மாணவர் திறன் விடயத்தில் அதிகார போட்டி வேண்டாம் | தினகரன்

மாணவர் திறன் விடயத்தில் அதிகார போட்டி வேண்டாம்

பாடசாலைகளில் விளையாட்டுத்துறையை ஊக்குவிக்கும் பொருட்டு கல்வியமைச்சு பல்வேறு காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் மாகாண சபைகள் அதற்கு போதுமான ஒத்துழைப்பை வழங்குவதில் அக்கறை காட்டுவதில்லை என கல்விஅமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் விசனம் தெரிவித்திருக்கிறார். மாணவர்களுக்கு விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களை கல்வியமைச்சு நியமித்த போதிலும் அவர்களுக்கான நியமனக் கடிதங்களை பெற்றுக்கொடுக்க முடியாதென பெரும்பான்மை யான மாகாண சபைகள் கல்வியமைச்சுக்கு அறிவித்திருக்கின்றது.

நல்லாட்சி அரசாங்கம் நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் சுற்றுநிருபங்களை அனுப்பிவைத்த போதிலும் மாகாண சபைகள் இந்த சுற்றுநிருபங்களை கவனத்திலெடுக்காமல் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டு வருகின்றன. மத்திய அரசு வழங்கும் நியமனங்களுக்கு மாகாண சபையினால் சம்பளம் வழங்க முடியாதென தெரிவிக்கப்பட்டிருப்பதாக அறிய வருகின்றது. மாகாண சபைகளின் கல்வியமைச்சர்களும் அவற்றின் செயலாளர்களும் தமது முடிவை கல்வியமைச்சுக்கு எழுத்து மூலம் அறிவித்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.

கல்வியமைச்சு எடுத்த தீர்மானத்துக்கமைய பாடசாலைகளில் மாணவர்களுக்கு விளையாட்டுத்துறையில் பயிற்சி வழங்கப்பட வேண்டியதன் அவசியம் உணரப்பட்டதன் காரணமாக கல்வியமைச்சு எழுத்து மூலப் பரீட்சையை நடத்தி 3200 பேரை தெரிவுசெய்துள்ளது. அவர்கள் சகல மாகாணங்களிலுமுள்ள பாடசாலைகளில் இணைத்துக்கொள்ளும் வகையில் நியமனக் கடிதங்களை வழங்குமாறு மத்திய அரசு மாகாண சபைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. மத்திய, வடமேல், தென் மாகாணங்களின் மாகாண சபைகள் இந்த அறிவுறுத்தல்களை ஏற்றுக்கொண்ட போதிலும் ஏனைய ஆறு மாகாண சபைகளும் இதனை நிராகரித்துள்ளன.

மாகாண சபைகளின் செயற்பாட்டுக்கு மத்திய அரசு வருடாந்தம் நிதியை ஒதுக்கிக்கொடுக்கிறது. விளையாட்டுத்துறைக்கென கூடுதல் நிதி வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். அவ்வாறான நிதியை மாகாண சபைகள் பெற்றுக்கொண்ட போதிலும் விளையாட்டுப் பயிற்சி ஆலோசகர்களுக்கு சம்பளம் வழங்க மாகாண சபைகளிடம் நிதி இல்லையென மாகாண சபைகள் சுட்டிக்காட்டியிருக்கின்றன. தொழில்வாய்ப்பு என்ற வகையில் உயர்தரம் சித்தியடைந்தவர்களே இதற்குத் தெரிவுசெய்யப்பட்டனர்.

நாட்டில் பெரும்பான்மையான பாடசாலைகள் மாகாண சபைகளின் பொறுப்பிலேயே காணப்படுகின்றன.

அரசு எடுத்த முடிவை மாகாண சபைகள் அங்கீகரிக்காமல் தட்டிக்கழித்துள்ளன. 3200 பேர் இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். விளையாட்டுத்துறையை மேம்பாடடையச் செய்ய வேண்டும் என்ற அரசின் இலக்கை அடைவதற்கு மாகாண சபைகளதும் அனைத்துப் பாடசாலைகளினதும் ஒத்துழைப்பு மிக மிக முக்கியமானதாகும். மாகாண சபையும் மத்திய அரசும் இவ்விடயத்தில் முரண்பட்டுச் செயற்பட முடியாது.

