1st Test - SLvSA: இலங்கை நாணய சுழற்சியில் வெற்றி (UPDATE) | தினகரன்

1st Test - SLvSA: இலங்கை நாணய சுழற்சியில் வெற்றி (UPDATE)

1st Test - SLvSA: இலங்கை நாணய சுழற்சியில் வெற்றி (UPDATE)-1st Test SLvSA-Toss-Chandimal-Hathurusinghe-Gurusinghe Out of Test

 

  • சந்திமால், ஹத்துருசிங்க, குருசிங்கவுக்கு இரு போட்டி தடை
  • சுரங்க லக்மால் தலைமையில் இலங்கை அணி

இலங்கை தென்னாபிரிக்க அணிகள் மோதும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (12) ஆரம்பமானது.

இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இத்தொடருக்கு, இலங்கை அணியின் தலைவராக சுரங்க லக்மால் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தில் விளையாடிய இலங்கை அணி மீது பந்தை சேதப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை அடுத்து, இலங்கை அணி களத்தடுப்பில் ஈடுபட மறுத்தமையானது போட்டியின் உயிரோட்டத்தை பாதித்துள்ளதாக, இலங்கை அணி மீது ஒழுக்காற்று விசாரணைகள் இடம்பெற்றது.

1st Test - SLvSA: இலங்கை நாணய சுழற்சியில் வெற்றி (UPDATE)-1st Test SLvSA-Toss-Chandimal-Hathurusinghe-Gurusinghe Out of Test

இந்நிலையில் குறித்த விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும் அது தொடர்பான முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளதாகவும் சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. அதற்கமைய, இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால், பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங்க, முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகியோர் தவறிழைத்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த மூவருக்கும் 4 இற்கும் அதிக மறை புள்ளிகள் வழங்கப்படலாம் எனவும், அவர்களுக்கு ஆகக் குறைந்தது இரு போட்டிகளில் பங்குபற்ற தடை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (11) புதன்கிழமை 6.00 மணியளவில், ICC யின் நீதித்துறை ஆணையாளர் மைக்கல் பெலோப்பின் (Michel Beloff) தலைமையில் இடம்பெற்ற குறித்த விசாரணைகள், 5 மணித்தியாலங்களுக்கும் அதிகமாக நீடித்தது.

அதற்கமைய, தற்போது ஆரம்பமாகியுள்ள தென்னாபிரிக்க தொடரில், சந்திமால், ஹத்துருசிங்க, குருசிங்க ஆகியோர் பங்குபற்றப்போவதில்லை என அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதன் முதலில் மொரட்டுவை டிரோன் பெர்னாண்டோ மைதானத்தில் 1993 ஆம் ஆண்டே இலங்கை - தென்னாபிரிக்க டெஸ்ட் தொடர் ஆரம்பமானது. 25 வருட டெஸ்ட் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 14 போட்டிகளில் தென்னாபிரிக்க அணியும் 5 போட்டிகளில் இலங்கை அணியும் வெற்றி பெற்றுள்ளதுடன் 6 போட்டிகள் சமநிலையில் முடிவடைந்துள்ளது.  

கடைசியாக இலங்கை மண்ணில் கடந்த 2014ம் ஆண்டு இலங்கை வந்த தென்னாபிரிக்க அணி தொடரை 1 - 0 என்ற கணக்கில் கைப்பற்றியதுள்ளதுடன் இரு அணிகளுக்குமிடையில் கடைசியாக 2017-/18 பருவ காலத்தில் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில் 3 – 0 என்ற கண்ணில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றது. இலங்கை – தென்னாபிரிக்க டெஸ்ட் வரலாற்றில் தென்னாபிரிக்கவே முன்னணியில் திகழ்கின்றது.  

வேகப்பந்து வீச்சுக்கே முக்கியத்துவம் கொடுக்கும் தென்னாபகிரிக்க அணி இம்முறையும் பலம்வாய்ந்த வேகப்பந்து அணியுடனேயே இலங்கை அணியைச் சந்திக்கவிருக்கின்றது. காயம் காரணமாக நீண்டகாலமாக ஓய்விலிருந்த முதல்தர வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்ரேய்னும் இவ்வணியில் இணைந்துள்ளார். இவருடன் ரபாடா, பிலாண்டர் இணைந்துள்ளதால் இலங்கை அணி துடுப்பாட்ட வீரர்களுக்கு நெருக்கடி அதிகமாகவே இருக்கும். வேகப்பந்து வீச்சு மட்டுமல்ல பயிற்சிப் போட்டியின் போது தென்னாபிரிக்க சுழற்பந்து வீச்சாளர் சம்சி கூட இலங்கை துடுப்பாட்ட வீரர்களுக்கு அச்சுறுத்தலாகப் பந்து வீசி 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார். இவருடன் அவ்வணியின் நிரந்தர சுழற்பற்து வீச்சாரான கேஷல் மகராஜும் இணைந்துகொண்டால் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இலங்கை மண்ணில் அவ்வணி சாதிக்க அதிக வாய்ப்புள்ளது. 

துடுப்பாட்டத்தைப் பொறுத்தவரையில் மிக நீண்ட துடுப்பாட்ட வரிசையைக் கொண்ட தென்னாபிரிக்க அணியின் நங்கூரமாகக் கருதப்படும் ஹசிம் ஹம்லா பயிற்சிப் போட்டியின் போதும் சிறப்பாகத் துடுப்பெடுத்ததாடியிருந்தார். இவருடன் தலைவர் டு பிளேஸி, எட்கர், மாக்ராம், குண்டன் டி கொக் போன்றவர்களும் இலங்கை பந்து வீச்சாளர்களுக்கு அச்சுத்தலாக இருப்பர். 

இலங்கை அணியைப் பொறுத்தவரையில் அண்மையில் நடைபெற்ற மேற்கிந்தியத தீவுகளுக்கு எதிரான தொடரில் முதலாவது போட்டியில் தோல்வியடைந்திருந்தாலும் இரண்டாவது போட்டியில் மீண்டெழுந்து சிறப்பாக வெற்றி பெற்றிருந்தனர். அத்தொடரின் போது இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான லஹிரு குமார, சுரங்க லக்மால் சிறப்பாக பந்து வீசியிருந்தார்கள். மேலும் இத்தொடரில் ரங்கன ஹேரத்தின் பங்களிப்பையே பெரிதும் நம்பியுள்ளது இலங்கை அணி. காலி மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானதால் இலங்கை அணிக்கு ரங்கன ஹேரத்தின் பந்து வீச்சு கைகொடுக்கும் என எதிர்பாரக்கலாம்.

இவருக்குத் துணையாக சுழல் பந்து வீச்சாளர் டில்ருவன் பெரோவும் சிறப்பாகப் பந்து வீச்சினால் தென்னாபிரிக்க துடுப்பாட்ட வீரர்கள் காலி மைதானத்தில் பெரும் நெருக்கடியைச் சந்திப்பர். 

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தைப் பொறுத்தவரையில் தலைவர் சந்திமால் சிறந்த நிலையிலேயே உள்ளார். ( ஐ. சி. சி. யின் ஒழுங்காற்று நடவடிக்கை காரணமாக இவர் இன்றைய போட்டியில் விளையாடுவாரா என்பதை இன்றே அறியலாம்) அவருடன் குசல் மெண்டிஸ், குசல் ஜனித் பெரேராவும், அடிக்கடி காயத்துக்குள்ளாகும் அஞ்சலோ மெத்தியூசும்,

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாநாயக்கவும் துடுப்பாட்டத்தில் கைகொடுத்தால் சிறந்த ஒரு போட்டியாக இன்றைய டெஸ்ட் போட்டி அமையும். இரு அணிகளும் சமபல அணியாக இருந்தாலும். இரு நாடுகளுக்கிடையிலான டெஸ்ட் வரலாற்றைப் பார்ப்போமாயின் தென்னாபிரிக்க அணியின் கையே ஓங்கியுள்ளது. என்றாலும் சொந்த மண்ணில் தொடர் நடைபெறுவதால் இலங்கை அணிக்கு சற்று அனுகூலமாக இத் தொடர் அமையலாம்.


Add new comment

Or log in with...