நியாயமான காரணம் இன்றி எரிபொருள் விலை அதிகரிப்பு! | தினகரன்

நியாயமான காரணம் இன்றி எரிபொருள் விலை அதிகரிப்பு!

எரிபொருள் விலையை அதிகரிக்க அரசாங்கத்துக்கு நியாயமான எந்தக் காரணமும் கிடையாது. தனது இயலாமையை மக்கள் மீது சுமத்துவதற்கு அரசு முயற்சிப்பதாக ஜே.வி.பி குற்றஞ்சாட்டியுள்ளது.

உலக சந்தையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படாத நிலையில் அரசாங்கம் நியாயமற்ற முறையில் விலைகளை அதிகரித்துள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கப்வேதாக ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

நாளை (இன்று) மஹகரகமவில் எதிர்ப்புப் போராட்டம் நடைபெறவிருப்பதுடன், எதிர்வரும் 16ஆம் 17ஆம் திகதிகளில் நாடு முழுவதிலும் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிரான போராட்டங்களை வலுப்படுத்தவிருப்பதாகவும் கூறினார். அரசாங்கம் எரிபொருள் விலை அதிகரிப்பைக் கைவிடும்வரை போராட்டங்கள் தொடரும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஜே.வி.பியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ரில்வின் சில்வா இந்தக் கருத்துக்களை முன்வைத்தார்.

இரண்டு மாதங்களுக்குள் ஒரு லீட்டர் பெற்றோல் 28 ரூபாய்களாலும், ஒரு லீட்டர் பெற்றோல் 23 ரூபாய்களாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கும் ஒருமுறை மக்களின் வாழ்க்கைச்சுமை அதிகரிக்கப்படுகிறது. பெற்றோலை உற்பத்தி செய்யும் நாடுகள் பெற்றோலை நிலத்திலிருந்து அகழ்ந்தெடுத்து அதனை சுத்திகரித்து சுத்தமான பெற்றோலாக்கி ஒரு லீட்டரை 78.43 ரூபாவுக்கு வழங்கும் நிலையில், இலங்கை அரசாங்கம் எந்தவித சிரமும் இன்றி கதிரையில் இருந்தவாறு ஒரு லீட்டர் பெற்றோலில் 60.63 ரூபா வருமானம் ஈட்டுகிறது. சிறந்த பொருளாதாரக் கொள்கையற்ற நிலையில் உள்ள அரசாங்கம் தனது பலவீனத்தை மறைப்பதற்காக மக்கள் மீது வீண் சுமைகளைச் சுமத்துகிறது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

எரிபொருட்களின் விலைகள் கடந்த 5ஆம் திகதி அதிகரிக்கப்பட்டபோது எதிர்ப்புத் தெரிவித்த ஜனாதிபதி, தற்பொழுது அதனை ஏற்றுக் கொண்டிருப்பதாகக் கூறுவது குழப்பமாகவுள்ளது. கடன்களைப் பெறுவதை பழக்கமாக்கிக் கொண்டுள்ள அரசாங்கம் தனது கடன்களை மீளச்செலுத்தும் நோக்கில் இவ்வாறு மக்கள் மீது சுமைகளைச் செலுத்தி வருகிறது. இதனை நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து எதிர்க்க வேண்டும் என்றும் ரில்வின் சில்வா கேட்டுக்கொண்டார்.

எரிபொருள் விலை அதிகரிப்பதற்கான எந்தக் காரணங்களும் இல்லை. உலக சந்தையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கவில்லை. இதனால் இந்த விலை அதிகரிப்பு நியாயமற்றது என்றும் கூறினார்.

மகேஸ்வரன் பிரசாத்


Add new comment

Or log in with...