முதலாவது அரை இறுதி ஆட்டம் இன்று | தினகரன்

முதலாவது அரை இறுதி ஆட்டம் இன்று

பிரான்ஸ− பெல்ஜியம் பலப்பரீட்சை

உலக கிண்ண கால்பந்து போட்டியின் முதலாவது அரை இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியும் பெல்ஜியம் அணியும் இன்று மோதுகின்றன.

21-வது உலக கிண்ண கால்பந்து போட்டி ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

1966-ம் ஆண்டு சம்பியனான இங்கிலாந்து, 1998-ம் ஆண்டு உலக கிண்ணத்தை வென்ற பிரான்ஸ், கிண்ணத்தை வெல்லாத பெல்ஜியம், குரோஷியா ஆகிய 4 அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

முதல் அரை இறுதி ஆட்டம் இன்று (10-ம் திகதி) நடக்கிறது. இரவு 11.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதில் பிரான்ஸ்-பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரான்ஸ் அணி 3-வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழையும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி 1998, 2006 ஆகிய ஆண்டுகளில் தகுதி பெற்று இருந்தது.

பெல்ஜியம் அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழையும் வேட்கையில் உள்ளது. 1986-ம் ஆண்டு உலக கிண்ணத்தில் 4-வது இடத்தை பிடித்ததே அந்த அணியின் சிறந்த நிலையாக இருக்கிறது. அந்த உலக கிண்ணத்தில் அரை இறுதியில் ஆர்ஜென்டினாவிடம் 0-2 என்ற கணக்கில் தோற்று இருந்தது.

உலக தர வரிசையில் 7-வது இடத்தில் பிரான்ஸ் அணி முன்களம், நடுகளம், பின்களம் ஆகியவற்றில் சமபலத்துடன் இருக்கிறது.

எம்பாப்வே, கிரீஸ்மேன், போக்பா, ஆலிவர் கிரவுட் போன்ற முன்னணி வீரர்கள் அந்த அணியின் முதுகெலும்பாக உள்ளனர்.

ஆர்ஜென்டினாவுக்கு எதிரான 2-வது சுற்று ஆட்டத்தில் 19 வயதான எம்பாப்வே சிறப்பாக ஆடி 2 கோல்களை பதிவு செய்தார்.


Add new comment

Or log in with...