Friday, March 29, 2024
Home » கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் மீளஆரம்பம்

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் மீளஆரம்பம்

by damith
November 21, 2023 10:55 am 0 comment

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் நேற்று மீள ஆரம்பிக்கப்பட்டன.

கடந்த செப்டெம்பர் மாதம் 06 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு செப்டெம்பர்​ 15 வரை இடம்பெற்ற அகழ்வு நடவடிக்கைகளின் போது 17 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டதுடன் துப்பாக்கி சன்னங்கள், விடுதலைப் புலிகள் அமைப்பினர் பயன்படுத்தும் இலக்க தகடு, உடைகள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களும் மீட்கப்பட்டன. இந்நிலையில் நேற்றையதினம் மீண்டும் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவ, தடயவியல் பொலிஸார், கிராம சேவையாளர் ஆகியோரின் பங்கேற்புடன் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன.

புதைகுழிக்குள் நீர் தேங்காதவாறு போடப்பட்டுள்ள கொட்டகையானது மேலும் 10 அடிக்கு நீட்டப்பட்டுள்ளது. இம்முறை அகழ்வுப் பணிகளின் போது ராடர் என்ற கருவியை பயன்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் இதன்மூலம் புதைகுழியின் தூரத்தை அடையாளப்படுத்தி கொள்ளக் கூடியதாகவிருக்கும் என முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவ தெரிவித்தார்.

மேலும் நீதிமன்ற கூற்றுப்படி 2.5 மில்லியன் வரையிலான நிதி இருப்பதாகவும் இது இரண்டு வார அகழ்வுப் பணி மற்றும் ஏனைய பணிகளை மேற்கொள்ள போதுமானதாகவிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதியின் வடக்கு அபிவிருத்திக்கு பொறுப்பான மேலதிக செயலாளர் எல். இளங்கோவன், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்

க.கனகேஸ்வரன், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் பணிப்பாளர்

தற்பரன், சட்டத்தரணிகளான வி.கே.நிறஞ்சன், கு.ஆன்சுமங்கலா மற்றும் கொக்குளாய் பொலிஸ் நிலைய பொலிஸார், தடயவியல் பொலிஸ் பொலிஸார், விஷேட அதிரடி படையினர், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் உள்ளிட்ட தரப்பினர் இடத்தை பார்வையிட்டு கலந்துரையாடியதன் பின்னர் அகழ்வுப்பணி ஆரம்பமானது.

ஓமந்தை விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT