பிரான்ஸ் - குரோஷியா பிபா கிண்ண இறுதிப் போட்டிக்கு | தினகரன்

பிரான்ஸ் - குரோஷியா பிபா கிண்ண இறுதிப் போட்டிக்கு

பிரான்ஸ் - குரோஷியா பிபா கிண்ண இறுதிப் போட்டிக்கு-France-Croatia to FIFA WC 2018 Final

 

பிபா உலக கிண்ணம் 2018 தொடரின் இறுதிப்போட்டிக்கு குரோஷியா மற்றும் பிரான்ஸ் அணிகள் தெரிவாகியுள்ளன.

நேற்று (11) இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், 2 - 1 என இங்கிலாந்து அணியை வீழ்த்திய குரோஷியா இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய போட்டியில் 05 ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து முதல் கோலை அடித்த நிலையில் பதிலுக்கு குரோஷியா எந்தவொரு கோலையும் அடிக்க முடியாத நிலையில் முதல் பாதி நிறைவடைந்தது.

அந்த வகையில் 0 - 1 என முதல் பாதி நிறைவடைந்தது.

இதனையடுத்து இரண்டாம் பாதியின் 68' ஆவது நிமிடத்தில் குரோஷியா அணி முதலாவது கோலை அடித்து போட்டியை சமனிலைக்கு கொண்டு வந்நது.

அதன் பின்னர் இரு அணிகளும் எவ்வித கோலையும் அடிக்காத நிலையில் 1-1 என இரண்டாம் பாதி நிறைவடைந்ததையடுத்து, மேலதிக நேரம் வழங்கப்பட்டது.

இதனையடுத்து, மேலதிக நேரத்தின் போது குரோஷியா அணி மிக இலாவகமாக மற்றொரு கோலை (109') அடித்ததன் மூலம் போட்டியை தன்வசம் திருப்பிக் கொண்டது.

120+5' நிமிடம் வரை நீடித்த குறித்த போட்டி 2 - 1 என நிறைவடைந்தது.

அதற்கமைய, குரோஷியா அணி, பிபா உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு தெரிவானது.

1998 ஆம் ஆண்டு பிபா உலக கிண்ணத்தின் அரையிறுதி வரை முன்னேறிய குரோஷியா அணி, முதல் முறையாக பிபா உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு தெரிவானமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இடம்பெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில், பெல்ஜியத்தை 1 - 0 என வென்ற பிரான்ஸ் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1998 ஆம் ஆண்டு பிபா உலக கிண்ணத்தை கைப்பற்றிய பிரான்ஸ் அணி, 2006 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் தோல்வியுற்று இரண்டாம் இடத்தை பிடித்துக் கொண்டதோடு, அவ்வணி இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் மூன்றாவது சந்தர்ப்பம் (1998, 2006, 2018) இதுவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய எதிர்வரும் சனிக்கிழமை (14) மூன்றாவது மற்றும் நான்காவது அணிகள் மோதும் போட்டியில் பெல்ஜியம் - இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன. இதில் மூன்றாவது அணி எது என தீர்மானிக்கப்படும்.

பிபா உலக கிண்ணம் 2018 இன் இறுதிப்போட்டி, பிரான்ஸ் - குரோஷியா அணிகளுக்கிடையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெறவுள்ளது.

 


Add new comment

Or log in with...