மரணதண்டனை மீண்டும் அமுல் | தினகரன்

மரணதண்டனை மீண்டும் அமுல்

* ஆவணத்தில் ஒப்பமிடப்போவதாக ஜனாதிபதி மைத்திரி அறிவிப்பு
* போதைப் பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய கைதிகளுக்கு தண்டனையை நிறைவேற்ற முடிவு

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்டிருக்கும் நிலையிலும் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபட்டுள்ள சிறைக் கைதிகளுக்கு மரணதண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதி என்ற வகையில் தான் கைச்சாத்திடவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்தார்.

பௌத்த சமூகம் என்ற வகையில் மரணதண்டனை குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றபோதும் உலகில் எந்தவொரு நாட்டிலும் இல்லாத வகையில் உபதேசங்களை நிகழ்த்தியும் உபதேசங்களை செவிமடுத்தும் வருகின்ற ஒரு சமூகம் இந்தளவுக்கு பிழையான வழிகளில் செல்லுமாக இருந்தால் அதனை கட்டுப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய தீர்மானங்களை உரிய நேரத்தில் எடுக்க வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

கண்டி கெட்டம்பே விளையாட்டரங்கில் நேற்று (11) நடைபெற்ற ”போதைப்பொருளுக்கு எதிரான பாடசாலையின் பலம்” என்ற நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். பாடசாலை பிள்ளைகளை போதைப்பொருளிலிருந்து விடுவிப்பதற்காக தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்ததாக கல்வி அமைச்சும் போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியும் இணைந்து இந் நிகழ்ச்சித்திட்டத்தை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தி வருகின்றன.

எதிர்த்தரப்பு அரசியல்வாதிகள் எத்தகைய குற்றச்சாட்டுக்களை முன் வைத்தபோதிலும் கடந்த மூன்றரை வருட காலப்பகுதியில் நாட்டில் கொலை மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்கள் குறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். 2008ஆம் ஆண்டு முதல் கடந்த 10 வருடக் காலப்பகுதியில் இடம்பெற்ற மனிதக் கொலைகள் தொடர்பாக நேற்றைய தினம் தேசிய பாதுகாப்பு சபைக்கு முன்வைக்கப்பட்ட அறிக்கையை சுட்டிக் காட்டி கருத்து தெரிவித்த ஜனாதிபதி, தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் கொலை மற்றும் குற்றச் செயல்கள் அதிகரித்திருப்பதாக சில ஊடகங்கள் முன்வைக்கும் தவறான ஊடக அறிக்கைகளை சில அரசியல்வாதிகள் தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்திகொள்வதாக தெரிவித்தார்.

எவ்வாறானபோதும் கொலை மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பதற்கு போதைப்பொருளைப் போன்று சமூக வலைத்தளங்களும் இன்று முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த நிலைமைகளில் இருந்து பிள்ளைகளை பாதுகாப்பதற்காக அரசாங்கமும் பெற்றோரும் முக்கிய கவனம் செலுத்த வேண்டுமென தெரிவித்தார்.

போதைப்பொருளிலிருந்து விடுதலைப்பெற்ற சிறந்ததோர் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக முன்னெடுக்கப்பட்டுவரும் நிகழ்ச்சித்திட்டங்களில் பாடசாலை பிள்ளைகளுக்கு அறிவூட்டி அவர்களை சமூகத்திற்கு முக்கிய தூதுவர்களாக மாற்ற வேண்டுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் வெற்றிக்காக விசேட பங்களிப்புகளை வழங்கிய அரச அதிகாரிகளை கௌரவித்து ஜனாதிபதி அவர்களினால் விருதுகள் மற்றும் பரிசில்கள் வழங்கப்பட்டன.

பேராதனை பல்கலைக்கழகத்தின் வாய்ப்புற்று நோய் பிரிவின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் உபுல் திசாநாயக்கவிடம் ஜனாதிபதியினால் 20 இலட்சம் ரூபா வழங்கப்பட்டது.

நான் நீண்டகாலமாக சிகரட் மற்றும் புகையிலை தொடர்பாக பேசிவந்தேன். இன்று புகையிலை விற்பனையில் வீழச்சி காணப்படுகிறது. எனவே பாவனையும் குறைந்துள்ளது.

ஆனால் புகைத்தல் குறைந்துள்ளது என நாம் மகிழ்ச்சியடைய முடியாது. அதனை விடப் பயங்கரமான மர்ஜூவானா, அசிஸ், ஹெரோயின், மாவா எனப் பலபேர்களில் மிகப் பயங்கர போதைப் பொருள்கள் பாவனைக்கு வந்துள்ளன. பின்வரும் புள்ளி விபரம் அதனை காட்டுகிறது.

இலங்கையைப் பொறுத்தவரை நூற்றுக்கு 14 சதவீதம் மதுப் பாவனையை மேற்கொள்கின்றனர். அதே நேரம், நூற்றுக்கு 18 சதவீதம் சிகரட் பாவனையில் ஈடுபடுகின்றனர். 1 முதல் 2 சதவீதம் மர்ஜூவானா, அசீஸ், கொக்கைன், ஹெரோயின் போன்ற போதைப் பொருளுக்கு இலக்காகி உள்ளனர்.

எனவே 100 பேரில் 14 பேர் மது பாவிப்பது என்பதோ, நூறு பேரில் 18 பேர் சிகரட் பாவிப்பது என்பதோ ஒப்பீட்டு ரீதியில் பெரிய தொகை இல்லை எனக் கொண்டாலும் கூட 100 பேரில் ஒருவன் போதைக்கு அடிமை என்றால் முழு சமூகத்தையும் அழித்து ஒழிக்க அது போதுமானதாகும். இந்த ஒருவன் எல்லாக் குற்றங்களுக்கும் போதுமானதாகும். எனவே போதைப் பொருள் பாவனை அல்லது தூள் பாவனை 2 சதவீத்திலும் குறைவு என்பது பாரிய ஒரு எண்ணிக்கையாகும். மேற்படி பாரிய அபாயத்திலிருந்து மாணவர்களையும் இளைய தலைமுறையையும் மீட்டெடுப்பது மிக முக்கிய மாகும்.

நாம் இது தொடர்பான சுற்றறிக்கையொன்றை 2015இல் வெளியிட்டோம். பின்னர் இவ்வருடம் ஜூலை 6ம் திகதி மேலும் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டோம். 2015 மற்றும் இவ்வருட ஜூலை மாதம் 6ம் திகதி சுற்றறிக்கை என்பன தொடர்பாக அதிகாரிகளின் கவனம் தேவைப் படுகிறது.

எமது அரசியல் எதிரிகள் நாம் ஆட்சிக்கு வந்த பின் கொலைகள், கற்பழிப்பு களவு முதலான குற்றச் செயல்கள் அதிகம் என்கின்றனர். உண்மையிலே அது குறைந்துள்ளது. அதனை பின்வரும் புள்ளி விபரம் மூலம் தரமுடியும். இதனை எதிர்க்கவோ சவாலுக்கு உட்படுத்தவோ முடியாது. ஏனெனில் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் பொலிஸ் மா அதிபர் சமர்பித்த அறிக்கையாகும்.

2008 முதல் புள்ளி விபரம் என்னிடம் உள்ளது. அவற்றுச் சில

வருடம் - கொலைகள்
2008
- 1378
2010 - 741
2013 - 586
2014 - 548
2015 - 476
2017 - 452

மேலே காட்டப்பட்ட 90 சதவீத வீதமான குற்றங்களுக்கு போதையே பின்னணியில் உள்ளது என்பது அறியப்பட்ட உண்மையாகும். அதே போல் பெண்கள் மீதான வன்புணர்வு தொடாபான புள்ளி விபரமும் உள்ளது. அதனையும் தருகிறேன்

வருடம் - கற்பழிப்புகள்

2012 - 2212
2014 - 2008
2016 - 1996
2017 - 1732
2018 - 714 (06 மாதம்)

இதன் மூலம், நாம் அறிவது கடந்த மூன்றரை வருடங்களில் கொலை, கற்பழிப்பு என்பன ஒப்பீட்டு ரீதியாக குறைந்துள்ளது. ஆனால் ஊடகங்கள் அதனைப் பெரிது படுத்தியுள்ளன.

சில இணையங்கள் மற்றும் போதை பாவனை என்பனவே இப்படியான குற்றங்களுக்கு அதிக பங்களிப்பு செய்துள்ளன.

போதை தொடர்பாக புனருத்தாபனம் செய்யும் நிறுவனங்கள் விசேடமாக டொக்டர்கள் கூறுவது என்னவென்றால் மதுவை விட இணையங்களே கூடுதலான பாதிப்பை செலுத்தியுள்ளதாகக் கூறுகின்றனர். மன நிலை பாதிப்புக்கு அவை முக்கிய காரணியாக உள்ளன. சமூக வலை தளங்கள் கூடுதல் பாதிப்பு செலுத்துகிறது. நண்பர்கள் இணைந்து ஒரு பேஸ்புக் குறூப்பை அமைக்கின்றனர். நண்பர்களளை ஓரிடத்திற்கு அழைக்கின்றர். அங்கு ஒன்றிணைந்து சிகரட், மது போதை, போன்றவற்றைப் பாவிக்கின்றனர். இதனை குற்றங்களுக்கு அழைப்பதாகவே கருத வேண்டும்.

மாணவர்களைப் பாதுகாப்பதற்கு நடக்கும் இந்த அமர்விற்கு ஏன் பாடசாலை மாணவர்களை குறைத்து பெற்றோர்களையும் வளர்ந்தவர்களையும் அதிகமாக அழைத்தோம் என யோசித்தீர்களா? அரச அதிகாரிகள் சுமார் 3,000 அளவில் இங்குள்ளனர்.

18 வீதமான புகைப்பவர்கள் அல்லது 14 வீதம் போதைப் பொருள் பாவிப்போர் மேற்சொன்ன 3,000 பேரில் இருக்கவேண்டும். அவர்கள் இந்த இடத்தில் இருக்க வேண்டும். வளர்ந்தவர்களை திருத்த முடியாது என்றும் எனவே மாணவர்களையாவது திருத்துவோம் என்று நேற்றுப் பேசப்பட்டது.

ஆனால் பெற்றோர்களையும் திருத்த வேண்டியுள்ளது. குறிப்பாக சிறுவர்களது குறைகளை அல்லது குற்றச் செல்கள் பற்றி பெற்றோரே தெளிவு படுத்த வேண்டியுள்ளது. அதே நேரம் அவர்களது பாடசாலைகளும் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு குழுமியுள்ள அரச அதிகாரிகள் முன் சொன்ன 14 அல்லது 18 வீதமான பட்டியலில் இருந்து நீக்கிக் கொள்ள சிந்திக்க வேண்டும்.

பெற்றோரின் முன்மாதிரி பிள்ளைகளுக்கு மிக முக்கியம். பிள்ளைகள் சமூகத்தில் தகவல் வழங்கும் முக்கிய உறுப்பினர்களாகும். ஏனெனில் பிள்ளைகளின் வேண்டுகோளை அனேகர் கேட்பதுண்டு. மறுப்பதில்லை.

கடந்த காலங்களில் போதைப் பொருள் சட்டத்திற்கு உட்பட்டு குற்றவாளியாகி மரண தன்டனை பெற்றவர்கள் சிறையில் உள்ளனர். அந்த மரண தண்டனைக் கைதிகள் சிறையிலிலருந்து போதை வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர். மரண தன்டனை பற்றி உயிர்களைக் கொள்வது பற்றி பௌத்தர் என்ற வகையில் வாத விவாதம் இருக்கலாம். மரண தன்டனைக்கு ஜனாதிபதியே கையொப்பமிட வேண்டும்.

நான் பாவம் செய்ய விரும்பவில்லை. எனினும் எதிர்காலச் சந்ததியினரின் நன்மை கருதி போதையிலிருந்து நாட்டை மீட்பதற்கு மரண தன்டனைக்கு நான் கையெழுத்திடவுள்ளேன். இல்லாவிடில் நாட்டை திருத்த முடியாது. ஏற்கனவே உள்ள தண்டனையின் அளவு போதாது.

காலையிலிருந்து மாலை வரை (பன) பௌத்த போதனை சொல்லும் நாடு இலங்கையைப் போல் வேறு எங்கும் இல்லை. இருந்தும் நிலைமை இப்படி உள்ளது. சுற்றாடல் பாதுகாப்பு, சிறு நீரக பாதுகாப்பு, போதையற்ற சமூகம் என்பனவற்றை உருவாக்க முற்பட்டுள்ளோம். உங்கள் ஆதரவு எமக்குத் தேவை என்றும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

அமைச்சர்கள் லக்ஷ்மன் கிரியெல்ல, லக்கி ஜயவர்த்தன, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, ஜனக்க பண்டார தென்னகோன், பந்துல யாலேகம, கண்டி மாவட்ட அரசியல் பிரதிநிதிகள், கண்டி மாவட்ட செயலாளர் எம்.பி.ஹிட்டிசேக்கர உள்ளிட்ட மாவட்ட அரசாங்க அதிகாரிகள், பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புத்துறை முக்கியஸ்தர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், கிராமத்தை கட்டியெழுப்புவோம் கிராமிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 1,188 கிராம சேவைப் பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 6,000த்திற்கும் மேற்பட்டவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

எம்.ஏ.அமீனுல்லா


Add new comment

Or log in with...