எமது நாட்டுப் பாடசாலை மாணவர்கள் இன்று சர்வதேச ரீதியில் பேசப்படுகின்ற அளவுக்கு எந்தவொரு நாட்டு மாணவன் குறித்தும் பேசப்படவில்லை. அடுத்த சார்க் விளையாட்டிலும் ஒலிம்பிக் போட்டிகளிலும் சாதனை படைக்க வேண்டிய இளைஞர், யுவதிகள் இன்று பாடசாலைகளில் தமது திறமைகளை வெளிக்காட்டிக் கொண்டிருக்கின்றனர். அவர்களை மேலும் உன்னத நிலைக்கு கொண்டுவரும் பொருட்டு பாடசாலை மட்டங்களில் மேலதிக பயிற்சிகளை பெற்றுக்கொடுக்க கல்வியமைச்சு எடுத்த தீர்மானத்துக்கமையவே இந்த பயிற்சி ஆலோசகர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.

உயர்தரத்தில் சித்திபெற்ற விளையாட்டுத்துறை திறமைகளை வெளிப்படுத்தியவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கல்வியமைச்சு சகல மாகாண சபைகளுக்கும் அறிவித்திருந்த நிலையில் 6 மாகாண சபைகள் கல்வியமைச்சின் இந்த அறிவுறுத்தல்களை புறக்கணித்ததோடு இவர்களுக்குச் சம்பளம் வழங்குவதற்கு போதிய நிதியை ஒதுக்கித்தந்தால் மட்டுமே அது குறித்துப் பரிசீலிக்க முடியுமென பதிலளித்துள்ளன.

மாகாண சபைகளின் இந்தச் செயற்பாட்டினால் பாதிக்கப்படுவது எமது எதிர்கால விளையாட்டு வீரர்களேயாவர். உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் நல்ல திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய வீர, வீராங்கனைகள் எம்மிடம் உள்ளனர். அடுத்த ஒலிம்பிக் போட்டியில் எம்மாலும் பல பதக்கங்களை வென்றெடுக்கக் கூடிய நம்பிக்கை காணப்படுகின்றது. இவ்வாறானதொரு நிலையில் மாகாண சபைகள் மத்திய அரசுடன் ஒத்துப்போகாமல் வீறாப்புடன் நடந்துகொள்ள முனைவது கவலைதரக்கூடியதாகும்.

அரசாங்கமானாலும், மாகாண சபைகளாக இருந்தாலும் சில விடயங்களில் கட்டாயமாக ஒத்துப்போக வேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருக்கின்றது. இதுவிடயத்தில் அரசியல் முரண்பாடுகளோ அதிகார மட்ட முரண்பாடுகளோ காரணமாக அமைந்துவிடக்கூடாது. நாடு நலம்பெற ஒன்றுபட்டு ஒத்துழைப்பதே எம்மீதான பொறுப்பாகும். இந்த பொறுப்பை மீறுவதால் ஏற்படக்கூடிய விளைவுகளுக்கு ஒவ்வொருதரப்பும் பதிலளித்தாக வேண்டும் என்பதை எவரும் மறந்துவிடக்கூடாது.

நாட்டை வளமான நாடாக மாற்றும் பொறுப்பு அரசுக்கு மட்டுமானதல்ல, மாகாண சபைகளுக்கும் உள்ளூராட்சி சபைகளுக்கும் பொருந்துவதொன்றாகும். இதனை மனதில்கொண்டு நாட்டுக்கு நல்லதைச் செய்யும் நல்லெண்ணம் ஒவ்வொருவரிடமும் வரவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். நாளை விளையாட்டுத்துறையில் மின்னப்போகும் எமது இளசுகளுக்காக அதிகாரப் போட்டியிலிருந்து விடுபட்டு ஒத்துழைக்க மாகாண சபைகள் முன்வரவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.


Add new comment

Or log in with...