தமண எக்கல்ஓயா படகு விபத்தில் மற்றொரு சடலமும் மீட்பு (UPDATE) | தினகரன்


தமண எக்கல்ஓயா படகு விபத்தில் மற்றொரு சடலமும் மீட்பு (UPDATE)

சுற்றுலா சென்று படகு மூழ்கி அதிபர் உள்ளிட்ட இருவர் பலி-Ampara-Digana Ekgaloya Boat Capsized-Badulla School-4 Missing

அம்பாறை, எக்கல்ஓயா படகு கவிழ்ந்த சம்பவத்தில் காணாமல் போன பாடசாலையின் காவலாளியின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

ஆர்.எம். விபுல பண்டார (43) என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில், குறித்த விபத்தில் காணாமல் போன நால்வரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதோடு, அவர்களது சடலங்கள் தற்போது, அம்பாறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், பிரேத பரிசோதனைகள் இன்று (09) இடம்பெறவுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.


சுற்றுலா சென்று படகு மூழ்கியதில் மூவரின் சடலம் மீட்பு (08.07.2018-9.28pm)

குறித்த படகு கவிழ்ந்த சம்பவத்தில் காணாமல் போன ஆசிரியர் ஒருவரின் சடலத்தையும் மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

யு.கே. சந்திம (43) என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் காணாமல் போன 31 வயதான அப்பாடசாலையின் காவலாளியை தேடும் பணியை, பொதுமக்களுடன் இணைந்து தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.


சுற்றுலா சென்று படகு மூழ்கியதில் அதிபர் உள்ளிட்ட இருவர் பலி  (08.07.2018-12.31pm)

பாடசாலையின் ஆசிரியர், காவலாளி தேடல்

அதிபர், ஆசிரியர்கள் உட்பட பாடசாலையிலிருந்து சுற்றுலா சென்ற மாணவர்கள் 09 பேர் பயணித்த படகு கவிழ்ந்ததில் பாடசாலையின் அதிபர், மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

பதுளை, கந்தன சிறி சீவலி வித்தியாலயத்திலிருந்து கல்விச் சுற்றுலா சென்ற மாணவர்களுள்,  பாடசாலையின் அதிபர் உள்ளிட்ட 09 பேர், அம்பாறை, தமணவிலுள்ள எக்கல்ஓயாவில் படகில் சென்றுள்ளனர்.

இதன்போது படகு கவிந்ததில் அனைவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனையடுத்து அருகிலிருந்த மீனவர்களால் அதிலிருந்த 05 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதோடு, பாடசாலையின் அதிபர் (53), ஆசிரியர் (43), காவலர் (31) மற்றும் மாணவர் ஒருவர் (13) உள்ளிட்ட நால்வர் காணாமல் போயுள்ளனர்.

இன்று (08) காலை, இடம்பெற்ற குறித்த சம்பவத்தையடுத்து, பொதுமக்கள் மற்றும் பொலிசார் இணைந்து மேற்கொண்ட தேடுதலின்போது, பிற்பகல் அளவில் குறித்த பாடசாலையின் அதிபர் டி.எஸ். அமரசூரிய (53) மற்றும் தாருக்க விதர்ஷன (13) எனும் மாணவனின் சடலங்கள் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பாடசாலையின் ஆசிரியர் (43), அப்பாடசாலையின் காவலாளி (31) ஆகியோரை தேடும் பணி தொடர்வதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

 


Add new comment

Or log in with...