11 இலட்சம் காணிகளுக்காக காணி உறுதி வழங்க முடிவு | தினகரன்

11 இலட்சம் காணிகளுக்காக காணி உறுதி வழங்க முடிவு

காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ள சுமார் 11 இலட்சம் காணிகளுக்காக காணி உறுதிப்பத்திரம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இதன் பிரகாரம் ஜெயபூமி காணி அனுமதிப்பத்திரம் (பேர்மிட்) வழங்கப்பட்டுள்ள 436,992 காணிகளுக்கும் ஏனைய காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ள 7 இலட்சம் காணிகளுக்கும் காணி உறுதிப்பத்திரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

2019-/2020 காலப்பகுதியினுள் சகலருக்கும் காணி உறுதிகள் வழங்கப்படும் என இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

அரசாங்கம் இது வரை 16 இலட்சம் காணி அனுமதிப் பத்திரங்களை வழங்கியுள்ளது. இதில் 11 இலட்சம் காணிகளுக்கு காணி உறுதி வழங்கப்படாத நிலையில் துரித வேலைத்திட்டத்தின் கீழ் இதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக காணிகளை அளவீடுசெய்யவும் அதற்கு தேவையான ஏற்பாடுகளை முன்னெடுக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்னவும் இது தொடர்பில் கருத்து தெரிவித்தார்.

2002-/2004 காலப்பகுதியில் நான் காணி அமைச்சராக செயற்பட்ட போது காணி உறுதி வழங்க அமைச்சரவை முற்பட்டது.

இது தொடர்பில் இடையூறுகள் ஏற்பட்டதோடு அன்றை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இதற்கு அனுமதி வழங்கினாலும் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதால் அந்தத் திட்டம்தடைப்பட்டது.

காணி உறுதி இல்லாததால் காணியை கைமாற்றவோ கடன் பெறவோ முடியாத நிலை காணி உரிமையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.காணி உறுதி வழங்கினால் அவற்றை விற்றுவிடுவார்கள் என்ற குற்றச்சாட்டு நியாயமானதல்ல.இது தொடர்பில் ஆய்வு கூட செய்யப்பட்டுள்ளது என்றார்.(பா)


Add new comment

Or log in with...