மும்பை மக்கள் மழை வெள்ளத்தில் ​தவிப்பு | தினகரன்

மும்பை மக்கள் மழை வெள்ளத்தில் ​தவிப்பு

மராட்டியத்தில் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் பெய்து வரும் கனமழை தொடர்ந்து நேற்று 5-வது நாளாக நீடித்தது. இதன் காரணமாக மும்பை மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்தார்கள். சுற்றுப்புற மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதக்கின்றன. மும்பை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களான தானே, ராய்காட், பால்கர் மாவட்டங்களில் இடைவிடாமல் கொட்டி வரும் மழை மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்டு உள்ளது. இந்த பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. நகர பகுதிகள் மற்றும் கிராமங்களில் பல இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. அந்த பகுதிகளை சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.

வீதிகள், தெருக்களிலும் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். மாநில தலைநகர் மும்பை வெள்ளத்தில் மிதக்கிறது. ரயில் நிலையங்களையும் வெள்ளம் சூழ்ந்தது. மாட்டுங்கா, சயான், கல்வா, தானே, நாலச்சோப்ரா, டோம்பிவிலி ரயில் நிலையங்களில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கின. மழை காரணமாக ரயில் மற்றும் சாலை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

 


Add new comment

Or log in with...