உண்மை நிலையை அரசாங்கம் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் | தினகரன்

உண்மை நிலையை அரசாங்கம் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்

உலக சந்தையில் மசகு எண்ணெய் 74 அமெரிக்க டொலர்களாக இருக்கும் போது எரிபொருள் விலையை இலங்கையில் வழமைக்குமாறாக அதிகரித்துள்ளமைக்கான காரணத்தை அரசாங்கம் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

எட்டு வாரங்களுக்குள் இரண்டாவது தடவையாகவும் எரிபொருள் விலை அதிகரித்திருப்பதை காணும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இன்று பெற்றோல் லீற்றர் ஒன்று 145 ரூபாவாகவும், டீசல் 118 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இன்று மசகு எண்ணெய் 74 டொலருக்கு உலக சந்தையில் விற்பனையாகிறது.

10 ஆண்டுகளுக்கு முன் 2008 ஆம் ஆண்டு 97 டொலருக்கு மசகு எண்ணெயை வாங்கினோம். அந்த சமயத்தில் 120 ரூபாவுக்கு பெற்றோலையும் 70 ரூபாவுக்கு டீசலும் விற்பனை செய்யப்பட்டது.

நாம் ஆட்சிசெய்த 9 ஆண்டு காலமும் உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரித்தே காணப்பட்டது. மத்திய வங்கியின் அறிக்கையின்படி நான் ஆட்சிக்கு வந்த 2005 ஆம் ஆண்டு நவம்பர் இறுதியில் மசகு எண்ணெய் 73 டொலர்களாக இருந்தது. அதனைத் தொடர்ந்து 2011, 2012, 2013, 2014 ஆண்டுகளில் மசகு எண்ணெய் விலை 109 டொலர்களுக்கும் மேல் அதிகரித்தது. 74 டொலர்கள் என்பது எமது ஆட்சிக் காலத்தைவிட வெகுவாக குறைந்ததாகவே இருந்தது.

இன்று எரிபொருள் விலை என்றுமில்லாதவாறு அதிகரித்திருப்பதன் காரணம் தொடர்பில் அரசாங்கம் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

விலை அதிகரிப்பை நியாயப்படுத்துவதாக விலைச்சூத்திரம் பற்றி பேசப்படுகின்ற போதும் எவரும் இந்த விலைச் சூத்திரத்தை கண்டதில்லை. எனினும் அரசாங்கம் வருட இறுதியில் எரிபொருளால் மிகப்பெரிய இலாபத்தை ஈட்டும் நோக்கிலேயே விலையை கூட்டியும் குறைத்தும் வருகிறது. இவ்வாறான செயற்பாட்டால் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கும் பாரிய இலாபம் ஈட்டும் வகையில் மிக சூட்சுமமாக விலை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது. அரசாங்கம் எரிபொருள் விலையை அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ள முறைபற்றி மக்கள் உன்னிப்பாக அவதானிக்க வேண்டும்.

முதலில் ஐ. ஓ. சி. நிறுவனத்துக்கு விலையை அதிகரிக்க இடமளித்த பின் கூட்டுத்தாபனம் பழையவிலைக்கு விற்பனை செய்யும்.

சில நாட்கள் சென்றதன் பின்னர் மக்கள் விலை அதிகரிப்பை ஏற்றுக்கொண்டு பழக்கப்பட்டதன் பின்னர் கூட்டுத்தாபனம் விலையை அதிகரிக்கும்.

ஒரேயடியாக எரிபொருள் விலையை அதிகரிப்பதால் மக்கள் எதிர்ப்பு கிளப்புவதை தடுக்கும் நோக்கில் இவ்வாறான விலை அதிகரிப்பை செய்கிறது. இது மக்களை பாரிய அளவில் சுரண்டும் நடவடிக்கைகளென கருதுகிறேன்.


Add new comment

Or log in with...