அமெரிக்காவின் குறுகிய பார்வையால் சிதறும் உலகம் | தினகரன்

அமெரிக்காவின் குறுகிய பார்வையால் சிதறும் உலகம்

'அனுபவ முதிர்வு இல்லாதவர்களின் பேச்சு பலனற்றது. தடை விதித்தால் பதில் நடவடிக்கை நிச்சயம்'

ஈரானுக்கெதிராக அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தவுடன் ஈரான் வெளியிட்ட பதிலடி இது.

ஈரான் நடத்திய ஏவுகணை சோதனை காரணமாக இப்பிராந்தியத்தில் உள்ள பிற அமெரிக்க நட்பு நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதோடு, உலகம் முழுவதற்கும் அமெரிக்காவுக்கும் அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. இதனால் ஈரானுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக இயக்குநர் ஜான் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

பொதுவாக பொருளாதாரத் தடைகளை ஒரு நாட்டின் மீது ஐக்கிய நாடுகள் சபைதான் விதிக்கும். ஆனால் இப்போது முதல் முறையாக ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடையை விதித்துள்ளது. அதுமட்டுமின்றி பொருளாதார தடையை மீறக் கூடாது என இந்தியா உட்பட அனைத்து நாடுகளுக்கும் நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது. ஈரானிலிருந்து எதிர்வரும் நவம்பர் மாதம் 4-ம் திகதியிலிருந்து மசகு எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என இந்தியாவுக்கு கெடு விதித்துள்ளது அமெரிக்கா.

ஈரான் அணுகுண்டு தயாரிப்பதைத் தடுப்பதற்காக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளான பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ரஷ்யா, ஜெர்மனி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து ஒப்பந்தம் போட்டன. ஜூலை 14, 2015-இல் போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஈரான் மீது 12 ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த சர்வதேச பொருளாதார தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.

இந்த ஒப்பந்தம் இறுதி வடிவம் பெற ஏறக்குறைய 21 மாதங்கள் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இறுதி செய்யப்பட்டு வியன்னாவில் ஜூலை 14-ம் திகதி கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தை ஐக்கிய நாடுகள் சபை ஜூலை 20, 2015-இல் ஏற்று ஜனவரி 16, 2016 முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவித்தது.

இந்த ஒப்பந்தத்தின்படி சர்வதேச அணுசக்தி முகமை பார்வையாளர்கள் ஈரானின் அணு ஆயுத பகுதிகள் மற்றும் யுரேனிய சுரங்கப் பகுதிகளை பார்வையிட அடுத்த 25 ஆண்டுகளுக்கு அனுமதிக்க வேண்டும் என்பதையும் ஈரான் ஏற்றது. இதன்படி ஒரே மாதத்தில் 400 முறை ஐ.நா அதிகாரிகள் பார்வையிட்டுள்ளனர்.

இதையடுத்து ஈரான் மீதான தடை விலக்கிக் கொள்ளப்பட்டு அங்கு வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. பிரான்சின் எரிவாயு நிறுவனமான டோட்டல் மற்றும் ஓட்டோமொபைல் துறையில் ரெனால்ட் ஆகியன உடனடியாக ஒப்பந்தம் செய்தன.

ட்ரம்ப் பிடிவாதம்:

அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவி ஏற்ற பின்னர் முந்திய ஜனாதிபதி ஒபாமாவால் செயல்படுத்தப்பட்ட பல திட்டங்களை ரத்து செய்து வருகிறார். அதில் ஒன்றுதான் ஈரான் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இந்த ஒப்பந்தத்தை மோசமான ஒப்பந்தம் என்ற ட்ரம்ப், இதில் அமெரிக்க நலன் ஒரு போதும் இடம்பெறவில்லை என்று இதிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.

இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க நலன் ஏதும் இல்லை என்று கூறினாலும், மறைமுகமான உண்மை என்னவெனில் மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் வலுவான அணு ஆயுத வல்லரசாக உருவாகி விடக் கூடாது என்பதுதான். ஆனால் 2015-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தினால் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஈரான் அணுகுண்டு தயாரிப்பதை நிறுத்தி வைக்க முடியும். இதனால் ஒப்பந்தத்திலிருந்து வெளியேற வேண்டாம் என்று பிரான்ஸ் பிரதமர் இமானுவேல் மாக்ரான், ஜெர்மனி ஜனாதிபதி ஏஞ்செலா மெர்கல் ஆகியோர் விடுத்த வேண்டுகோளை ட்ரம்ப் ஏற்கவில்லை.

இந்த ஒப்பந்தத்திலிருந்து தன்னிச்சையாக வெளியேறுவது என ட்ரம்ப் முடிவு செய்து அதில் பிடிவாதம் காட்டுவதாக மாக்ரான் குறிப்பிட்டார். மேலும் 2015-ம் ஆண்டு ஒப்பந்தத்தை மதிப்பதாக பிரான்ஸும், ஜெர்மனியும் குறிப்பிட்டன.

வல்லரசுகளாகக் கருதப்படும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா ஆகிய நாடுகளிடம் உள்ள அணுகுண்டுகளைவிட ஈரானிடம் சக்தி வாய்ந்த அணுகுண்டு கிடையாது. அந்த வகையில் நிச்சயம் இந்த 6 நாடுகளுக்கும் ஈரான் ஒருபோதும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருந்துவிட முடியாது என்று சர்வதேச பார்வையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

அமெரிக்கா விதித்துள்ள தடை ஏறக்குறைய ஐக்கிய நாடுகள் விதித்துள்ள தடைக்கு நிகரானது என்றே நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக அமெரிக்கா இரண்டு கட்டமாக இந்த தடையை செயல்படுத்த உள்ளது. ஆட்டோமொபைல், தங்க வர்த்தகம், முக்கியமான உலோகங்கள் மீதான வர்த்தகம் ஆகியவை ஆகஸ்ட் 6-ம் திகதிக்குப் பிறகு தொடரக் கூடாது. அடுத்தது மசகு எண்ணெய் வர்த்தகம் மற்றும் ஈரான் மத்திய வங்கியுடனான தொடர்பை நவம்பர் 4-ம் திகதிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும்.

தான் விதித்த தடையை ஈரானுடன் வர்த்தக தொடர்பு வைத்துள்ள நாடுகள் எப்படி செயல்படுத்த வேண்டும் என்பது குறித்து விளக்க அமெரிக்க அதிகாரிகள், அமைச்சர்கள் குழு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது.

இந்திய பெட்ரோலிய நிறுவனங்கள் ஈரானிலிருந்து அதிக அளவில் மசகு எண்ணெய் இறக்குமதி செய்கின்றன. இந்த நிறுவனங்களின் சுத்திகரிப்பு தொழில்நுட்ப உதவிகளை அமெரிக்க நிறுவனங்கள் அளித்து வருகின்றன. ஒருவேளை நவம்பர் 4-ம் திகதிக்குப் பிறகும் மசகு எண்ணெய் இறக்குமதி செய்வது தொடர்ந்தால், அந்த நிறுவனங்களுக்கு அமெரிக்க நிறுவனங்கள் அளித்துவரும் தொழில்நுட்ப உதவி உடனடியாக நிறுத்தப்படும். இதனால் பெட்ரோல் டீசலுக்கு கடும் தட்டுப்பாடு உருவாகும். இப்படியான ஒரு நெருக்கடியை நட்பு நாடுகளுக்கு அளித்து தனது தடைக்கான ஆதரவினை அமெரிக்க உருவாக்குகிறது.

இதர நாடுகளின் ஆதரவினை பெறவும் அமெரிக்கா இந்த உத்தியை பயன்படுத்தலாம்.

ஈரானுக்கெதிரான தடை காரணமாக அந்நாடு உற்பத்தி செய்யும் மசகு எண்ணெய் அளவு குறையும். ஈரான் நாளொன்றுக்கு 20 இலட்சம் பரல் மசகு எண்ணெயை உற்பத்தி செய்கிறது.

சர்வதேச சந்தையில் கூடுதலாக 10 இலட்சம் பரல் மசகு எண்ணெய் வந்தாலும் விலையில் மாறுபாடு உருவாகும். அதேபோல வராமல் போனாலும் விலை அதிகரிக்கும். ஈரான் உற்பத்தியை குறைத்தால் அது மசகு எண்ணெய் விலை உயர்வுக்கே வழி வகுக்கும்.

2006-ம் ஆண்டிலிருந்தே சர்வதேச பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் ஈரான், அதற்கேற்ப தனது வங்கி நடைமுறைகளை மாற்றியமைத்துக் கொண்டுள்ளது. இந்நாட்டின் மத்திய வங்கி சர்வதேச கரன்சி பாதிப்புகளால் பாதிப்படையாத வண்ணம் ஸ்திரமாக உள்ளது. ட்ரம்ப் குறிப்பிடுகிறார். ஆனால் 2016-ம் ஆண்டிலிருந்து இதுவரை சர்வதேச அணுசக்தி முகமை பிரதிநிதிகள் 11 முறை ஈரான் சென்று அணு மையங்களை சோதித்து வந்துள்ளனர். அமெரிக்க மக்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பில் இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா தொடர்ந்து இருக்கலாம் என்று பெரும்பான்மையானோர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் ட்ரம்ப் பிடிவாதமாக இருப்பது ஏன்?

ட்ரம்ப்பின் பிடிவாதத்துக்கு பின்னால் பல மறைமுக காரணங்கள் பொதிந்திருக்கஆயுத மிரட்டல் விடுத்த வட கொரிய ஜனாதிபதியை சிங்கப்பூரில் சந்தித்து ஒப்பந்தம் செய்யும் அளவுக்கு வந்த ட்ரம்ப், ஆறு நாடுகளுடன் இணைந்து ஈரானுடன் போட்ட ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதற்கான காரணம் மர்மம்தான்.

இதிலிருந்தே ட்ரம்ப்பின் உண்மை சொரூபத்தை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அமெரிக்காவின் நலன் மட்டுமே பிரதானம் என்கிற குறுகிய பார்வையில் அவர் செயல்பட்டால் உலகளாவிய பிரச்சினைகள் வெடிக்கப்போவது கண்ணுக்கு தெரியாமல்தான் இருக்கும்.

எம்.ரமேஷ்

 


Add new comment

Or log in with...