Friday, April 19, 2024
Home » அருட் தந்தை யோசுவா அடிகளார் எழுதிய ‘பூச்சாண்டி நாவல்’
மலையக நாவல் இலக்கிய வரலாற்றில்

அருட் தந்தை யோசுவா அடிகளார் எழுதிய ‘பூச்சாண்டி நாவல்’

ஒரு புதிய திருப்புமுனை

by damith
November 21, 2023 10:34 am 0 comment

தாவேரிக் கலா மன்றத்தின் ஏற்பாட்டில் அருட் தந்தை யோசுவா அடிகளார் எழுதிய பூச்சாண்டி எனும் நாவல் நூலின் வெளியீட்டு விழாவும் ‘கதைகள் காட்டும் பாதை சமூகப் பொருளாதார இலக்கியப் பார்வை’ எனும் தொனிப் பொருளில் இடம்பெற்ற செயலமர்வும் கிளிநொச்சி அறிவியல் நகர் கால்நடைகள் திணைக்களத்தின் பிராந்திய பயிற்சி நிலையத்தில் திருமதி பெ. போரா, திருமதி சகனா ஆகியோர் தலைமையில் கதைகளும் கதை சொல்லிகளும் என்னும் தலைப்பில் முதலாவது செயலமர்வு நடைபெற்றது.

அதிபர் அ. பங்கையற்செல்வனின் தலைமையில் கல்வியும் கதை சொல்லிகளும் என்னும் தலைப்பில் இரண்டாவது செயலமர்வும் இடம்பெற்றது. அருட் தந்தை பெனி யே. சவின் தலைமையில் பூச்சாண்டி கதை காட்டும் காலம் என்னும் தலைப்பில் மூன்றாவது அமர்வில் நூல் வெளியீட்டு விழா இடம்பெற்றது. இதில் நூல் அறிமுகத்தை ஊடகவியலாளர் மு. தமிழ்ச் செல்வனும் நூல் விமர்சனத்தை இலக்கிய விமர்சகர் அ. கேதீஸ்வரனும் நிகழ்த்தினர்.

காவேரிக் கலா மன்றத்தின் தலைவர் வண பிதா சந்தானம் பிள்ளை நூலினை சம்பிரதாயபூர்வமாக வெளியிட்டு வைத்தார். இதில் பெரு எண்ணிக்கையிலான மலையகத்தைச் சேர்ந்த அதிபர்கள், பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் சிறுதோட்ட தேயிலை செய்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது சிறு தேயிலைத் தோட்டச் செய்கையாளர்களுக்கான நிதி உதவி வழங்குதல் மற்றும் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மலையக மாணவர்களுக்கான புலமைப் பரிசில் வழங்குதல் நிகழ்வுகளும் இதன்போது இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அருட் தந்தை பெனி. யே. ச தலையுரையாற்றும் போது;

யோசுவா அவர்களின் பூச்சாண்டி என்னும் நாவல் ‘மலையக 200’ என்பதனை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. மலையக நாவல் இலக்கியத்தின் வரலாற்றில் பூச்சாண்டிக்கு முன், பூச்சாண்டிக்குப் பின் என்ற வேறொரு பார்வையை ஏற்படுத்தக் கூடியவை. பலரை பல விதங்களில் சந்திக்கின்றோம். ஆனால், அதில் ஆயிரத்தில் ஒருவர்தான் சுயமாகச் சிந்திப்பவர்கள் இருக்கிறார்கள் என்பதை அடையாளம் கண்டு கொள்ளலாம். அந்த ஆயிரத்தில் ஒருவர்தான் யோசுவா அடிகளார். உள்வாங்கப்பட்ட சிந்தனைப் பற்றிப் பேசுகின்றோம். ஆனால் சுயமாக சிந்தித்து எழுத படைப்பாளியென்றால் யோசுவாவைத் தான் சொல்ல வேண்டும். அவருடைய கடந்த காலப் படைப்புக்களை எடுத்துப் பார்த்தாலும் சரி யாராவது நாட்டுப்புற கீரைகளை ஆய்வு செய்து அதைக் கதைகளாகவும் கட்டுரைகளாகவும் எழுதக் கூடிய திறன் யோசுவா அவர்களுக்கேதான் உண்டு.

