காசாவுக்கு பொருட்கள் செல்லும் பிரதான பாதைக்கு இஸ்ரேல் பூட்டு | தினகரன்

காசாவுக்கு பொருட்கள் செல்லும் பிரதான பாதைக்கு இஸ்ரேல் பூட்டு

பலஸ்தீனர்களின் தீ வைப்பு தாக்குதல்கள் மற்றும் எல்லைக்குள் ஊடுருவும் முயற்சிக்கு பதில் நடவடிக்கையாக சரக்குகளை எடுத்துச் செல்லும் காசாவுக்கான பிரதாக எல்லை கடவையை இஸ்ரேல் மூடியுள்ளது.

உணவு மற்றும் மருந்துகள் உட்பட மனிதாபிமான பொருட்கள் மாத்திரம் கெரெம் ஷலொம் ஊடாகச் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

காசாவில் அதிகாரத்தில் உள்ள ஹமாஸ் அமைப்புக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதாக இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு உறுதி அளித்துள்ளார். இஸ்ரேலின் செயல் “மனித குலத்திற்கு எதிரானது” என்று ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேல் – காசா எல்லையில் கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கம் பலஸ்தீனர்கள் பட்டங்கள் மற்றும் பலுௗன்களில் எரியும் பொருட்களை கட்டிவிட்டு இஸ்ரேலை நோக்கி பறக்கவிட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கையால் தெற்கு இஸ்ரேலில் சுமார் 750 தீ சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 2,600 ஏக்கர்கள் அளவான காடுகள் மற்றும் விவசாய நிலங்கள் தீக்கிரையாகியுள்ளன. இதனால் இஸ்ரேல் பல்லாயிரம் டொலர் நஷ்டத்தை சந்தித்திருப்பதாக இஸ்ரேலிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கெரெம் ஷலொம் எல்லை கடவையை மூடும்படி பிரதமர் திங்கட்கிழமை உத்தரவிட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலின் முற்றுகையில் இருக்கும் காசாவுக்கான பொருட்கள் செல்லும் பிரதான பாதையை இஸ்ரேல் மூடியிருப்பதற்கு ஐ.நா சபை கண்டனம் வெளியிட்டுள்ளது. கிட்டத்தட்ட காசாவுக்கான அனைத்து பொருட்களும் இந்த வாயில் ஊடாகவே செல்கின்றன.


Add new comment

Or log in with...