வழக்கு விசாரணைகள் இனி நேரடி ஒளிபரப்பு | தினகரன்

வழக்கு விசாரணைகள் இனி நேரடி ஒளிபரப்பு

உச்ச மற்றும் உயர் நீதிமன்றங்களில் நடக்கும் வழக்கு விசாரணைகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற வழக்கு விசாரணைகளை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்வரும் 23ம் திகதி தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபர் கே.கே. வேணுகோபாலை உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக் கோரி சட்டக் கல்லூரி மாணவர் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி ஏ.எம். கான்வில்கர் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.

முன்னதாக நீதிமன்ற நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்பு செய்வது குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு கடந்த மே 3ம் திகதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து நேற்று மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் நீதிமன்ற நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்யலாம் என்றும் ஏற்கனவே இந்த நடைமுறை பல நாடுகளில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் சட்டமா அதிபர் கூறியிருந்தார்.

இதையடுத்து, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நடக்கும் வழக்கு விசாரணைகளை இனி நேரடி ஒளிபரப்பு செய்யலாம் என்றும் இதன் மூலம் கிராமப்புற மக்களும் வழக்கு விசாரணை குறித்து அறிந்து கொள்ள முடியும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

நீதிமன்ற செயல்பாடுகள் பற்றி அனைத்து மக்களும் தெரிந்து கொள்வதற்கு நேரடி ஒளிபரப்பு உதவும் என்றும் கூறினர்.

முன்னதாக நாட்டில் உள்ள விசாரணை நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்களில் நடைபெறும் விசாரணைகள் சிசிடிவி கெமராக்கள் மூலம் ஓடியோ மற்றும் வீடியோ பதிவு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...