ஒவ்வொரு கீரை வகைளையும் பற்றி கதைகளாக எழுதியுள்ளார். ஒரு தாயின் வயிற்றிலிருந்து பிரசவிக்கவுள்ள குழந்தையும் தாய்க்குமிடையில் நடைபெறும் மௌன உரையாடல் பாங்கில் அமைந்த கரிக்காட்டுப் பூக்கள் பாதி உயிர்’ என்னும் காவியம் ஒன்றை எழுதியுள்ளார். அற்புதமான சிந்தனை. பஸ்ஸில் செல்வதற்கு ஏறும் போது நமக்கு அசூரத்தன்மையான ஆற்றல் வந்தால் பஸ்ஸை பிரட்டிப் போட்டு மிதிக்க முடியாதா என்ற எண்ணம் தோன்றும். அவை போல பந்தயர் தேவன் என்ற பாத்திரத்தில் செத்துப் போன ஆவி இன்னுமொரு நபருக்குள் புகுந்து சமூகத்தில் ஒன்பது விதமான பிரச்சினைகளை கையிலெடுத்து பேசுகின்றன. அப்படிப்பட்ட புதுமைப் படைப்பாளி. செயற்பாட்டு இலக்கியத்தின் பிதா மகன்.

இலக்கியம் சுவைக்காவோ ரசனைக்காகவோ, கற்பனைக்காகவோ என்பவற்றை எல்லாம் கடந்து ஒரு செயலை நாங்கள் செய்கிறோம். அவற்றை நாங்கள் இலக்கியப்படுத்துகிறோம். உண்மைச் சம்பவத்தைக் கதையாக்குகின்றோம் என்ற பின்னணியில் செயற்பாட்டு இலக்கியம் வளர்ச்சி பெற்று வருகிறது.

ஆகவே, இந்தப் பூச்சாண்டி நாவல் பல மரபுகளை, பல சிந்தனைகளை, பல நம்பிக்கைகளை, உடைத்தெறிகின்ற வகையில் வெளி வந்திருக்கின்றது. மலையகத்திலுள்ள பொய்மையை தோலுரித்து உண்மையை வெளிக் கொண்டு வருகிறது இந்தப் பூச்சாண்டி நாவல். இந்த நாவல் ஒரு வரலாற்றுத் திருப்பம் ஆகும். இது இலக்கியத்தில் ஒரு மைல்கல் என்று கூடக் குறிப்பிடலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

நாவலாசிரியர் அருட் தந்தை நூலாசிரியர் டி. எஸ். யோசுவா அடிகளார் உரையாற்றும் போது; இந்த நிகழ்வின் பிரதான நோக்கம் ஒரு நூலைக் குறித்து உரையாடுவது மட்டுமல்லாமல் இந்த நூல் கூறுகின்ற செய்தியை நடைமுறைப்படுத்துவதாகும். காலையில் நடந்த கதை சொல்லும் நிகழ்வில் மலையகத்தில் இருந்து ஐந்து சிறு தோட்டத் தேயிலைச் செய்கை முயற்சியாளர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். அந்த செயற்திட்டத்தை இங்கே ஆரம்பித்து வைப்பது முதலாவது விடயம். 200 சிறுதோட்ட தேயிலைச் செய்கை உருவாக்க வேண்டும் என்ற இலட்சியத்தை நானும் பங்கையற்செல்வன், கண்ணன் போன்றவர்களும் கடந்த மாதம் இரத்தினபுரியில் உறுதி எடுத்துக் கொண்டோம்.

முதலாவது தேயிலைத் தோட்டதைத் தொடக்கி வைத்தோம். இன்று அது உத்தியோகபூர்வமாக இந்த இடத்தில் அறிமுகப்படுத்தினோம்.

