நவோதயா மக்கள் முன்னணி தலைவர் சுட்டுக்கொலை | தினகரன்

நவோதயா மக்கள் முன்னணி தலைவர் சுட்டுக்கொலை

செட்டியார் தெரு பழக்கடைக்குள் ஆயுத தாரிகள் துணிகரம்

கொழும்பு புறக்கோட்டை செட்டியார்தெரு ஆதிவால் சந்திப் பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் நவோதயா மக்கள் முன்னணி கட்சியின் தலைவருமான கிருஷ்ணபிள்ளை கிருபானந்தன் (கிருஷ்ணா) உயிரிழந்துள்ளார்.

நேற்றுக் காலை 7.45 மணியளவில் கொழும்பு செட்டியார் தெரிவிலுள்ள ஆதிவால் சந்தியில் உள்ள பழக்கடை ஒன்றிற்குள் வைத்து இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு விட்டுத் தப்பிச்சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

40 வயதுடைய கிருஷ்ணபிள்ளை கிருபானந்தன் (கிருஷ்ணா) கொழும்பு மாநகர சபையின் சுயாதீனக் கட்சி உறுப்பினராவார். துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தையடுத்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே இவர் உயிரிழந்துள்ளார்.

நவோதயா மக்கள் முன்னணி கட்சியை ஆரம்பித்த அவர், 2011ஆம் ஆண்டு அக்கட்சியின் சார்பில் கொழும்பு மாநகரசபைக்குப் போட்டியிட்டார். கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற கொழும்பு மாநகரசபைக்கான தேர்தலில் சுயேச்சைக் குழுவின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். மாநகர சபைக்குப் போட்டியிட்டு தெரிவான ஒரேயொரு சுயேச்சைக் குழு உறுப்பினரும் இவராவார்.

புறக்கோட்டையில் வர்த்தக நிலையங்களை வைத்திருக்கும் இவர், கட்சியின் சார்பில் பல்வேறு பொதுப்பணிகளை ஆற்றிவந்தார். மதச்செயற்பாடுகளுக்கான உதவிகள், பாடசாலை மாணவர்கள், குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு சுயதொழில்ஊக்குவிப்பு போன்ற பல்வேறு உதவிகளை அவர் வழங்கிவந்தார்.

நேற்றுக்காலை அவருடைய கடைக்குள் வைத்து இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். இந்தச் சம்பவம் தொடர்பில் புறக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை நேற்றுமுன்தினம் கொழும்பு ஜெம்பட்டா வீதியில் இடம்பெற்ற பிறிதொரு துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டிருந்தனர்.(ஸ)

(லோரன்ஸ் செல்வநாயகம்)

 


Add new comment

Or log in with...