எல்லைப்பிரிப்பில் மட்டுமே முஸ்லிம்களுக்குப் பாதிப்பு | தினகரன்

எல்லைப்பிரிப்பில் மட்டுமே முஸ்லிம்களுக்குப் பாதிப்பு

கலப்புத் தேர்தல் முறையில் தொகுதிகள் பிரிக்கப்படுகின்ற போது முஸ்லிம்களுக்கு அநீதி ஏற்படலாம் என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். அதற்காக மோசடிகளுக்குத் துணைபோகக் கூடிய பழைய முறைக்குச் செல்வதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாதெனத் தெரிவித்த உள்ளூராட்சி மாகாண சபைகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா, கலப்புத் தேர்தலுக்கு அன்று கையுயர்த்திய முஸ்லிம் தலைவர்கள் இன்று சமூகத்தின் மத்தியில் என்னை துரோகியாகக் காட்ட முற்படுவதாகவும் குறிப்பிட்டார்.

முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் தேசியக் கட்சி வாகனங்களில் மிதி பலகையில் பயணித்து வெற்றிபெற முடியாது என்பதால்தான் எதிர்க்கத் தொடங்கியுள்ளனர். அவர்கள் போட்ட கணக்கு பிழைத்துவிட்டதால்தான் இன்று எதிர்த்து கூச்சலிட்டு வருவதாகவும் அமைச்சர் பைசர் முஸ்தபா சுட்டிக்காட்டினார்.

விளையாட்டுத்துறை அமைச்சில் நேற்று மாலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் மாகாணசபைத் தேர்தலும் அதனால் உருவாகியுள்ள சர்ச்சைகள் தொடர்பாகவும் விளக்கமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

புதிய முறையில்தான் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படும் இவ்வருடம் இறுதிக்குள் அதனை நடத்தத்திட்டமிடப்பட்டுள்ளது. அது குறித்து அடுத்த சில வாரங்களுக்குள் இறுதி முடிவெடுக்கப்படவிருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர் இது குறித்து மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது:

புதிய கலப்புத் தேர்தல் முறையால் எந்தவொரு இனத்திற்கும், எந்தவொரு கட்சிக்கும் அநீதி ஏற்படப்போவதில்லை. முஸ்லிம்களுக்கான பிரதிநிதித்துவம் குறையும் என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. தேசியக் கட்சிகளின் மிதிபலகையில் பயணிக்க நாட்டம் கொள்பவர்களே அச்சம் கொண்டுள்ளனர். முஸ்லிம் கட்சிகள் தனித்துப் போட்டியிட்டால் வாக்கு வீதத்துக்கேற்ப உரிய பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.

வெட்கமின்றி அன்று கைஉயர்த்தி 50/50 கேட்டுவிட்டு இன்று அது வேண்டாம், பழைய முறையே வேண்டுமெனக் கோருவதை என்னவென்று கூறுவது? என்னால் முனாபிக் தனமான அரசியல் செய்ய முடியாது. எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதையே இன்று உருவாக்கியிருக்கின்றோம். தொகுதி பிரிக்கப்படும் போது முஸ்லிம்களுக்கு சில இடங்களில் அநீதி நிகழலாம். அதை மறுக்கவில்லை. இதற்கு ஒரேவழி கட்சித் தலைவர்கள் மட்டத்திலான கூட்டத்தைக்கூட்டி பாராளுமன்றத்தின் மூலம் மாற்று வழியொன்றைக் காண முடியும். அதைவிடுத்து பழைய முறையில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த இடத்தில் முக்கிய விடயமொன்றைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். எல்லை நிர்ணயக் குழுக்கூட்டங்கள் நடைபெற்ற காலப்பகுதியில் பிரதான முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுத்தீன் இருவரும் 70 சதவீதமான அமர்வுகளுக்கு வருகைதரவில்லை. முக்கியமான விடயங்களில் பொடுபோக்குத்தனமாக இருந்துவிட்டு கூச்சல் போடுவது நியாயமானதா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மோசடி மிக்க பழைய முறைமைக்குச் சென்றால் அது மக்களுக்குச் செய்யக்கூடிய பெரும் துரோகமாகும். அத்துடன் பழைய முறைமை மீண்டும் இனவாதத்தின் பக்கம் நாடு செல்லும் நிலையை உருவாகும் என்பதை மறந்துவிடக் கூடாது. சகல கட்சிகளும் ஒன்றிணைந்தால் எல்லைநிர்ணய ஏற்பாடுகளில் காணப்படுகின்ற குறைகளை ஒரு மாதத்துக்குள் நிவர்த்தி செய்துகொள்ள முடியும்.

சிலர் அரசியலுக்காக சமூகத்தை விற்கும் செயலில் இறங்கியுள்ளனர். இவர்கள் மக்களுக்காக பேசுகிறார்களா? தமது சுயநல அரசியலுக்காக நாடகமாடுகிறார்களா எனக் கேட்க விரும்புகின்றேன். எம்மீது குற்றம் சுமத்துவதையும், விமர்சிப்பதையும் விடுத்துமாற்று நடவடிக்கைக்குரிய ஆலோசனைகளை முன்வைக்க வேண்டும்.

தங்களால் தனித்துப் போட்டியிட்டு ஒரு இடத்தைக் கூட வெற்றிகொள்ள முடியாது என்பதற்காக தேசியக்கட்சிகளில் தங்கி தமது அரசியல் பிழைப்பை நடத்த முனைகின்றனர். பெரும்பான்மையான முஸ்லிம்கள் தேசியக் கட்சிகளையே ஆதரிக்கின்றனர். அவர்களின் வாக்குகளால் பின்கதவு வழியாகவரும் முயற்சியையே இவர்கள் செய்யப் பார்க்கின்றனர்.

பணத்தைக் காட்டி அரசியல் செய்ய இடமளிக்க முடியாது. இந்தப்புதிய முறையால் முஸ்லிம் பிரதிநிதித்துவம் ஒருபோதும் குறையாது. ஆனால் முஸ்லிம்களை பகடைக்காய்களாக்கி அரசியல் நடாத்தும் சிறுபான்மையினக் கட்சிகளுக்கு தோல்வி ஏற்படும் என்பதால் அச்சம் கொண்டே எதிர்ப்புக்குரல் எழுப்புகின்றனர். அந்த எதிர்ப்பை காரணமாக வைத்து பழைய முறைக்கு இடமளிக்க முடியாது எனவும் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

(எம். ஏ. எம். நிலாம்)

 


Add new comment

Or log in with...