டிரம்ப் –ஐரோப்பிய தலைவர்களின் முறுகலுக்கு மத்தியில் பிரசல்சில் நேட்டோ மாநாடு ஆரம்பம் | தினகரன்

டிரம்ப் –ஐரோப்பிய தலைவர்களின் முறுகலுக்கு மத்தியில் பிரசல்சில் நேட்டோ மாநாடு ஆரம்பம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ஐரோப்பிய தலைவர்களிடையே நிலவிவரும் பதற்றத்திற்கு மத்தியில் 40க்கும் அதிகமான அரச தலைவர்கள் மற்றும் 29 நாடுகள் மற்றும் உறுப்புரிமை அற்ற நட்பு நாடுகளுடன் இரண்டு நாள் நேட்டோ மாநாடு நேற்று பிரசல்ஸ் நகரில் ஆரம்பமானது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மாநாட்டில் சைபர் தாக்குதல் உட்பட் மேற்குலகுக்கு எதிரான ரஷ்யாவின் நடவடிக்கைகளில் உறுப்பு நாடுகள் ஒற்றுமையை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் இந்த வார இறுதியில் சந்திப்பை நடத்தும் டொனால்ட் டிரம்பின் எதிர்பாராத அறிவிப்புக்கு மத்தியிலேயே மாநாடு நடைபெறுகிறது.

ஒரு வார ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை ஆரம்பித்து கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பிரசல்ஸ் நகரை வந்தடைந்த டிரம்ப், மாநாட்டுக்கு முன்னரே கடுமையான கருத்துகளை வெளியிட்டிருந்தார். குறிப்பாக ரஷ்யாவுடன் எரிவாயு குழாய் ஒப்பந்தத்தில் ஈடுபட்டிருக்கும் ஜெர்மனி ‘ரஷ்யாவின் பிடியில் சிக்கி இருப்பதாக’ குற்றம்சாட்டியுள்ளார்.

நேற்று நேட்டோ பொதுச் செயலாளர் ஜேன்ஸ் ஸ்டோல்டன்பேர்க்கை சந்தித்த டிரம்ப் அதன் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும்போது, “ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரமான ஜெர்மனி, ரஷ்யாவுடன் எரிவாயு உடன்படிக்கையில் ஈடுபட்டிருக்கும்போது ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கு அமெரிக்கா செலவு செய்வது பொருத்தமற்றது” என்றார்.

நேட்டோ உறுப்பு நாடுகள் தமது உள்நாட்டு உற்பத்தியில் பாதுகாப்பிற்கு 2 சதவீதத்தை செலவிட தவறி வருவது குறித்து டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். ஓர் ஆண்டுக்கு முன் பெல்ஜியத்தில் இருக்கும் நோட்டோ தலைமையகத்திற்கு டிரம்ப் முதல் முறை விஜயம் மேற்கொண்டபோது, நேட்டோவின் பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஆதரிக்க ஆரம்பத்தில் மறுத்தார்.

நேட்டோ மாநாட்டுக்கு வரும் முன் டிரம்ப் செவ்வாய்க்கிழமை வெளியிட்டிருந்த ட்விட்டார் பதிவில், “ஐரோப்பா புறப்பட தயாராகிறேன். நேட்டோவில் முதல் சந்திப்பு. அவர்களை காப்பதற்காக அமெரிக்கா ஏனைய நாடுகளை விடவும் பல மடங்கு செலவிடுகிறது” என்று குறிப்பிட்டிருந்தார். “வரி செலுத்தும் அமெரிக்கர்களுக்கு இது நியாயமற்றது. இதற்கு அப்பால் ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தகத்தில் நாம் 151 பில்லியன் டொலர்களை இழக்கிறோம். எம்மீது பெரும் இறக்குமதி வரிகள் விதிக்கப்படுகின்றன” என்றும் ட்ரம்ப் வெளியிட்ட ட்விட்டில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே டிரம்ப் நாளாந்தம் ஐரோப்பாவை சாடி ட்விட் அனுப்புவதாக ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்ட் டஸ்க் குற்றம் சாட்டியுள்ளார். “அன்புக்குரிய அமெரிக்காவே நீங்கள் இல்லை என்றபோதும் உங்களது நட்பை பாராட்டுகிறோம்” என்று அவர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பாவை விடவும் அமெரிக்காவுக்கு சிறந்த நட்பு இல்லை இருக்க முடியாது. 2001 செப்டெம்பர் 11 அமெரிக்க தாக்குதலுக்கு பின்னர் ஆப்கானிஸ்தானில் ஐரோப்பிய துருப்புகளும் போர் புரிந்து உயிர் நீத்துள்ளன என்பதை டிரம்ப் ஞாபகத்தி வைத்துக் கொள்ளவும் என்று டொனால்ட் டஸ்க் மேலும் கூறியிருந்தார்.

இந்நிலையில் நேட்டோ உறுப்பு நாடுகள் 2024 இல் தமது பாதுகாப்பு செலவை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 வீதமாக அதிகரிக்க 2014இல் செய்த வாக்குறுதியை அமுல்படுத்துவதற்கு டிரம்ப் இந்த மாநாட்டில் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் பிரிட்டன், கிரேக்கம், லத்வியா, எஸ்டோனியா, போலந்து, லிதுவேனியா மற்றும் ருமேனியா ஆகிய ஏழு நாடுகளே 2018இல் 2.0 சதவீத வெலவு இலக்கை எட்டி இருப்பதாக வெளியிடப்பட்டிருக்கும் புதிய ஆவணம் ஒன்று உறுதி செய்துள்ளது.

அதேபோன்று நேட்டோவின் அடிப்படை சரத்துகளில் ஒன்றான, ஒரு உறுப்பு நாட்டின் மீது தாக்குதல் தொடுத்தால் அனைத்து உறுப்பு நாடுகள் மீதும் தாக்குதல் தொடுத்ததாகும் என்ற பிரிவு 5ஐ மறுபரிசீலனை செய்வது குறித்தும் டிரம்ப் அவதானம் செலுத்தி இருப்பதாக நேட்டோவுக்கான அமெரிக்க தூதுவர் பெய்லி செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

வட அத்லாண்டிக் ஒப்பந்த அமைப்பான நேட்டே சோவியட் ஒன்றிய அச்சுறுத்தலுக்கு முகம்கொடுக்க 1949 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு இராணுவ கூட்டணியாகும்.


Add new comment

Or log in with...