தென்ஆபிரிக்க டெஸ்ட் தொடர்: இலங்கை அணிக்கு சவாலாக இருக்குமா? | தினகரன்

தென்ஆபிரிக்க டெஸ்ட் தொடர்: இலங்கை அணிக்கு சவாலாக இருக்குமா?

எஸ்.எம்.அறூஸ்

கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் தென்ஆபிரிக்க கிரிக்கெட் அணி இலங்கை அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், ஐந்து ஒருநாள் போட்டிளிலும், ஒரு ரி−20 போட்டியிலும் விளையாடவுள்ளது.

அதிலும் இரண்டு டெஸ்ட் போட்டித் தொடர் நாளை காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் இலங்கை அணியின் பெறுபேறுகள் நல்ல நிலையில் இல்லாதபோதும் அண்மையில் நிறைவு பெற்ற மேற்கிந்தியத்தீவுகள் தொடரில் முதலாவது போட்டியில் தோல்வியடைந்தபோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சவால் மிக்கதான வெற்றியை பெற்றதன் மூலம் இலங்கை அணிக்கு பெரும் தெம்மை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் தென் ஆபிரிக்க அணியுடனான சவால் மிக்க டெஸ்ட் தொடரை இலங்கை அணி நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவுள்ளது. மேற்கிந்தியத்தீவுகளுக்கெதிரான தொடரில் இரண்டாவது போட்டியில் விளையாடாமல் நாடு திரும்பிய அஞ்சலோ மெத்தியுஸ் மற்றும் காயத்தினால் தொடரில் முழுமையாக இடம்பெற்றிராத திமுத் கருணாரத்ன இருவரும் அணிக்கு திரும்பியிருப்பது இன்னும் பலம் சேர்த்திருப்பதாக நம்பலாம்.

குறிப்பாக காலி சர்வதேச மைதானம் இலங்கைக்கு ராசியான மைதானம் என்று கூட அழைக்கப்படுவதுண்டு. அந்த மைதானத்தில் இதுவரை 17 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணி வெற்றி பெற்றிருக்கின்றது. தென் ஆபிரிக்க அணி ஒரு டெஸ்ட் போட்டியில் இம்மைதானத்தில் வென்றுள்ளது.

இலங்கை தென்ஆபிரிக்க கிரிக்கெட் தொடர்கள் சர்வதேச அளவில் பேசப்படுகின்ற ஒரு தொடராகக் காணப்படுகின்றது.

தென்ஆபிரிக்க அணியிலும், இலங்கை அணியிலும் உலகின் மிகச்சிறந்த வீரர்கள் கடந்த காலங்களில் விளையாடியிருந்தனர்.

இலங்கை அணியில் அர்ஜூன ரணதுங்க, அரவிந்த டி சில்வா, சனத் ஜெயசூரிய, மஹேல ஜெயவர்த்தன, குமார் சங்கக்கார, மார்வன் அத்தப்பத்து, ஹசான் திலகரத்ன, சமிந்த வாஸ், முத்தையா முரளிதரன், லசித் மாலிங்க மற்றும் இன்னும் பல வீரர்கள் இடம்பெற்று விளையாடியிருந்தனர்.

அதேபோன்று தென்ஆபிரிக்க அணியில் கெப்லர் வெசல்ஸ், டெரல் கலினன், ஜெக்கப் கலீஸ், அன்ட்று ஹட்சன், கென்ஸி குரோஞ், ஸ்மித்,மெக் மில்லன், ஜொன்டி ரோஸ்ட்ஸ்,சோன் பொலக், அலன் டொனால்ட், பிரட் சூல்ஸ், குளுஸ்னர், மகாயா நிட்னி மற்றும் இன்னும் பல வீரர்களும் இடம்பெற்று விளையாடியிருந்தனர்.

வேகப்பந்துவீச்சில் தென்ஆபிரிக்க அணியும், சூழல் பந்துவீச்சில் இலங்கை அணியும் தங்களது உச்ச திறமையை வெளிக்காட்டி ரசிகர்களுக்கு சிறந்த போட்டிகளை வழங்கினர்.

தென்ஆபிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சாளராக செயல்பட்ட பிரட் சூல்ட்ஸ் இலங்கை வீரர்கள் சிலரின் கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வந்தவர் என்று கூட சொல்லலாம். குறிப்பாக இன்றைய இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க, ரொசான் மகாநாம போன்றவர்களை தொடரில் குறைந்த ஓட்டங்களுக்குள் ஆட்டமிழக்கச் செய்திருந்தார்.

இவ்வாறான உலகப் புகழ்பெற்ற வீரர்கள் விளையாடிய இலங்கை தென்ஆபிரிக்க டெஸ்ட் தொடர் இம்முறையும் களை கட்டும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

இலங்கை அணியில் தினேஸ் சந்திமால், அஞ்சலோ மெத்தியுஸ், குசால் மென்டிஸ், ரொசேன் சில்வா, திமுத் கருணாரத்ன, குசல் பெரேரா, லஹிறு குமார,சுரங்க லக்மால், ரங்கன ஹேரத் போன்ற சிறந்த வீரர்களும், தென்ஆபிரிக்க அணியில் டு பிளஸ்ஸிஸ், ஹாஸிம் அம்லா, குயிண்டன், டெல் ஸ்டெயின்,டெம்பா குயிமா,தப்ரெஸ் சம்ஸி போன்ற சிறந்த வீரர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதால் போட்டியின் விறுவிறுப்பை ரசிகர்கள் காணலாம்.

1993ம் ஆண்டு கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டு முதன் முதலாக இலங்கைக்கு வருகை தந்த தென் ஆபிரிக்க அணி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இதில் முதலாவது போட்டி மொரட்டுவ டிரோன் பெர்னாண்டோ மைதானத்தில் நடைபெற்றது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 331 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. தென்ஆபிரிக்க கிரிக்கெட் அணி முதலாவது இன்னிங்ஸில் 267 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் முரளிதரன் 104 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்களைக் கைப்பற்றினார். இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி 6 விக்கட்டுக்களை இழந்து 300 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட நிலையில் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது. இதில் அணித்தலைவர் அர்ஜூன ரணதுங்க வேகமாக துடுப்பெடுத்தாடி 131 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

வெற்றி பெறுவதற்கு 365 ஓட்டங்களைப் பெறத் துடுப்பெடுத்தாடிய தென்ஆபிரிக்க கிரிக்கெட் அணி ஒரு கட்டத்தில் 199 ஓட்டங்களுக்கு 7 விக்கட்டுக்களை இழந்திருந்தது. 2016 மற்றும் 2017 கிரிக்கெட் பருவகாலத்திற்காக தென்ஆபிரிக்கா சென்ற இலங்கை அணி அங்கு மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இதில் மூன்று போட்டிகளிலும் தென் ஆபிரிக்க அணி வெற்றி பெற்றதுடன் இலங்கை அணி படுதோல்வியினை அடைந்தது.

தென் ஆபிரிக்க மண்ணில் அடைந்த தோல்விக்கு இலங்கை அணி சொந்த மண்ணில் 2018 இல் பதிலடி கொடுக்குமா? என்ற கேள்வி உள்ளது. சொந்த நாட்டில் நடைபெறுவதால் இலங்கை அணி உற்சாத்துடன் விளையாடலாம் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துறுசிங்கவின் வழிநடத்தலிலும், பயிற்சியிலும் இலங்கை அணிக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடியளவில் இருப்பதாகவே ஊடகங்கள் கருத்து வெளியிடுகின்றது. இலங்கை அணியின் அண்மைக்கால சரிவை ஈடு செய்வதற்கு தென்ஆபிரிக்க அணிக்கெதிரான இந்தத் தொடர் மிக முக்கியமாகவுள்ளது.

இதுவரை இலங்கை தென்ஆபிரிக்க அணிகளுக்கிடையில் 25 டெஸ்ட் போட்டிகள் இடம்பெற்றுள்ளது. இதில் 14 போட்டிகளில் தென் ஆபிரிக்க அணியும், 5 போட்டிகளில் இலங்கை அணியும் வெற்றி பெற்றுள்ளனர். 6 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளது.

இலங்கை தென்ஆபிரிக்க அணிகளுக்கிடையில் இடம்பெற்றுள்ள டெஸ்ட் போட்டிகளில் இலங்கை சார்பாக மஹேல ஜெயவர்த்தன 1782 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். தென் ஆபிரிக்க அணி சார்பாக டெரல் கலினன் 917 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

பந்துவீச்சில் இலங்கை சார்பாக முத்தையா முரளிதரன் 104 விக்கட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார். தென் ஆபிரிக்க அணியின் சார்பாக சோன் பொலக் 48 விக்கட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார்.

காலி சர்வதேச மைதானத்தில் நாளை இடம்பெறும் போட்டி இலங்கை அணியின் மீள் எழுச்சிக்கு வழிசமைக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.


Add new comment

Or log in with...