ஜூன் 14 கடலுக்கு சென்று காணாமல் போன 7 மீனவர்களும் கண்டுபிடிப்பு | தினகரன்

ஜூன் 14 கடலுக்கு சென்று காணாமல் போன 7 மீனவர்களும் கண்டுபிடிப்பு

ஜூன் 14 கடலுக்கு சென்று காணாமல் போன 7 மீனவர்களும் கண்டுபிடிப்பு-7 Fishermen Missing on Jun 14 Found

 

மாலைதீவிலிருந்து 48 மைல் தொலைவிலுள்ள தீவிற்கு அருகில் மீட்பு

மீன்பிடி நடவடிக்கைக்காகச் சென்று காணாமல் போன 07 மீனவர்களும் சுமார் ஒரு மாதத்தின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூன் 14 ஆம் திகதி காலி மீன்பிடித்துறைமுகத்திலிருந்து சென்ற குறித்த 07 பேரும் அவர்கள் சென்ற பல்தேவை படகுடன் மீட்கப்பட்டுள்ளதாக, மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பதில் அமைச்சர் திலிப் வெதஆரச்சி தெரிவித்துள்ளார்.

மாலைதீவு கடல் பாதுகாப்பு படை அதிகாரிகளால், குறித்த மீனவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக, இலங்கைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இன்று (10) பிற்பகல், மாலைதீவிலிருந்து சுமார் 48 கடல் மைல் தூரத்திலுள்ள தீவுக்கு அருகில் வைத்து, குறித்த 07 மீனவர்களும் அவர்கள் சென்ற படகுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

காணாமல் போன குறித்த மீனவர்களை கண்டுபிடித்து ஒப்படைக்குமாறு தெரிவித்து, கடந்த சனிக்கிழமை (07) அவர்களது உறவினர்களால் காலி - கொழும்பு வீதியை மறித்து ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மீனவர்களை மீட்கும் நடவடிக்கையில், வெளிவிவகார அமைச்சு, இலங்கை கடற்படை, மீன்பிடி அமைச்சு ஆகியன இணைந்து செயற்பட்டதோடு, இது தொடர்பில் இந்தியா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளின் உதவியையும் கோரியிருந்தது.

குறித்த மீனவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.


 


Add new comment

Or log in with...