ஆட்சிமொழிகள் மீதான தௌpவூ அரசாங்க அலுவலருக்கு அவசியம் | தினகரன்

ஆட்சிமொழிகள் மீதான தௌpவூ அரசாங்க அலுவலருக்கு அவசியம்

முப்பது ஆண்டுகள் கடந்தும் தமிழுக்கு அந்தஸ்து இன்னுமில்லை!

நாட்டின் தேசியமொழிகளாகவும், ஆட்சி மொழிகளாகவும் தமிழும் சிங்களமும் அரசியலமைப்பினுள் உள்வாங்கப்பட்டு முப்பது ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனாலும் 1956 ஆம் ஆண்டு கொண்டுவந்து நிறைவேற்றப்பட்ட 'தனிச் சிங்களம் அல்லது சிங்களம் மட்டும் நாட்டின் ஆட்சிமொழி' என்ற சட்டமே இன்றும் நடைமுறையிலுள்ளதாக அரச அலுவலர்கள் மத்தியிலே கருத்து நிலவுவதை அவதானிக்க முடிகின்றது.

அரச அலுவலர் தேசிய மொழிகள் இரண்டிலும் புலமை பெற்றிருக்க வேண்டும், சித்தியடைய வேண்டும் என்ற விதி அவர்களது சம்பள உயர்வு மற்றும் பதவியுயர்வுக்கானது மட்டுமே என்று நிலவும் கருத்து மாறாதவரை அவ்விதி பயனற்றதாகின்றது.

நாட்டின் தேசிய மொழிகளாக சிங்களமும், தமிழும் அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ளதென்பதையும், அதேபோல் அவ்விரு மொழிகளும் நாடு முழுவதற்குமான நிர்வாக மொழிகள் என்பதையும், வடக்கு கிழக்கு மாகாணங்களின் முதன்மை நிர்வாக மொழி தமிழ் என்பதையும், ஏனைய மாகாணங்களின் முதன்மை நிர்வாக மொழி சிங்களம் என்பதையும் நாட்டிலுள்ள நாற்பத்தொரு பிரதேச செயலகப் பிரிவுகள் இரு மொழி நிர்வாக உரிமையுள்ள பிரதேச செயலகப் பிரிவுகள் என்பதையும் அறிந்திருப்பது அவசியம். இப்பிரகடனத்தை ஒவ்வொரு அரச அலுவலரும் புரிந்து கொள்ள வழி செய்யப்பட வேண்டும். அதுமட்டுமல்ல, நாட்டின் எப்பகுதியிலுமுள்ள அரச அலுவலகங்களில் தனது அன்றாடக் கடமைகளை, தொடர்புகளை எந்தவொரு மொழியிலும் (தமிழிலோ அல்லது சிங்களத்திலோ) ஆற்றிக்கொள்ளும் உரிமை ஒவ்வொரு நாட்டின் குடிமகனுக்கும் உண்டென்று அரசியலமைப்பில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

இரு மொழி ஆட்சியுரிமையுள்ள பிரதேச செயலகப் பிரிவுகளாக நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ, ஹங்குரங்கெத்த, வலப்பனை, கொத்மலை, நுவரெலியா ஆகிய ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளும் அதேபோல் பதுளை மாவட்டத்தின் பண்டாரவளை, எல்ல, ஹல்துமுல்ல, ஹாலிஎல, அப்புத்தளை, பசறை மீகாகிபுல ஆகிய ஏழு பிரதேச செயலகப் பிரிவுகளும் 1999.11.12 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி மூலம் அன்றைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் இலக்கம் 1105/25 இன் கீழ் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

அவ்வாறே இல. 1171/15 கொண்ட அதிவிசேட வர்த்தமானி மூலம் 2001.02.14 ஆம் திகதி கொழும்பு மாவட்டத்தின் கொழும்பு மற்றும் திம்பிரிகஸ்யாய ஆகிய இரு பிரதேச செயலகப் பிரிவுகளும் 2003.04.07 ஆம் திகதிய இல. 1287/3 கொண்ட அதிவிசேட வர்த்தமானி மூலம் பதுளை மாவட்டத்தின் பதுளை, லுணுகல, வெளிமடை, சொரணதோட்டை ஆகிய நான்கும் காலி மாவட்டத்தின் காலி நகர் ஆழ் பிரதேச செயலகப் பிரிவும், களுத்துறை மாவட்டத்தின் பேருவளை பிரதேச செயலகப் பிரிவும் கண்டி மாவட்டத்தின் அக்குறணை, தெல்தோட்டை, பன்வில, பஸ்பாகே கோறளை, உடபலாத்த ஆகியவற்றுடன் புத்தளம் மாவட்டத்தின் கல்பிட்டி, முந்தல், புத்தளம் மற்றும் வண்ணாத்திவில்லு ஆகிய நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளும் அன்றைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் இரு மொழிப் பிரதேச செயலகப் பிரிவுகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

தொடர்ந்து ஜனாதிபதியாகப் பதவி வகித்த மகிந்த ராஜபக்ஷவினால் 2012.10.10 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி மூலம் கொழும்பு மாவட்டத்தின் தெகிவளை – கல்கிஸை (கல்கிஸை தற்போது இரத்மலானை) கண்டி மாவட்டத்தின் கங்கஇஹலகோறளை, கண்டி நகர் சூழ் பிரதேசம் மற்றும் கங்கவட்ட கோறளை, மாத்தளை மாவட்டத்தின் மாத்தளை பிரதேச செயலகப் பிரிவு, பொலன்னறுவை மாவட்டத்தின் லங்காபுர மற்றும் வெலிக்கந்த, இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி மற்றும் பலாங்கொடை, அனுராதபுரம் மாவட்டத்தின் கெக்கிராவ, வவுனியா மாவட்டத்தின் வவுனியா தெற்கு ஆகியவற்றுடன் அம்பாறை மாவட்டத்தின் தெஹியத்தகண்டிய ஆகியவையும் தமிழ்மொழிக்கும் சிங்கள மொழிக்கும் சம உரிமையுள்ள இரு மொழிப் பிரதேச செயலகப் பிரிவுகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியேயுள்ள எந்தவொரு இரு மொழிப் பிரதேச சபையிலும் தமிழர் ஒருவர் தனக்குரிய தேவைகளைத் தமிழ் மொழியில் தடையின்றித் திருப்திகரமாகத் தாமதமின்றி நிறைவேற்றிக் கொள்ள எந்தவொரு ஒழுங்கும் அற்ற நிலையே காணப்படுகின்றது. இரு மொழிப் பிரதேச செயலகப் பிரிவுகள் பிரகடனப்படுத்தப்பட்ட போதிலும் தமிழ் மொழியில் கடமையாற்ற மொழிப் புலமையுள்ள அலுவலர்கள் சேவையில் அமர்த்தப்படவில்லை. அதற்கான ஏற்பாடுகள் எவையும் செய்யப்படவில்லை.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிங்கள மொழியினர் பெரும்பான்மையாகவுள்ள பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள அரச அலுவலகங்களிலும் தமிழர்களுக்கு உரிய சேவைகளைப் பெற்றுக் கொள்ள மொழித் தடையுள்ளது.

இவ்வாறுள்ள நிலையில் 'அரசகரும மொழிக்கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான பொறுப்புக்களைக் கையளித்தல்' என்ற தலைப்பின் கீழ் அரககரும மொழிகளை நடைமுறைப்படுத்தும் அலுவலரும், பொறுப்புகளும் 2009.09.25 ஆம் திகதிய 1620/27 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமான மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி அமைச்சொன்றின் செலயாளர் பிரதம அரச கரும மொழிகள் அலுவாக்கல் அலுவலராகவும் மேலதிக அல்லது சிரேஷ்ட உதவிச் செயலாளர் பொறுப்பான அலுவலராகவும் பொறுப்புடையோராவர். அதேபோல் திணைக்களத் தலைவர் பிரதம பொறுப்பாளராகவும் மேலதிக பிரதித் தலைவர் பொறுப்பாளராகவும் உள்ளமை போன்று மாகாண சபையின் பிரதம செயலாளர் மொழிகள் அமுலாக்கல் பிரதம அலுவலராகவும், பொறுப்பாளராக நிர்வாகத்திற்குப் பொறுப்பான பிரதம செயலாளர் அதற்குப் பொறுப்பாளராகவும் கடமை பொறுப்பிக்கப்பட்டுள்ளது.

மாகாண அமைச்சுக்கு மாகாணப் பிரதம செயலாளரும் அவருக்கு உதவியாக பிரதிச் செயலாளரும், மாகாணத் திணைக்களத்திற்கு அதன் தலைவரும் பொறுப்பாளராக பிரதித் தலைவர்/ பிரதி மேலதிகத் தலைவர் ஆகியோரும், மாநகர சபைக்கு அதன் ஆணையாளரும் உதவியாகப் பிரதி மாநகர ஆணையாளரும், நகர சபை மற்றும் பிரதேச சபைகளுக்கு அவற்றின் செயலாளர்களும் நடைமுறைப்படுத்த அவற்றின் நிர்வாக உத்தியோகத்தர்களும் குறித்த அதிவிசேட வர்த்தமானி மூலம் கடமை பொறுப்பிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறிருந்த போதிலும் அரச கரும மொழிக் கொள்கையை உரியபடி செயற்படுத்தப் பல சுற்று நிருபங்கள் வெளியாகியுள்ள போதும் ஏன் மொழிக்கொள்கை நடைமுறைப்படுத்தப்படுவதில் சிக்கல் தாமதம் நிலவுகின்றது.

இது பற்றி ஏன் எவரும் கவனத்தில் கொள்வதில்லை. அரசகரும மொழிக்கொள்கை உரியபடி செயற்படுத்தப்படாமையால் பாதிக்கப்பட்டு வருபவர்கள் தமிழ் மற்றும் முஸ்லிம் பொதுமக்களேயாவர். தமிழ்மொழியை அரச அலுவலகங்களில் பயன்படுத்த முடியாத போது அது மனவுளைச்சலையும், வெறுப்பையும் ஏற்படுத்துவதுடன் இனநல்லிணக்கத்திற்கும் பாதகமாயமைகின்றது.

இந்நிலையை ஒவ்வொரு அரச அலுவலரும் புரிந்து கொள்ள வழி செய்ய வேண்டும். நாட்டின் அரசியலமைப்பில் மொழி தொடர்பான சட்டங்கள் எவை? அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டிய கடமை, பொறுப்பு அரச அலுவலர் அனைவருக்கும் உண்டு.

அதை மீறுவது சட்டவிரோதமானது. அரசியலப்பை மீறுவது என்பதை அரச சேவையின் உயர்மட்டம் முதல் கீழ்மட்டம் வரையிலுள்ளோர் அறிய விசேட வழி வகை செய்யப்பட வேண்டும். அல்லாதுவிடின் நாட்டின் அரச கருமமொழிக் கொள்கையென்பது ஏடுகளில் மட்டுமே காணப்படும்.

த. மனோகரன்
(ஓய்வுபெற்ற கைத்தொழில்
நீதிமன்றப் பதிவாளர்) 


Add new comment

Or log in with...