Thursday, March 28, 2024
Home » ஐ.சி.சி உலகக் கிண்ண கனவு அணியில் டில்ஷானுக்கு இடம்

ஐ.சி.சி உலகக் கிண்ண கனவு அணியில் டில்ஷானுக்கு இடம்

by damith
November 21, 2023 9:15 am 0 comment

உலகக் கிண்ணத்தில் சோபித்த வீரர்களைக் கொண்ட ஐ.சி.சி. கனவு அணியில் இலங்கை அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான் மதுஷங்கவும் இடம்பெற்றுள்ளார்.

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இந்தியாவில் நடைபெற்ற உலகக் கிண்ண தொடரில் நேற்று முன்தினம் (19) நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி ஆறாவது முறையாக கிண்ணத்தை கைப்பற்றியது.

இந்தத் தொடரில் திறமையை வெளிப்படுத்திய வீரர்களை உள்ளடக்கிய கனவு அணியை ஐ.சி.சி நேற்று வெளியிட்டது. இதில் கிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலியா, இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா, அரையிறுதியில் ஆடிய தென்னாபிரிக்கா, நியூசிலாந்துடன் இலங்கை வீரர் ஒருவரும் இடம்பெறுள்ளார்.

அவுஸ்திரேலியா உலகக் கிண்ணத்தை வெல்ல உதவிய சகல துறை வீரர் கிளென் மெக்ஸ்வெல் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் அடம் சம்பா ஆகியோர் அவுஸ்திரேலியாவில் இருந்து இந்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதிகபட்சமாக இந்தியாவில் இருந்து ஆறு வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். கே.எல் ராகுல், ரவிந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்பிரிட் பும்ராவுடன் தொடரில் அதிக ஓட்டங்களை பெற்று தொடர் நாயகன் விருதை வென்ற விராட் கொஹ்லி மற்றும் அதிக விக்கெட் வீழ்த்தி மொஹமட் ஷமி ஆகியோர் இடம்பெற்றனர்.

இந்திய அணித் தலைவர் ரோஹித் ஷர்மா ஐ.சி.சி கனவு அணிக்கு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய அணி இறுதிப் போட்டியில் தோற்றபோதும் லீக் போட்டிகள் அனைத்திலும் வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்காவின் குவன்டன் டி கொக் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரராக தெரிவு செய்யப்பட்டிருப்பதோடு, நியூசிலாந்தின் டரில் மிச்சலும் அணியில் இடம்பெற்றுள்ளார். தென்னாபிரிக்காவின் கெரல் கொட்ஸி 12ஆவது வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான் மதுஷங்க உலகக் கிண்ணத் தொடரில் மொத்தம் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் வரிசையில் முதல் ஐந்து இடங்களை பிடித்தார். அவர் தொடர் முழுவதும் புதுப்பந்தில் எதிரணி துடுப்பாட்ட வீரர்களுக்கு தொடர்ந்து சவால் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கனவு அணியை இயன் பிஷொப், காஸ் நைடூ, ஷேன் வொட்சன் (வர்ணனையாளர்), வசீம் கான் (ஐ.சி.சி. பொது முகாமையாளர், கிரிக்கெட்) மற்றும் சுனில் வாய்தா (ஊடகவியலாளர்) ஆகியோர் கொண்ட குழுவே தேர்வு செய்தது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT