ரஷ்யாவுடன் போர் விமானங்கள் தயாரிப்பது குறித்து அரசு பரிசீலனை | தினகரன்

ரஷ்யாவுடன் போர் விமானங்கள் தயாரிப்பது குறித்து அரசு பரிசீலனை

ரஷ்யாவுடன் இணைந்து 5ம் தலைமுறை போர் விமானங்கள் தயாரிக்கும் திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்து வருகிறது. இந்த திட்டத்துக்கு அதிகமாக செலவிட வேண்டிவரும் என்பதே இதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

இந்தியா-ரஷ்யா இடையிலான பாதுகாப்புத் துறை வர்த்தக உறவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது தொடர்பாக கடந்த 2007-ம் ஆண்டு இரு நாடுகளும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன்படி இரு நாடுகளும் இணைந்து 2 இலட்சம் கோடி ரூபா மதிப்பிலான 5ம் தலைமுறை போர் விமானங்களை தயாரிக்க திட்டமிட்டன.

எனினும் திட்டத்துக்கான செலவு, தொழில்நுட்பம், எத்தனை விமானங்களை தயாரிப்பது என்பது தொடர்பாக இரு நாடுகளுக்கிடையே கருத்து வேறுபாடு நீடிப்பதால் 11 ஆண்டுகளாக இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை. ஆனாலும் இந்தத் திட்டம் கைவிடப்படவில்லை. இது தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “மிகப்பெரிய இத்திட்டத்துக்கு ஆகும் செலவை இந்தியாவும் ரஷ்யாவும் பகிர்ந்து கொள்வதில் உடன்பாடு ஏற்பட வேண்டும். அப்படி ஏற்பட்டால் இத்திட்டத்தை செயல்படுத்த வாய்ப்புள்ளது. இதுபோன்ற பல்வேறு விஷயங்களில் எங்களுடைய நிலைப்பாட்டை ரஷ்யாவிடம் தெரிவித்துவிட்டோம். ஆனால் இதில் இதுவரை எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை” என்றார்.

இந்த திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் போர் விமானத்தில் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பத்தில் சரிசமமான உரிமை வேண்டும் என இந்தியா தரப்பில் வலியுறுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால் அனைத்து தொழில்நுட்பங்களையும் இந்தியாவுடன் பகிர்ந்துகொள்ள ரஷ்யா மறுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்தத் திட்டத்தை விரைவில் தொடங்க வேண்டும் என இராணுவ தளவாட தயாரிப்பு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் (எச்ஏஎல்) நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. ஆனால் அதிக செலவு காரணமாக இந்தத் திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.


Add new comment

Or log in with...