126 ஓட்டங்களுக்கு சுருண்டது தென்ஆபிரிக்கா இலங்கை 272 ஓட்டங்களால் முன்னிலை | தினகரன்


126 ஓட்டங்களுக்கு சுருண்டது தென்ஆபிரிக்கா இலங்கை 272 ஓட்டங்களால் முன்னிலை

காலியில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் தென்ஆபிரிக்கா இலங்கையின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 126 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இலங்கை - தென்ஆபிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் காலியில் நடைபெற்று வருகிறது. நேற்றுமுன்தினம் தொடங்கிய இந்த டெஸ்டில் இலங்கை நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாட்டத்தை தெரிவு செய்தது. கருணாரத்ன தனிஒருவராக நின்று 158 ஓட்டங்கள் சேர்க்க இலங்கை அணி 287 ஒட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தது. தென்ஆபிரிக்கா அணி சார்பில் ரபாடா 4 விக்கெட்டும், ஷாம்சி 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் தென்ஆபிரிக்கா அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக டீன் எல்கர் மற்றும் மார்கிராம் ஆகியோர் களம் இறங்கினார்கள். மார்கிராம் ஓட்டம் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். முதல்நாள் ஆட்ட முடிவில் தென்ஆபிரிக்கா 1 விக்கெட் இழப்பிற்கு நான்கு ஓட்டங்கள் எடுத்திருந்தது. டீன் எல்கர் 4 ஓட்டங்களுடனும், மகாராஜ் ஓட்டம் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

நேற்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இலங்கையின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தென்ஆபிரிக்கா அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தது.

டீன் எல்கர் (8), மகாராஜ் (3), அம்லா (15), பவுமா (17), டி காக் (3) சொற்ப ஒட்டங்களில் ஆட்டமிழக்க தென்ஆபிரிக்கா 51 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்து திணறியது. 7-வது விக்கெட்டுக்கு டு பிளிசிஸ் உடன் பிலாண்டர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நீண்ட நேரம் தாக்குப்பிடித்தது. தென்ஆப்பிரிக்கா அணியின் ஸ்கோர் 115 ஓட்டங்களாக இருக்கும்போது பிலாண்டர் 18 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் டு பிளிசிஸ் 49 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

கடைசி விக்கெட்டாக ஸ்டெயின் 8 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க தென்ஆபிரிக்கா 54.3 ஓவர்களில் 126 ஓட்டங்கள் எடுத்து சகல விக்கெட்டையும் இழந்தது. இலங்கை அணி தரப்பில் தில்ருவான் பெரேரா 4 விக்கெட்டும், லக்மால் 3 விக்கெட்டும்,ஹேரத் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

இலங்கை அணி முதல் இன்னிங்சில் தென்ஆபிரிக்காவை விட 161 ஓட்டங்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. 161 முன்னிலையுடன் 2-வது இன்னிங்யை தொடங்கிய அவ்வணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 111 ஓட்டங்கள் பெற்றுள்ளது.இலங்கை அணி சார்பாக முதல் இன்னிங்ஸில் 158 ஓட்டங்கள் பெற்ற கருணாரத்தன 60 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றார்.அஞ்லோ மெத்திவ்ஸ் 14 ஓட்டங்களுடனும் ரெசேன் சில்வா 10 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.இலங்கை அணி 272 ஓட்டங்கள் முன்னிலை வகிக்கும் அதே நேரம் 6 விக்கெட்டுக்கள் கைவசம் உள்ளது.இன்று போட்டியின் 3 வது நாளாகும்.


Add new comment

Or log in with...