நூல்களை எழுத வேண்டும் என்ற பெரு அவா என்னிடம் எப்பொழுதும் இருப்பதில்லை. ஏதாவது மிகப்பெரியதொரு ஏக்கம் ஒன்றுக்குள் தள்ளிவிடுவது வழக்கம். அப்படித்தான் எல்லாம் தவிர்க்க முடியாதவாறு உருவாக்கப்பட்டவைகள். நீண்ட காலமாக திட்டமிட்டு யோசித்து செயற்படும் ஓர் எழுத்தாளன் அல்ல. என்னை ஒரு படைப்பாளி என்று என்னை அறிமுகப்படுத்தவும் விரும்பவில்லை. பாதி உயிர் என்ற காவிய நூலை வெளியிட்டதற்கு பின்னர் எழுத வேண்டும் என்ற சூழ்நிலை இருக்கவில்லை.

பூச்சாண்டி எழுதுவதற்கான காரணம் ‘மலையகம் 200’ ஆண்டு நிறைவு தொடர்பில் கிளிநொச்சியில் முதன் முதலில் ஒரு கூட்டம் இடம்பெற்றது, அக் கூட்டத்தில் என்னைக் கலந்து கொண்டு உரையாற்றும்படி என்னிடம் 40, 50 பேர் அளவில் அழைப்பு விடுத்தார்கள். அதன்போது நான் ஒரு கருத்தைச் சொன்னேன். அது ஒரு பரபரப்பாக இருந்தது. அதாவது மலையகம் 200 என்பது மலையக வரலாற்றை முழுமையான வரலாற்றைச் சொல்லவில்லை. இது பற்றிச் சிந்திப்பதற்கு தேடுதல் அவசியமானது. யாரோ சொன்னவற்றை வைத்துக் கொண்டு முக்கால் பகுதியை வைத்துக் கொண்டு பேசுவது சரியல்ல என்ற கருத்தை அப்பொழுது முன் வைத்தேன். அதன் பின்பு பல்வேறு கூட்டங்களுக்கு என்னைத் தொடர்பு கொண்டார்கள். பாதை யாத்திரை, வேறு உள்ளிட்ட கூட்டங்களுக்கு அழைப்பு விடுத்தார்கள். நான் ஒன்றுக்கும் செல்லவில்லை. அவர் செய்தது பிழை என்று சொல்ல வரவில்லை. அது அவர்களுடைய பார்வையில் செய்தார்கள். நான் போகாமல் விட்டதற்கான நியாயத்தையோ காரணத்தையோ நான் எனக்குள் வைத்திருக்க முடியாது என்பதன் வெளிப்பாடுதான் பூச்சாண்டி.

பூச்சாண்டி என்பது எனக்குள் இருக்கும் நியாயத்தை நான் சொல்லியே ஆக வேண்டும். அதுவும் இந்தக் காலத்தில் நான் சொல்லாமல் விடுவேனானால் அது மிகப்பெரிய தோல்வியுடன் முடிவுறும். இங்கே என்னுடைய தகப்பானர் துரைசாமி வந்திருக்கிறார்கள். 1983 ஆம் ஆண்டு இனக்கலவரம் தொடங்குவதற்கு முன்பு சம்புமல் கந்த இறப்பர் தோட்டத்தில் இருந்து தான் உழைத்துச் சேகரித்த 3000 ரூபா பணத்தை கையில் எடுத்துக் கொண்டு கிளிநொச்சிக்கு அழைத்து வந்தார். அப்பொழுது நான் ஒரு சிறு பையன். எனது சகோதரிகள் நான்கு பேர். எங்கள் எல்லோரையும் கூட்டிக் கொண்டு எவ்விதமான இலக்கு, இலட்சியமுமில்லாத நிலையில் கிளிநொச்சிக்கு வந்தார்.

