போதைவஸ்து வர்த்தகத்தில் ஈடுபட்டால் மரண தண்டனை | தினகரன்

போதைவஸ்து வர்த்தகத்தில் ஈடுபட்டால் மரண தண்டனை

பாதாளக் குழுக்களை கட்டுப்படுத்த பொலிஸாருக்கு விசேட அதிகாரங்கள்

அமைச்சர் மத்தும பண்டார

பாதாளக்குழுக்களின் செயற்பாடுகள் உக்கிரமடைந்துள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சட்டம், ஒழுங்கு மற்றும் பொது நிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.

பாதாளக்குழுக்களைக் கட்டுப்படுத்த உடனடியாக இராணுவத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக தெரிவித்த அமைச்சர் பொலிசாருக்கு அதற்கான விசேட அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அண்மைக்காலமாக கொழும்பிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் பாதாளக் குழுவினரின் நடவடிக்கைகள் உக்கிரமடைந்துள்ள நிலையில் குற்றச்சாட்டில் மரணதண்டனை தீர்ப்புக்குள்ளாக்கப்பட்ட இவர்களும் மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்

என தமக்கு பெரும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக நேற்றைய அமைச்சரவையில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு நேர்ந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதன்போது அமைச்சரவையில் அமைச்சர்கள் தமது கைகளை உயர்த்தி அதற்கான தமது அங்கீகாரத்தை வெளிப்படுத்தியுள்ளதாகத் தெரியவருகிறது.

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டு சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்துவரும் போதைவஸ்து வர்த்தகர்களின் பெயர் விபரங்களை உள்ளடக்கிய முழுமையான அறிக்கையொன்றை தமக்கு சமர்ப்பிக்க வேண்டுமென அதன்போது நீதியமைச்சர் தலதா அத்துகோரளவுக்கு ஜனாதிபதி பணிப்புரையொன்றை வழங்கியுள்ளார்.

இதன்போது போதைப்பொருள் குற்றங்களின் பேரில் பத்தொன்பது நபர்களின் தகவல்கள் தமக்குக் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் குற்றங்களுக்காக குற்றவாளியாக்கப்பட்டு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள போதைப்பொருள் வர்த்தகர்கள் ஹெரோயின் உள்ளிட்ட போதைபொருள் வர்த்தகத்தை மேற்கொள்வதாக தமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாக இதன்போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மரண தண்டனையை நடைமுறைப்படுத்த தமக்கு விருப்பமில்லாத போதும் போதைபொருளிலிருந்து சமூகத்தைப் பாதுகாப்பதற்காக அதனை நிறைவேற்ற நேர்ந்துள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

பாதாளக் குழுக்களை....

அது தொடர்பில் விசேட நடவடிக்கைகள் ஏதும் முன்னெடுக்கப்பட்டுள்ளதா என அமைச்சரிடம் வினவிய போது:

ஆம். விசேட நடவடிக்கைகள் பல முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்தோடு பாதாளக் குழுக்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸாருக்கு விசேட அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அண்மைக்காலங்களில் பலர் கைது செய்யப்பட்டுமுள்ளனர்.

அண்மைய கால சம்பவங்களை நோக்கும்போது 75 வீத மரணங்கள் பாதாள குழுக்கள் சம்பந்தப்பட்டவர்களிடையே நிகழ்ந்துள்ளன. பாதாளக் குழுக்களே ஒருவரையொருவர் தாக்கிக் கொள்கின்றனர். இந்த வாரத்தில் ஏற்பட்டுள்ள துப்பாக்கிச் சூட்டு மரணங்களும் அவ்வாறானவையே.

பாதாளக் குழுக்களின் செயற்பாடுகள் புதிதல்ல. அது தொடர்ந்து இடம்பெறும் பிரச்சினையாகும். அதனைக் கடடுப்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளையும் செயல் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகிறது.

இராணுவத்தினரை உபயோகித்து பாதாளக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கமுள்ளதா? என அமைச்சரிடம் வினவிய போது அவ்வாறான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவில்லை எனினும் இராணுவத்தினர் மட்டுமல்ல எந்த வழியிலாவது பாதாள உலகக் குழுக்களை கட்டுப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

அவசரகால சட்டம் நடைமுறையிலிருந்தால் மட்டுமே இவ்வாறான செயற்பாடுகளில் இராணுவத்தினரை பயன்படுத்த முடியும். இப்போது நாட்டில் அவசரகாலச் சட்டம் நடைமுறையிலில்லை. எனினும் இராணுவத்தை பயன்படுத்தியாவது பாதாளக் குழுக்களை கட்டுப்படுத்த முடியுமானால் நல்லது.

இவை சம்பந்தப்பட்ட சட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்தி எதிர்காலத்தில் அவ்வாறு செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை நேற்றைய தினம் இராணுவத்தளபதி மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்புத்துறை உயரதிகாரிகளுடன் அமைச்சர் மத்தும பண்டார பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

அமைச்சரவையிலும் நேற்று இது தொடர்பில் ஆராயப்பட்டு பாதாளக் குழுக்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் கடுமையான சட்டங்களை பிரயோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

(ஸ)

 


Add new comment

Or log in with...