ஜுவண்டஸுடன் இணைந்தார் ரொனால்டோ | தினகரன்

ஜுவண்டஸுடன் இணைந்தார் ரொனால்டோ

ரியெல் மெட்ரிட் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ நான்காவது மிக விலை உயர்ந்த வீரர் என்ற பெருமையுடன் ஜுவண்டஸ் கழகத்தில் இணைந்துள்ளார்.

இந்த இரு கழகங்களுக்கும் இடையில் 112 மில்லியன் யூரோ (சுமார் 20 பில்லியன் ரூபாய்) பெறுமதியான ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டிருக்கின்றது. இதன்மூலம் போர்த்துக்கல்லைச் சேர்ந்த முன்கள வீரரான ரொனால்டோ இத்தாலி சம்பியன் அணியுடன் நான்கு ஆண்டுகள் ஒப்பந்தமாகியுள்ளார்.

ஒன்பது ஆண்டுகள் ரியெல் மெட்ரிட்டில் ஆடிய 33 வயதுடைய ரொனால்டோ நான்கு சம்பியன்ஸ் லீக் கிண்ணங்களை வென்றுள்ளார்.

‘எனது வாழ்வில் புதிய நிலை ஒன்றை ஆரம்பிப்பதற்கு நேரம் வந்து விட்டது, அதனாலேயே என்னை பரிமாற்றம் செய்யும்படி கழகத்தை கேட்டுக்கொண்டேன்‘ என்று ரொனால்டோ அறிவித்துள்ளார்.

உலகின் மிக விலை உயர்ந்த வீரராக பிரேசில் முன்கள வீரர் நெய்மார் கடந்த ஆண்டு ஓகஸ்டில் பார்சிலோனா கழகத்தில் இருந்து பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கழகத்திற்கு 222 மில்லியன் யூரோவுக்கு ஒப்பந்தமானார். அதேபோன்று, பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கழகத்திற்காக சோபித்த பிரான்ஸ் முன்கள வீரர் கைலியன் ம்பாப்பே இரண்டாவது அதிக தொகையாக கடந்த மாதம் அந்த கழகத்தில் 180 மில்லியன் யூரோவுக்கு நிரந்தர ஒப்பந்தமானார்.

பிரேசில் மத்தியகள வீரர் பிலிப் கோடின்ஹோவை பார்சிலோனா கழகம் கடந்த ஜனவரியில் 142 மில்லியன் யூரோவுக்கு ஒப்பந்தம் செய்தது.

ரொனால்டோவின் பரிமாற்றம் குறித்த அறிவிப்பை ஐரோப்பாவின் இரு பிரமாண்ட கழகங்களும் செவ்வாய்க்கிழமை (10) வெளியிட்டன.

ஐந்து முறை உலகின் சிறந்த வீரர் விருதை வென்ற ரொனால்டோ 2008 ஆம் ஆண்டு மன்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து அப்போதைய மிகப்பெரிய தொகையான 106 மில்லியன் டொலர்களுக்கு ரியெல் மெட்ரிட்டில் ஒப்பந்தமானார்.

அது தொடக்கம் அவர் ஸ்பெயின் கழகத்திற்காக அனைத்து போட்டிகளிலும் 451 கோல்களுடன் அதிக கோல்கள் பெற்றவராக பதிவானதோடு இரண்டு லா லிகா பட்டங்கள் மற்றும் நான்கு சம்பியன்ஸ் லீக் பட்டங்களை அந்த கழகத்திற்காக வென்று கொடுத்துள்ளார்.

சம்பியன்ஸ் லீக்கில் கடந்த ஆறு பருவங்களில் அதிக கோல் பெற்றவராக இருந்து வருபவரும் நடப்பு பல்லோன் டிஓர் வெற்றியாளருமான ரொனால்டோவை தன்னகப்படுத்திக் கொண்டிருப்பது இத்தாலி கழகத்தின் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

ஜுவண்டஸ் அணி 2012 தொடக்கம் இத்தாலியின் பலம்மிக்க கழகமாக இருந்து வருகின்றபோதும் 1996 தொடக்கம் அந்த அணியால் ஐரோப்பாவின் உயரிய பட்டத்தை வெல்ல முடியவில்லை.

இதன்படி ஸ்பெயினின் பிரதான தொடரான லா லிகா நெய்மாரை அடுத்து இரண்டாவது உலக நட்சத்திர வீரரையும் இழந்துள்ளது.

சம்பியன்ஸ் லீக்கில் அதிக கோல் பெற்றவரான ரொனால்டோவுக்கு விடைகொடுக்கும் வகையில் ரியெல் மெட்ரிட் தனது இணையதளத்தில் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்த வீரர் பரிமாற்றத்திற்கு ரொனால்டோ கேட்டுக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளது.

‘உலகக் கால்பந்திலும் எமது கழக வரலாற்றிலும் மிகச் சிறப்பான ஒரு யுகத்தை தந்து உலகில் மிகச் சிறந்தவர் என நிரூபித்த வீரர் ஒருவருக்கு ரியல் மெட்ரிட் இன்று தனது நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறது‘ என்று அந்த கழகம் குறிப்பிட்டுள்ளது.

ஐரோப்பிய பிரீமியர் லீக்கில் ஆதிக்கம் செலுத்தியபோதும் ரியல் மெட்ரிட் உள்நாட்டு தொடரில் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. கடந்த லா லிகா பருவத்தில் சம்பியனான பார்சிலோனாவை விடவும் அந்த அணி 17 புள்ளிகள் பின்தங்கியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 33 தடவைகள் லா லிகா கிண்ணத்தை வென்றிருக்கும் ரியல் மெட்ரிட் அதன் புதிய முகாமையாளர் ஜூலன் லொபடிபுயின் கீழ் மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்பட வேண்டி உள்ளது.


Add new comment

Or log in with...