அந்த 3000 காசில் 2000 ரூபாவுக்கு காணி வாங்கி அதில் ஒரு புதிய உலகத்தை உருவாக்கினார். என்னுடைய தாயார், தகப்பனார், தாய் வழி உறவுகள் சார்ந்த பலர் எங்களோடு கதைக்கின்ற பொழுது எங்களுக்கு உதாரணங்களாக சொன்ன கதைகள், எங்களோடு பேசுகின்ற பொழுது ஏதாவது விடயங்களுக்காகக் குத்திக் காட்டிய விசயங்கள் இங்கே இலக்கியங்களில் சொல்லப்படுகின்ற புதுமைப் பித்தனின் துன்பக்கேணியிலேயோ அல்லது ஒப்பாரிப் பூச்சியிலோ, அல்லது சிவலிங்கத்தினுடைய பஞ்சப் பிழைக்கவந்த சீமையிலோ சொல்லப்படாமல் இருந்தது ஏன் என்ற கேள்வி? நான் வாசித்த காலத்தில் இருந்து வந்துள்ளது. இவர்கள் சொல்வதற்கும் அவர்கள் சொல்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.

என்னுடைய அப்பா, என் அம்மா, என் மாமார்கள் சொன்ன சிறிய கதைகள் அனைத்தையும் வைத்துக் கொண்டு நான் தேடத் தொடங்கினேன். உங்கள் கையில் உள்ள கையடக்கத் தொலைபேசியில் தேடிப்பாருங்கள். இலட்சக் கணக்கான மலையகம் பற்றிய உண்மைத் தகவல்கள் ஆவணங்கள் இருக்கின்றன. அந்த வரலாற்றின் விதைகளாக இருக்கின்ற என் தகப்பனார் போன்றவர்கள் உயிரோடு இருக்கத்தக்க வகையில் உங்களுடைய கதைகளை மட்டும் வைத்து வரலாறாகக் கொண்டாடுவதற்கு நாங்கள் ஆயத்தம் இல்லை என்பதைத்தான் பூச்சாண்டி சொல்லி இருக்கிறது. பூச்சாண்டி சொல்லுகிற கதை கதையாக மட்டும் நில்லாமல் அதைச் செயலாக்க வேண்டும் என்பதற்காக 200 தோட்டங்களை உருவாக்குதல் என்ற அந்தக் கைங்கரியத்தை கையில் எடுத்துள்ளோம். இன்றைய நிகழ்வு ஒரு நூல் பற்றிய உரையாடல் மட்டுமல்ல ஒரு செயல் குறித்தான தொடக்கமும் ஆகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

# ஊடகவியலாளர் மு. தமிழ்ச் செல்வன் நூல் பற்றிய அறிமுகவுரையில்;

200 வருடங்களாக மலையக மக்கள் தொடர்பில் கூறி வந்த பூச்சாண்டிக் கதைகளை 180 பக்கங்களில் தகர்த்து எறிந்துள்ளார் வண பிதா யோசுவா அவர்கள். மலையகம் என்றால் என்ன? மலையக மக்கள் எப்படி வந்தார்கள்? இந்தியாவில் இருந்து எப்படி அழைத்து வரப்பட்டார்கள்? என்பது பற்றி 200 வருடங்களாக பூச்சாண்டிக் கதைகளாகவே நாங்கள் பார்க்க வேண்டி இருக்கிறது. மலையக வரலாற்றுக்கு இன்னுமொரு பக்கம் இருக்கிறது என்பதை அருட் தந்தை யோசுவா வெளிக்காட்டி இருக்கிறார்.

எப்பொழுதும் வித்தியாசமாக எதையும் செய்கின்றவர். நாங்கள் நிறைய எழுதுவோம். செயற்பாடு என்பது அடுத்த கட்டம்தான். ஆனால் அருட் தந்தை யோசுவா செயற்பாட்டில் மிகவும் முக்கியத்துவம் மிக்கவர். எழுதுவதை விட செயற்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்து கொண்டிருக்கிறார். இவ்வளவு செயற்பாட்டுச் சூழலுக்கு மத்தியிலும் பூச்சாண்டி என்ற நாவலை எழுதுவதற்கு முன் அதற்குச் செயல்வடிவம் கொடுத்திருக்கிறார். அதுதான் 200 தேயிலைத் தோட்டங்களை உருவாக்குதல் என்ற செயற் திட்டம். உண்மையிலே அதற்கு நாங்கள் தலைசாய்க்கின்றோம்.

அருட் தந்தை யோசுவா அடிகளார் இந்த புத்தகத்தை ஒப்புநோக்குவதற்காகத் தந்தார். அதை ஒரு வாய்ப்பாக நான் கருதுகின்றேன். இந்த நூலை வாசித்து ஒப்புநோக்கிக் கொண்டு செல்லும் போது இந்த புத்தகத்தை ஒப்புநோக்கிக் கொண்டிருக்கின்றேன் என்கின்ற நிலையைக் கடந்து இந்த நூலின் வாசகனாகவே மாறிவிட்டேன். மூன்று நாளில் புத்தகத்தை ஒப்பு நோக்கிக் கொடுத்து விட்டேன். ஆனால் சில நாட்கள் கதை பாத்திரங்கள் மனதில் அப்படியே காட்சிகளாய் ஓடிக் கொண்டிருந்தன. பூச்சாண்டி யாழ்ப்பாணத்திற்கு வந்தது. மலையகத்திற்குச் சென்ற விடயம் எல்லாம் என் மனதில் ஓடிக் கொண்டே இருந்தது. அதுதான் இந்தப் புத்தகத்தின் வெற்றி.

மலையகம் குறித்து 100 ஆண்டிலும் பேசப்பட்டது. 200 ஆண்டிலும் பேசப்படுகிறது. 300 ஆம் ஆண்டிலும் இதே மாதரிப் பேசப்படும். அருட் தந்தை யோசுவாவின் பூச்சாண்டி நாவல் அப்பொழுது இந்நாவல் மலையகத்தில் ஒரு திருப்புமுனை ஏற்படுத்தியிருக்கும். மலையகம் 200 குறித்து 500 க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் நடைபெறுகின்றன. ஆனால் இன்றைய மலையக மக்கள் அன்றிருந்த அதே நிலையில்தான் இருக்கிறார்கள் என்று பேசப்படுகின்றார்கள்.

மக்கள் தனித்துவமான அடையாளத்தை தனித்துவமான இனத்தைப் பேண வேண்டுமாயின் நிலம் இன்றியமையாதது. என்னுடைய தாத்தாமார்கள் சொன்ன கதைகளுக்கு நேர் எதிர்மாறான கதைகள் இந்தப் பூச்சாண்டி புத்தகத்தில் உள்ளன. மலையக மக்கள் தொடர்பில் ஒரு விதமான பார்வை மாத்திரமே இருந்தது. மலையக மக்கள் தொழிலுக்காக மன்னார் வழியாக மாத்தளை வந்தடைந்து தொழிலுக்கு அமர்த்தப்பட்டார்கள். அவர்கள் அடிமைகளாக வைத்திருக்கப்பட்டார்கள். 200 வருடங்கள் கழிந்து அவர்களுடைய வாழ்க்கை முறை மாறவில்லை என்ற ஒரு பக்கம் சார்ந்த கதைகள் கேட்டிருக்கின்றோம். ஆனால் பூச்சாண்டி அதனுடைய மறுபக்கத்தை தெளிவாகச் சொல்லியிருக்கிறது. 200 வருடங்களாகக் காட்டப்பட்ட பூச்சாண்டிக் கதைகளை அறைந்து எறிந்து உடைத்து இருக்கிறார் அருந் தந்தை யோசுவா அடிகளார். மன்னா​ரிலிந்து இருந்து அழைத்து வரும் போது நோய் வாய்ப்பட்டு இறந்தவர்களை அந்தந்த காடுகளில் புதைத்து விட்டு எஞ்சியவர்களைத்தான் மலையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்ற கதைகளே நாங்கள் கேட்டு வந்துள்ளோம். ஆனால் பூச்சாண்டி அதற்கு முற்பட்ட காலத்தில் இருந்து வந்த மக்கள் குறித்து பேசுகின்றன. அக்கால கட்டத்தில் அடிப்படை வசதிகள் குன்றிய நிலையில் இலங்கை நாட்டு மக்கள் வாழ்ந்தனர்.

ஆனால் தோட்டத் தொழிலாளர்களுக்காக தகரம், சீட் போட்ட லயன்காம்பராக்கள் நிர்மாணிக்கப்பட்டிருந்தன. அவர்களுக்காக மின்சாரம், குடிநீர் வசதிகள் வழங்கப்பட்டிருந்தன. இந்த நாவலில் அந்நேரம் வெள்ளையர்களினால் செய்து கொடுக்கப்பட்ட அடிப்படை வசதிகள் பற்றி சொல்லுகின்றன. இது மக்களை அடிமைகளாக வைத்திருப்பதற்காக அல்ல, தொழிலாளர்களை கௌரவமாக வைத்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

தொழிலாளர்களிடமிருந்து வினைத் திறன்மிக்க வெளிப்பாடுகளைப் பெற்றுக் கொள்வதற்காக ஆங்கிலேயர்களினால் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் அடையாளமாக யாழ்ப்பாணத்திலும் ஊர் ஒன்று உருவாகியுள்ளது. வரலாற்றை ஆதாரங்களுடன் தேடி எடுத்து ஒரு புதிய பார்வையில் ஒரு புதிய தளத்தை உருவாக்கியுள்ளது இந்த நாவல். ஒன்றை எழுதினால் அது பத்தோடு பதினொன்று என்று போய் விடக் கூடாது. ஒன்று சர்ச்சையை ஏற்படுத்த வேண்டும். அல்லது பேச வேண்டும் அல்லது மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்.

பூச்சாண்டி ஒரு சர்ச்சையை ஏற்படுத்துகின்ற நாவல். ஏனென்றால் இதுவரைக்கும் மலையகம் தொடர்பாகக் கூறப்பட்ட அனைத்தையும் உடைத்தெறிந்து இருக்கிறது. அந்த பிம்பத்தை மாற்றி இருக்கிறது. இந்த நாவல் ஒரு விவாதத்தை ஏற்படுத்தக் கூடியவை. ஒரு சர்ச்சையை ஏற்படுத்தும். உண்மையில் சர்ச்சையை ஏற்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் எல்லா மட்டத்திற்கும் அது சென்றடையும். இந்த ஒரு வித்தியாசமான படைப்பு. மலையகம் 200 இல் தொடர்பில் இருந்த மாயை அல்லது அவர்களிடத்திலுள்ள பிற்போக்குத் தனமான கருத்தியலை அல்லது வரலாறு தொடர்பிலான ஒரு பக்கத்தை உடைத்து இந்த நோக்கத்திற்காக அழைத்து வரப்பட்டார்கள்.

அவர்கள் இந்த நோக்கத்திற்காகத்தான் இருந்தார்கள். அவர்கள் இந்த நோக்கத்திற்காகத்தான் மாடாக உழைத்தார்கள் என்ற சம்பவங்கள் முன் வைத்து 200 தேயிலை தோட்டத்தை உருவாக்குதல் செயற் திட்டத்தை கதையின் மூலம் முன் வைக்கின்றார். உண்மையிலே நிலம் ஓர் இனத்தின் அடையாளம். நாங்கள் வன்செயலால் பாதிக்கப்பட்டு வடக்கில் வந்து நில உடமையாளர்களாக இருக்கின்றோம். பாதியளவிலான நில உடமையாளர்களாக இருப்பது எங்களுடைய இருப்புக்கு முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் ஒரு காரணமாக அமையும்.

அந்த நோக்கத்தை அடைய வேண்டும். பூச்சாண்டி அதனைத்தான் சொல்லுகிறது. மலையக மக்கள் நில உடமையாளர்களாக மாற வேண்டும். உழைத்துச் சேர்த்த காசில் எப்படியாவது நிலத்தை வாங்கி நில உடமையாளர்களாக மாறும் போது அவர்களுடைய அடையாளமும் தனித்துவம் நிமிர்ந்து நிற்கும் என்பதையே பூச்சாண்டி சொல்லுகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

(இக்பால் அலி)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT