Home » விமர்சனங்கள், குறைகளை விடுத்து மலையகத்தை முன்னேற்ற முயல வேண்டும்

விமர்சனங்கள், குறைகளை விடுத்து மலையகத்தை முன்னேற்ற முயல வேண்டும்

by damith
November 21, 2023 8:00 am 0 comment

மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் அரசாங்கத்தின் மீது குறைகளையும் விமர்சனங்களையும் முன்வைப்பதை விடுத்து ஜனாதிபதியுடன் இணைந்து, மலையக பிரதேசங்களை அபிவிருத்திசெய்ய முன்வர வேண்டும் என மருதபாண்டி ராமேஸ்வரன் எம்பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அத்துடன் மலையக மக்களுக்கு 10 பேர்ச் காணி வழங்குவதற்காக 4 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கியமை தொடர்பில், ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் சபையில் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஆறாவது நாள் விவாதத்தில், கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

மலையக மக்கள் இந்தியாவிலிருந்து வருகை தந்து 200 வருடங்களாகியும் அவர்களுக்கு காணி மற்றும் வீட்டு உரிமை வழங்கப்படவில்லை.

எனினும், மலையகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை அவ்வப்போது ஆட்சிக்கு வரும் அரசாங்கத்துடன் இணைந்து இ.தொ.கா தலைவர்கள் மேற்கொண்டு வந்துள்ளனர். தற்போது, மலையக மக்களுக்கு 10 பேர்ச் காணி வழங்குவதற்கு ஜனாதிபதி யோசனைகளை முன் வைத்துள்ளார். இதற்காக 4 பில்லியன் ரூபா நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ‘நாம் மலையகம்’என்ற நிகழ்வை கொழும்பில் நடத்தினோம்.

அதில், கலந்துகொண்ட வெளிநாட்டமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மலையக மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தனர். இந்நிகழ்வையும் சிலர் விமர்சித்து வருகின்றனர்.

அமைச்சர் ஜீவன் தொண்டமான் அந்நிகழ்வுக்கு ஜனாதிபதியை அழைத்ததுடன் மலையக மக்களுக்கு 10 பேர்ச் காணிக்கான உறுதிமொழியை வழங்கவேண்டும் எனவும் கேட்டிருந்தார்.

அவ்வாறே ஜனாதிபதியும் அந்த உறுதிமொழியை அந்த நிகழ்வில் வழங்கினார். தற்போது அதற்காக நிதியும் ஒதுக்கப்பட்டிருக்கின்றது.

அதேபோன்று இம்முறை வரவு செலவு திட்டத்தில் மலையக அபிவிருத்திக்காக கடந்த காலங்களை விட அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.ஆனால், அதனையும் சிலர் விமர்சனம் செய்கின்றனர். இவ்வாறு விமர்சனம் செய்தே மலையக மக்களின் எதிர்காலத்தை இல்லாதொழிக்க சிலர் செயற்பட்டு வருகின்றனர். எம்மைப் பொறுத்தவரை ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்துடன் கலந்துரையாடி மலையக மக்களுக்கு தேவையானதை பெற்றுக் கொடுப்பதையே நோக்காகக் கொண்டுள்ளோம்.

அத்துடன் மலையக மக்களுக்கு ஒரு இலட்சத்து 70,000ற்கும் அதிகமான வீடுகள் தேவையாக உள்ளன.அரசாங்கம் ஒவ்வொரு வருடமும் 1000 வீடுகளையே நிர்மாணிக்கிறது. அதன் படி மலையகத்துக்கு தேவையான வீடுகளை பெற்றுக்கொள்ள பல வருட காலம் செல்லும். அதனால் 10 பேர்ச் காணி உரிமையை பெற்றுக்கொள்வதன் மூலம், அந்த மக்கள் அவர்களே வீடுகளை கட்டிக் கொள்ள வாய்ப்பு ஏற்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT