சிறைக் கைதிகளின் பாதுகாப்புக்கு பொலிஸ், இராணுவம் | தினகரன்

சிறைக் கைதிகளின் பாதுகாப்புக்கு பொலிஸ், இராணுவம்

லக்ஷ்மி பரசுராமன்

அதிகரித்து வரும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள குழுக்களின் செயற்பாடுகளை ஒழிக்கும் நோக்கில் சிறைக் கைதிகளின் பாதுகாப்பை பொலிஸ் அல்லது இராணுவத்திடம் ஒப்படைப்பது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக சட்டம் ஒழுங்கு பிரதியமைச்சர் நளின் பண்டார நேற்று தெரிவித்தார்.

இதனடிப்படையில் சிறைச்சாலைகள் சட்டத்தை கடுமையாக்குவது தொடர்பில் தற்போது சட்டம் ஒழுங்கு அமைச்சு நீதி அமைச்சுடன் இணைந்து கலந்தாலோசிப்பதாகவும் அவர் கூறினார்.

அண்மைகாலமாக அதிகரித்து வரும் பாரிய போதைப் பொருள் கடத்தல் மற்றும் பாதாள குழுவுடன் தொடர்புபட்ட அனைத்து கொலைகளும் சிறைச்சாலைக்குள்ளிருந்தே செயற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை முற்றாக ஒழிப்பது தொடர்பில் பல யோசனைகளை முன்வைத்துள்ளோம். எமக்கு சிறிது கால அவகாசம் தாருங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

சிறிகொத்தவில் நேற்று காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதியமைச்சர் நளின் பண்டார இவ்வாறு தெரிவித்தார்.

புள்ளிவிபரங்களின்படி வருடாந்த குற்றச் செயல்களின் எண்ணிக்கை பெரும் வீழ்ச்சியைக் காட்டினாலும் அண்மைக் காலமாக குற்றச் செயல்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பை உணரமுடிவதாக சுட்டிக்காட்டிய பிரதியமைச்சர் கொலைகள் 80 சதவீதத்திலிருந்து 90 சதவீதமாக அதிகரித்திருப்பதாகவும் கூறினார்.

எவ்வாறாயினும் இவற்றுள் அநேகமானவை தனிப்பட்ட குடும்ப தகராறுகள் காரணமாகவும் ஏனையவை சட்டவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபடுவோரிடையே உருவாகும் வைராக்கியம் மற்றும் முரண்பாடுகள் காரணமாகவே இடம்பெற்றிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாதாள குழுக்களின் செயற்பாடுகளும் போதைப் பொருள் கடத்தல் வியாபாரங்களும் சிறைச்சாலைக்குள்ளிருந்தே முன்னெடுக்கப்படுகின்றன. தற்போது 40 பாதாள குழுத் தலைவர்கள் சிறையில் உள்ளனர். அதன் காரணமாகவே இதன் ஒழிப்பு வேலைதிட்டத்தை சிறைச்சாலைகளிலிருந்து ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

அண்மையில் கைப்பற்றப்பட்ட ஒரு கோடியே 125 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருள் வியாபாரம் சிறைச்சாலைக்குள்ளிருந்தே முன்னெடுக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் வெளியே இருப்பதிலும் பார்க்க சிறைச்சாலைக்குள்ளேயே சுதந்திரமாக செயற்படுகிறார்கள். நடைமுறையிலுள்ள சட்டத்தையும் மீறி கைதிகள் போதைப் பொருள் பாவனை, தொடர்பாடல் வசதிகள் மற்றும் சட்டவிரோதச் செயற்பாடுகளை திட்டமிடல் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுக்கிறார்கள். சாதாரண குற்றத்துக்காக சிறைக்கு செல்லும் ஒருவர் ஐந்து மாதங்களின் பின்னர் வெளியே வரும்போது தன்னுடன் மேலும் பலரை கூட்டு சேர்த்துக் கொண்டு பாரிய கோஷ்டியாகவே வெளியே வருகின்றார்.

இந்நிலைமை தொடராமல் இருக்க வேண்டுமாயின் சிறைக்கைதிகளின் பாதுகாப்பு சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் மேலதிகமாக பொலிஸாரிடமோ அல்லது இராணுவத்திடமோ வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் ஏற்கனவே இவ்வாறான குற்றங்களில் ஈடுபட்டவர்களை தனிமைப்படுத்தி வைத்தல், பிரித்து வைத்தல், பணபரிமாற்றம் மற்றும் தொடர்பாடல் வசதிகளை தடை செய்தல் உள்ளிட்ட யோசனைகளை உள்வாங்குவதன் மூலம் சிறைச்சாலைகள் சட்டத்தை கடுமையாக்குவது தொடர்பில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் மத்தும பண்டாரவும் தானும் நீதியமைச்சர் தலதா அத்துகோரளவுடன் கலந்துரையாடி வருவதாகவும் அவர் கூறினார்.

போதைப்பொருள் கடத்தல் இந்த அரசாங்கத்தில் மட்டும் இடம்பெற்று வரும் புதிய விடயமல்ல. கடந்த ஆட்சியில் இவை அரசாங்கத்தின் அனுமதியுடனேயே இடம்பெற்றன. தற்போது அவ்வாறு இல்லை என்பது மட்டுமே வித்தியாசம். என்னைப் பொறுத்தவரை எமது அரசாங்கத்துக்கு நல்ல காலம் கிட்டியுள்ளது என்றே நான் நினைக்கிறேன். புத்தர் மற்றும் ஐசெக் நியூற்றன் ஆகியோர் கூறியது போல் ஒவ்வொரு செயற்பாட்டுக்கும் பதில் தாக்கம் உண்டு. அதுபோன்றே தான் சமூக விரோதிகளால் சமூக விரோதிகள் கொல்லப்படுகிறார்கள். என்றாலும் எவரும் சட்டத்தை கையில் எடுப்பதற்கு நாம் எவருக்கும் அனுமதிக்க முடியாது என்றும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

 


Add new comment

Or log in with...