துயரமும் திகிலும் நிறைந்த தாய்லாந்தின் இரு வாரங்கள் | தினகரன்

துயரமும் திகிலும் நிறைந்த தாய்லாந்தின் இரு வாரங்கள்

தாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளரை மீட்கும் அபாயகரமான பணியினை கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கிய மீட்புப் பணியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை 4 சிறுவர்களையும், திங்கட்கிழமை நான்கு சிறுவர்களையும் பாதுகாப்பாக மீட்டு வந்தனர். மீதம் உள்ள சிறுவர்களை மீட்கும் பணி நேற்று செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.

தேர்ச்சி பெற்ற இரண்டு சுழியோடி வீரர்கள் ஒவ்வொரு சிறுவருடனும் நீந்தி, நீரில் மூழ்கிய கடினமான குகைப்பாதையைக் கடந்து சிறுவர்களை அழைத்து வந்தனர்.

இதுவரை நடந்தது என்ன?

தாய்லாந்தில் சுமார் 10 கி.மீ. நீளமுள்ள ஆழமான தாம் லுவாங் மலைக்குகைக்கு ஜூன் 23-ம் திகதி சாகசப் பயணம் மேற்கொண்ட 12 பேர் கொண்ட சிறுவர் கால்பந்து அணியும் அவர்களது பயிற்சியாளரும் குகையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.

குகைக்கு வெளியே அவர்கள் நிறுத்தியிருந்த சைக்கிள்கள் கேட்பாரற்றுக் கிடந்ததைப் பார்த்து யாரோ குகைக்குள் சிக்கிக் கொண்டதை அறிந்து கொண்ட அதிகாரிகள், அரசை உஷார்படுத்தியதை அடுத்து அவர்களைத் தேடும் பணி அன்றிரவே தொடங்கியது.

அவர்கள் உள்ளே சென்றிருந்த நிலையில், திடீரெனப் பெய்த பெருமழையும், அதையடுத்து குகைக்குள் பாய்ந்த காட்டு வெள்ளமும் குகையின் வெளியேறும் வாயில்களை அடைத்துக் கொண்டதால், இந்த 13 பேர் அணி, ஒதுங்குவதற்கு சற்று மேடான இடத்தைத் தேடி குகைக்குள் பின்னோக்கிச் சென்றது.

வெள்ளம் சூழ்ந்த, ஆழமான, சிக்கலான பாதைகளை உடைய அந்தக் குகையில் சிக்கிக் கொண்ட கால்பந்து அணியைக் கண்டுபிடிப்பது சவாலாக இருந்தது.

இந்த விவகாரம் சர்வதேசக் கவனத்தைப் பெற்றது. பிரிட்டிஷ் குகை மீட்பு வல்லுநர்கள் உட்பட, உலகின் பல நாடுகளைச் சேர்ந்த சுழியோடும் வீரர்களும், குகை மீட்பு வீரர்களும் தாய்லாந்தில் குவிந்தனர்.

9 நாள் போராட்டத்துக்குப் பிறகு, ஜூலை 2-ம் திகதி பிரிட்டிஷ் குகை மீட்பு வீரர்கள் சிறுவர்களையும், அவர்களின் பயிற்சியாளரையும் குகை வாயிலில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் ஒரு பாறை இடுக்கில் உயிருடன் கண்டுபிடித்தனர்.

இந்தக் குகை அமைப்பு ஒரு மலையின் அடிப்புறத்தில் அமைந்துள்ளது. மலையின் உச்சியில் இருந்து சிறுவர்கள் சிக்கியுள்ள இடம் 800 மீட்டர் ஆழத்தில், அதாவது முக்கால் கிலோமீட்டருக்கும் கூடுதலான ஆழத்தில் இருந்தது.

சிறுவர்களோடு பிரிட்டிஷ் குகை மீட்பு வீரர்கள் நிகழ்த்திய உரையாடல் அடங்கிய வீடியோ பதிவு ஒன்றும் வெளியானது, எல்லோருக்கும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தந்தது. எனினும், குகையில் வெள்ளம் சூழ்ந்திருப்பதால் ஒன்று சிறுவர்கள் சுழியோடக் கற்றுக் கொண்டு வெள்ளம் சூழ்ந்த குகையை நீந்திக் கடக்க வேண்டும் அல்லது வெள்ளம் வடியும் வரை சுமார் 4 மாதம் குகையிலேயே காத்திருக்க வேண்டும் என்று தாய்லாந்து இராணுவம் அறிவித்தது.

அப்போதுதான் மீட்புப் பணி அவ்வளவு எளிதாக இருக்கப் போவதில்லை என்பதை உலகம் உணர்ந்தது.

ஒருபுறம் குகையில் இருந்த தண்ணீரை மோட்டார் வைத்து இறைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. மறுபுறம் குகையின் ஆழத்தில் சிக்கிக் கொண்ட சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளருக்கு உணவு, மருந்து, ஒக்சிஜன் சிலிண்டர் ஆகியவற்றை விநியோகம் செய்யும் பணியை தேர்ச்சி பெற்ற வீரர்கள் மேற்கொண்டனர்.

நான்கு மாதமும் இப்படியே உணவும் மருந்தும் விநியோகம் செய்து அவர்களை காத்திருக்கச் செய்யலாம் என்று முதலில் கருதப்பட்டது. ஆனால், ஒவ்வொரு முறை ஒரு வீரர் குகைக்குள் சென்று திரும்புவது மிகக் கடினமான, ஆபத்தான, பல மணி நேரம் பிடிக்கும் பயணமாக இருந்தது.

சிக்கிக் கொண்ட சிறுவர்களும், பயிற்சியாளரும் குகையில் இருந்து எழுதி அனுப்பிய கடிதங்கள் மனதை உருக்கின.

தாய்லாந்து கடற்படையின் தேர்ச்சி பெற்ற சுழியோடி வீரர் சமன் குனன் குகையில் சிக்கிய சிறுவர்களுக்கு ஒக்சிஜன் உருளையை கொடுத்து விட்டுத் திரும்பி வரும் வழியில் அவருக்கு ஒக்சிஜன் தீர்ந்துபோனதால் ஜூலை 6-ம் திகதி உயிரிழந்தார்.

இது மீட்புக் குழுவை அதிர்ச்சி அடைய வைத்ததோடு, இது எவ்வளவு ஆபத்தான பணி என்பதையும் காட்டியது. அத்துடன், முன்னரே திட்டமிட்டபடி சில மாதங்கள் காத்திருப்பதில் ஒரு சிக்கலும் ஏற்பட்டது. தாய்லாந்தில் சில நாட்களில் கடும் மழை எதிர்பார்க்கப்பட்டதால், இந்தக் குகை மேலும் வெள்ளமயமாகும் அபாயம் என்று மீட்புக் குழு அஞ்சியது. இதனால், ஆபத்தான வழி என்றாலும், சிறுவர்களை போதிய பாதுகாப்பு உடையோடு சுழியோட வைத்து, மீட்பது என்று முடிவெடுத்தனர்.

குகையின் உட் பகுதி சில இடங்களில் 33 அடி உயரம் வரை இருந்தாலும், சில இடங்கள் மிகவும் குறுகலானவை. மீட்புப் பணியாளர்கள் தங்கள் காற்று உருளையையோடு அந்த இடங்களை நீந்திக் கடப்பது கடினம். எனவே, அவர்கள் தங்கள் உருளையை கழற்றி எடுத்துக் கொண்டுதான் அந்த இடங்களைக் கடக்க முடியும்.

இந்நிலையில் ஒவ்வொரு சிறுவரோடும் இரண்டு முக்குளிக்கும் வீரர்கள் உடன் வரும்வகையில் மீட்பு திட்டமிடப்பட்டது. மீட்பு வீரர்களுக்கு வழிகாட்டுவதற்காக ஏற்கெனவே மீட்புப் பாதை நெடுக ஒரு கயிறு போடப்பட்டுள்ளது. அதன் வழியாக இரண்டு மீட்பு வீரர்களும் ஒரு சிறுவரும் நீந்திக் கடக்கும் வகையில் திட்டமிடப்பட்டது.

சிறுவனின் காற்றுக் குடுவையை ஒரு மீட்பு வீரர் சுமந்து வருவார். ஒரு வீரரோடு, மீட்கப்படும் ஒரு சிறுவன் கயிற்றால் இணைக்கப்பட்டிருப்பான். மீட்கப்படும் சிறுவர்களின் முழு முகத்தையும் மூடும் வகையில் மூச்சுக் கவசம் பொருத்தப்படும். இது போதிய பயிற்சி இல்லாத சிறுவர்கள் முக்குளித்து நீந்த உதவியாக இருக்கும்.

ஆனால் மீட்புப் பாதை என்பது வெறும் நீந்தும் வகையில் மட்டும் இல்லை. நடப்பது, பாறை ஏறுவது, சேற்றில் நடப்பது போன்றவற்றையும் அவர்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். சேம்பர் 'சி' என்ற இடத்தை அடைந்த பிறகு அவர்கள் ஓய்வெடுத்துவிட்டு நடந்தே வந்துவிடலாம். அந்த இடத்தில்தான் மீட்புப் பணியாளர்கள் முகாம் அமைத்துள்ளனர்.

குகைக்குள் சிறுவர்கள் சிக்கியுள்ள இடத்தில் காற்றில் ஒக்சிஜன் வீதம் வீழ்வது அச்சுறுத்துவதாக இருந்தது. சாதாரணமாக காற்றில் 21 சதவீத ஒக்சிஜன் இருக்கவேண்டும். ஆனால், குகைக்குள் 15 சதவீதம் வரை ஒக்சிஜன் அளவு வீழ்ந்தது. எனவே, மீட்புப் பணியாளர்கள் இதுவரை நூறு ஒக்சிஜன் உருளைகளை சிறுவர்கள் சிக்கியுள்ள இடத்துக்கு கடும் இடர்பாடுகளுக்கு இடையில் கொண்டு சென்றுள்ளனர்.

தாயின் மகிழ்ச்சி:

"நான் அவன் பெயரைக் கேட்டேன்... மொங்கோல் என்றான். அதுவே நான் மகிழ்ச்சி அடைவதற்குப் போதுமானதாக இருந்தது" என்று குகையிலிருந்து மீட்கப்பட்ட ஒரு சிறுவனின் தாய் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

"அவனை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார்கள். அதனைத் தொடர்ந்தே அவனை நான் பார்க்க முடிந்தது. அவன் சிறுவயதிலிருந்து கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கிறான். அவனுக்கு சைக்கிள் ஓட்டுவது, நீச்சல் ஆகியவை பிடிக்கும். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவன் இந்தப் போராட்டத்தில் வெற்றி பெறுவான்" என்றும் தாயார் தெரிவித்தார். இதனிடையே மீட்கப்பட்ட சிறுவர்கள் அனைவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களது உடல் நிலை தேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தாய்லாந்து பிரதமர் நரோங் சக்கோ சட்டனாக்கோன், சம்பவ இடத்துக்குச் சென்று தனது ஆதரவை தெரிவித்ததோடு, அங்கிருந்த சர்வதேச சுழியோடி வீர்ர்கள், தன்னார்வலர்கள், மற்றும் மீட்புப் பணியாளர்களை சந்தித்து பேசினார்."அனைவரும் இதை ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார்.

குகையில் சிக்கியிருந்த மாணவர்கள் சிலர் பயின்ற பாடசாலையின் மாணவர்களிடம், அவர்கள் நண்பர்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.மீட்புப் பணி வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்றும், அனைத்து சிறுவர்களும் பத்திரமாக வெளியே வரவேண்டும் என்றும் அவர்கள் பிரார்த்தனைகளை மேற்கொண்டனர். மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு பாடசாலையில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என்று சிறுவர்கள் பயின்ற பாடசாலையின் முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும், மாணவர்களுக்கு மனரீதியான ஆதரவு வழங்கப்படும் என்றும், அவர்கள் பிற மாணவர்களை போன்றே நடத்தப்படுவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். "ஆனால் நடந்தவைக்காக அவர்கள் மீது குற்றம் சுமத்தமாட்டோம்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குகையில் இருக்கும் சிறுவர்களின் குடும்பத்துக்கு மரியாதை வழங்கும் விதமாக மீட்கப்பட்ட சிறுவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.


Add new comment

Or log in with...