சட்டத்தை எவரும் தமது கையில் எடுக்கலாகாது | தினகரன்

சட்டத்தை எவரும் தமது கையில் எடுக்கலாகாது

நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கூட்டு எதிரணியினர் கடந்த சில தினங்களாக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக சட்டவிரோத துப்பாக்கி பாவனை, அவற்றின் பிரயோகம், அவற்றைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் படுகொலைகள்,அவற்றின் மூலம் மேற்கொள்ளப்படும் காயங்கள், வாள்வெட்டு சம்பவங்கள், அவற்றின் மூலமான காயங்கள் மற்றும் கேரள கஞ்சா, ஹெரொய்ன் போன்றவற்றின் வருகை, பாவனை, விற்பனை அவற்றோடு கைது செய்யப்படுபவர்கள் என்பவற்றை அடிப்படையாக வைத்து மஹிந்த அணியினர் இவ்விமர்சனங்களை மேற்கொள்கின்றனர்.

ஆனால் மஹிந்த அணியினர் இன்று நாட்டில் காணப்படும் சுதந்திர, ஜனநாயக சூழல் அன்று காணப்பட்டதா என்பதை திரும்பிப் பார்க்காதுதான் இவ்விமர்சனங்களை முன்னெடுக்கின்றனர். அன்று நாட்டில் சர்வாதிகார அடக்குமுறை ஆட்சி தான் காணப்பட்டது.அதனால் நாட்டு மக்கள் அச்சம் பீதியில்லாத சுதந்திர ஜனநாயக சூழலையே அன்று கோரினர்.

மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பதவிக்கு வந்த

நல்லாட்சி அரசாங்கம் சுதந்திர ஜனநாயக சூழலை நாட்டு மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்து அதனை உறுதிப்படுத்தியது. அதன் பயனாக நாட்டின் எந்தப் பிரதேசத்திற்கும் அச்சம் பீதியின்றி எவரும் எந்த வேளையிலும் சென்று வரக் கூடிய சுதந்திர ஜனநாயக சூழல் உருவாகியுள்ளது. இந்த ஜனநாயக சூழலை இந்நாட்டில் வாழும் சகல மக்களும் இன, மத பேதங்களுக்கு அப்பால் வரவேற்பதோடு அதனை உச்சளவிலும் அனுபவித்து வருகின்றார்கள். அத்தோடு 2015 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட யுகத்திற்கு மீண்டும் திரும்பிச் செல்லவும் அவர்கள் சிறிதளவேனும் விரும்பவில்லை. இது மறுக்க முடியாத உண்மை.

என்றாலும் நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ள இந்த சுதந்திர ஜனநாயக சூழலை விரல் விட்டெண்ணக் கூடிய சிலர் தவறான முறையில் பயன்படுத்தி சட்டம் ஒழுங்கு முரணான வகையில் செயற்பட முயற்சிக்கின்றனர். இதன் விளைவாகவே சட்டவிரோத துப்பாக்கி பிரயோகங்களும், அவற்றின் ஊடாக படுகொலைகளும், காயங்களும் அவ்வப்போது இடம்பெறுகின்றன. அந்த வகையில் தெஹிவளை-, கல்கிஸ்ஸை மாநகர சபை உறுப்பினர், காலி மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர், கொழும்பு மாநாகர சபை உறுப்பினர் மாத்திரமல்லாமல் மாத்தறை நகரில் நகைக்கடையொன்றில் கொள்ளையிட முயற்சி செய்த குழுவினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகொலை போன்றவாறான சம்பவங்கள் அண்மைக்காலத்தில் இடம்பெற்றுள்ளன. இவற்றை விடவும் வேறுபல இடங்களிலும் சட்டவிரோத துப்பாக்கிப் பிரயோக சம்பவங்களும் அவற்றின் ஊடாக காயங்களும் படுகொலைகளும் அண்மைக்காலத்தில் இடம்பெற்று இருக்கின்றன.

இவை ஒருபுறமிருக்க, வட மாகாணத்தின் யாழ் குடா நாட்டில் வாள் வெட்டு சம்பவங்கள் அவ்வப்போது இடம்பெறுகின்றன. அவற்றின் விளைவாகவும் பலர் கடுங்காயங்களுக்கு உள்ளாகி உள்ளனர்.

இவ்வாறு சட்டத்தை கையில் எடுத்த சம்பங்கள் இடம்பெற்று வருகின்ற அதேநேரம் கேரளா கஞ்சா, ஹெரொய்ன் உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருட்களின் வருகை மற்றும் அவற்றுடன் கைது செய்யப்படுபவர்களும் அதிகரித்துள்ளனர். -அத்தோடு ஹெரொய்ன் போன்ற போதைப்பொருட்களின் வருகையும் நாட்டில் அதிகரித்து காணப்படுகின்றது என்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இவை அனைத்துமே சட்டத்திற்கு முரணான சட்டவிரோத செயற்பாடுகள் என்பதில் இரண்டு கருத்திற்கு இடமில்லை.

நாட்டு மக்களின் நன்மை கருதி அரசாங்கம் பெற்று தந்துள்ள சுதந்திர ஜனநாயக சூழலை தவறாகவும் பிழையாகவும் ஒரு சிலர் பாவிக்க முயற்சி செய்வதை வைத்து கொண்டு நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக மஹிந்த அணியினர் காட்ட முயற்சி செய்வதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அதேநேரம் சிலர் செய்கின்ற காரியங்களினால் பொலிஸ் உள்ளிட்ட முழு பாதுகாப்பு துறையினதும் நற்பெயருக்கு களங்களம் ஏற்பட இடமளிக்கலாகாது. அதனால் எவரும் சட்டத்தை கையில் எடுக்க இடமிளிக்கக் கூடாது. இவ்விடயத்தில் பொலிஸாரும் பாதுகாப்பு தரப்பினரும் விஷேட கவனம் எடுத்து செயற்படுவது மிகவும் அவசியம். அப்போது தான் சட்ட விரோதமான செயற்பாடுகளை கட்டுபாட்டு நிலைக்குள் கொண்டு வரக்கூடியதாக இருக்கும்.

அதேநேரம் நாட்டு மக்களின் நன்மை கருதி பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள சுதந்திர ஜனநாயக சூழலை தவறாகப் பாவிப்பதால் அரசாங்கமும் பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினரும் முகம் கொடுத்து-ள்ள அசௌகரியங்களை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் பொறுப்பாகும். அதனால் சட்டம் ஒழுங்கை மதித்து அதற்கு ஏற்ப செயற்பட வேண்டியது இந்நாட்டு பிரஜைகளின் கடமையாகும். சட்டத்திற்கு முன்பாக சகலரும் சமமே.

ஆகவே சட்டத்திற்கு முரணான செயற்பாடுகளில் இருந்து தவிர்ந்து சட்டம் ஒழுங்கை மதித்து வாழ ஒவ்வொரு பிரஜையும் திடசங்கற்பம் பூண வேண்டும். அத்தோடு சட்டத்தை எவரும் கையில் எடுக்கவும் பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் இடமளிக்கவும் கூடாது. அதுவே நாட்டு மக்களின் எதிர்பாரப்பும் கூட.


Add new comment

Or log in with...