பரல் 40 டொலராக இருந்தபோது ரூ. 122 க்கு பெற்றோல் விற்பனை | தினகரன்

பரல் 40 டொலராக இருந்தபோது ரூ. 122 க்கு பெற்றோல் விற்பனை

அன்று மக்களுக்கு நன்மையை வழங்காத மஹிந்த இன்று நல்லாட்சியை விமர்சிப்பது வேடிக்ைக
மஹிந்தவுக்கு மங்கள நேரடி விவாதத்துக்கு அழைப்பு

நாட்டின் தலைவராக இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மைக்காலமாக அரசியல் முதிர்ச்சியற்ற போக்கில் கருத்துக்களை வெளியிடுவது அவரது அரசியல் வாழ்க்கைக்கு பொறுத்தமற்றதென தெரிவித்திருக்கும் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர ஜனாதிபதியாகவும் நிதியமைச்சராகவும் பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஷ தமது கடந்த காலச் செயற்பாடுகளை ஒரு தடவை மீட்டிப் பார்க்க வேண்டுமெனவும் கேட்டுள்ளார்.

உலக சந்தையில் மசகு எண்ணெய் பரல் ஒன்றின்விலை 40 அமெரிக்க டொலராக இருந்த 2008 டிசம்பரில் ஆட்சி நடத்திய ராஜபக்ஷ, பெற்றோலின் விலையை லீற்றர் ஒன்று 122 ரூபாவுக்கு வழங்கியதை அவர் மறந்துவிட்டார். இன்று எமது அரசு அறிமுகப்படுத்தும் எரிபொருள் விலைச் சூத்திரத்தை திரிபுபடுத்தி கருத்து வெளியிடுவது அவரது அரசியல் ஆளுமைக்கு உகந்ததல்லவெனவும் அமைச்சர் மங்கள விசனம் தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை மாலை நிதியமைச்சில் நடைபெற்ற விசேட ஊடக மாநாட்டின் போதே அமைச்சர் மங்கள சமரவீர மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

நீண்டதொரு அரசியல் அனுபவத்தைக்கொண்ட மூத்த அரசியல்வாதியான மஹிந்த ராஜபக்ஷ கத்துக்குட்டி அரசியல்வாதியைப் போல் பேச முனைவது வெட்கப்படவேண்டிய ஒரு விடயமாகும். அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள எரிபொருள் விலைச் சூத்திரம் தொடர்பில் திரிவுபடுத்திய கருத்துக்களை வெளியிட்டு வரும் மஹிந்த ராஜபக்ஷ தனது ஆட்சிக் காலத்தில் நடந்தவற்றை மறந்துவிட்டார். அன்று 97 டொலர் விலையில் மசகு எண்ணெய் இருந்த காலத்தில் எங்கள் நாட்டில் பெற்றோல் லீற்றரின் விலை 120 ரூபாவாக விற்கப்பட்டது. இது எம் எல்லோருக்கும் தெரிந்த விடயமே. ராஜபக்ஷ ஆட்சிக்காலத்திற்கும் இன்றைய ஆட்சிக் காலத்திற்கும் கால வித்தியாசம் இருக்கின்றது. மஹிந்த ராஜபக்ஷ காலத்தைவிட இன்று பெற்றோல் டீசல் உட்பட எரிபொருட்களின் விலை மிகக் குறைவேயாகும். 2014 டிசம்பர் 2015 ஜனவரி காலப் பகுதியில் எமது நாட்டில் பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 150 ரூபாய். அன்று மசகு எண்ணெய் ஒரு பரலின் விலை 55 டொலராகும்.

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை 98 ரூபாவாக இருந்தபோது பெற்றோல் ஒரு லீற்றர் 157 ரூபாவுக்கு விற்கப்பட்டது. மசகு எண்ணெய் ஒரு பரல் 68 டொலராகவிருக்கும் போதும் 46 டொலராகவிருக்கும் போதும் பெற்றோலின் விலை 150 ரூபாவுக்கே வழங்கப்பட்டது. இன்று நாம் 74 டொலராக மசகு எண்ணெய் இருக்கும் நிலையில் பெற்றோல் ஒரு லீற்றரை 145 ரூபாவுக்கே வழங்குகின்றோம். அப்படிப்பார்த்தால் இன்னமும் நாங்கள் ராஜபக்ஷ ஆட்சியைவிட குறைந்தவிலைக்கே கொடுக்கின்றோம். ஆதலால், எரிபொருட்களின் விலை விபரங்களை திரிபுபடுத்தி அறிக்கை விடுவதை ராஜபக்ஷ இனியாவது நிறுத்திக்கொள்ள வேண்டும். முன்னாள் நிதியமைச்சருக்கு மீண்டும் அழைப்பு விடுக்கின்றேன் என்னோடு இந்த விடயம் தொடர்பில் பகிரங்க விவாதமொன்றுக்கு வாருங்கள். அப்படி விவாதத்துக்கு வரும்பட்சத்தில் எம்மால் நாட்டின் பொருளாதார நிலைமைகள் தொடர்பாக நேருக்கு நேர் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள முடியும்.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பொன்று வழங்கப்பட்டிருந்தது. ஒரு லீற்றர் பெற்றோலை 65 ரூபாவாக குறைக்குமாறு உத்தரவிட்டிருந்தது. அந்தத் தீர்ப்பை வழங்கியவர் அவருடைய முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா ஆவார். அந்தத் தீர்ப்பைக்கூட முன்னாள் ஜனாதிபதி நடைமுறைப்படுத்தவில்லை.

நாம் எதிர்காலத்தில் மாதாந்தம் ஒரு தடவை எரிபொருள் விலையில் மாற்றங்களைக் கொண்டுவருவோம். உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்தால் இங்கு விலை அதிகரிப்பது போன்று உலக சந்தையில் எரிபொருள் விலை குறையும் பட்சத்தில் இங்கும் அந்த விலையைக் குறைப்பதற்குமே இந்த விலைச் சூத்திரம் அறிமுகப்படுத்தப்படுகின்றது.

இந்த விலைச் சூத்திர முறை உலகில் அபிவிருத்தியடையும் நாடுகள் பலவற்றில் கடைப்பிடிக்கப்படுகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

நாங்கள் எதையும் ஒளித்து விளையாடவில்லை. பகிரங்கமாகவே தெரிவிக்கின்றேம். எனது சவாலை ஏற்று மஹிந்த ராஜபக்ஷ பகிரங்க விவாதத்துக்கு வருவாரானால் நாட்டு மக்களுக்கு உண்மைநிலையை தெரிந்துகொள்ள முடியும் எனவும் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.


Add new comment

Or log in with...