச் சட்டத்தின் 16 ஆம் பிரிவின் கீழ் அனுமதி பெற்ற கம்பனிகளுக்கு 1978 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க முதலீட்டுச் சபைச் சட்டத்தின் 17 ஆம் பிரிவின் கீழ் அனுமதி வழங்கல்

இலங்கை முதலீட்டு சபையின் கீழ் அங்கீகாரம் பெற்றுக் கொள்ளாமல் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வணிகங்களை முதலீட்டுச் சபையின் அங்கீகாரம் பெற்ற பின்னர், அவ்வாறான வணிகங்களில் முதலீடு செய்வதற்கு முதலீட்டாளர்கள் ஆர்வங் காட்டுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக வணிகங்களுக்குக் கிடைக்கின்ற அங்கீகாரம் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இலங்கை முதலீட்டுச் சபையுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வங் காட்டுகின்றனர்.

அதற்கமைய, இலங்கை முதலீட்டு சபை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இயலுமாகும் வகையில் ஏற்பாடுகளை அறிமுகப்படுத்தி முதலீட்டுச் சபை சட்டத்தின் 24 ஆம் பிரிவின் கீழ் முதலீட்டு ஊக்குவிப்பு விடயதான அமைச்சருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில், 2023.06.01 திகதிய அதிவிசே வர்த்தமானி அறிவித்தல் மூலம் கட்டளையொன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த கட்டளையை பாராளுமன்ற அங்கீகாரத்திற்கு சமர்ப்பிப்பதற்காக முதலீட்டு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT