19 பேருக்கு மரணதண்டனை வழங்க அமைச்சரவை முடிவு | தினகரன்

19 பேருக்கு மரணதண்டனை வழங்க அமைச்சரவை முடிவு

நீதியமைச்சிடம் கோப்புக்களை கோரியுள்ளதாக ராஜித தகவல்

பாரியளவிலான போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புள்ள 19 பேருக்கு மரண தண்டனை வழங்குவதற்கு அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இவர்களின் கோப்புகள் நீதி அமைச்சிடம் கோரப்பட்டுள்ளதோடு அவை கிடைத்ததும் தான் உடனடியாக அதில் கையொப்பமிடுவதாக ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்ததாக இணை அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

பாரிய அளவிலான போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புள்ளவர்கள் சிறையில் இருந்தவாறு போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்துள்ளதாக குறிப்பிட்ட அவர் போதைப்பொருள் தொடர்பில் தண்டனை வழங்கப்பட்டு இரண்டாவது தடவையும் அதே செயலலில் ஈடுபடுபவர்களின் மரணதண்டனையை உடன் நிறைவேற்ற ஜனாதிபதி உடன்பாடு தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில், போதைப் பொருள் கடத்துலுடன் தொடர்புள்ளவர்களுக்கு மரணதண்டனை விதிக்கும் முடிவு குறித்து வினவப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் ராஜித, இது தொடர்பான யோசனையை ஜனாதிபதி முன்வைத்தார். அதற்கு சகல அமைச்சர்களும் ஆதரவு தெரிவித்தார்கள். நான் கொள்கை ரீதியில் மரண தண்டனையை எதிர்ப்பவன். மரண தண்டனையினூடாக குற்றச் சொயல்களை தடுக்க முடியாது.

பாரியளவில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புள்ள நபர்கள் தொடர்பில் அமைச்சரவையில் ஆராயப்பட்டது. இவர்களில் யார் யார் தண்டனை அனுபவிக்கின்றனர். வெளியில் இருப்பவர்கள் யார் என்பன தொடர்பில் நீதி அமைச்சின் அறிக்கை கோரப்பட்டுள்ளது.

1976 முதல் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதில்லை. நீதிமன்றம் மரண தண்டனை தீர்ப்பு வழங்கினாலும் ஜனாதிபதி அதில் கையொப்பமிடுவதில்லை. நீதி அமைச்சரின் பட்டியல் கிடைத்ததும் உடனடியாக மரண தண்டனை அமுல்படுத்தப்படும்.

பிலிபைன்ஸ் ,பிரேசில் போன்ற நாடுகளில் அதிகளவு போதைப்பொருள் கடத்தல் இடம்பெறுகிறது. பாரிய மாபியா இவற்றின் பின்னணியில் இருக்கிறது. அங்கு படையினர் பயன்படுத்தி போதைப்பொருள் மாபியாபை தடுக்க முயற்சி நடைபெறுகிறது. ஆனால் அவற்றை கட்டுப்படுத்த முடியாதுள்ளது.

இதே வேளை போதை பொருளை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸ் விசேட அதிரடி படை மற்றும் இராணுவத்தின் ஒத்துழைப்பை பெறப்படுகின்றது. போதை பொருள் நடவடிக்கைகளை மிகவும் வெற்றிகரமாக முறியடிப்பதற்கு முப்படையின் நேரடியான பங்களிப்பை ஆக கூடுதலாக பெற்றுக்கொள்வதன் தேவை உணரப்பட்டுள்ளது. இதற்கமைவாக போதைப்பொருள் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் பணியை மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்வதற்காக குறிப்பிட்ட காலப்பகுதிக்கு முப்படையினரை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஷம்ஸ் பாஹிம்


Add new comment

Or log in with...