துருக்கியில் ரயில் தடம்புரண்டு 24 பேர் பலி: பலரும் காயம் | தினகரன்

துருக்கியில் ரயில் தடம்புரண்டு 24 பேர் பலி: பலரும் காயம்

வடமேற்கு துருக்கியில் ரயில் தடம்புரண்டு 24 பேர் உயிரிழந்ததோடு 70க்கும் அதிகமான பயணிகள் காயமடைந்துள்ளனர்.

360க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில், இஸ்தான்புல் நகருக்குச் சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டன. ரயிலிலிருந்து பயணிகளை மீட்கும் பணிகளில் துருக்கிய இராணுவம் உதவி வருகிறது. கனத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு, ரயில் தடம்புரண்டதற்குக் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

ரயில் விபத்து சம்பவத்தில் பலியானோர் குடும்பத்திற்கு ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். தொடர்ந்து காயம் அடைந்தவர்களை மீட்க ஹெலிகொப்டர் ஆம்புலன்ஸ் சேவை பயன்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமரின் அலுவலக செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.

துருக்கியில் ஏற்கனவே, 2008ஆம் ஆண்டு இஸ்தான்புல் அருகே நடந்த ஒரு ரயில் விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். அதேபோன்று துருக்கி வரலாற்றிலேயே மிக மோசமாக 2004ஆம் ஆண்டு ஜூலை மாதம் நிகழ்ந்த ரயில் விபத்தில் 41 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...