அரசியல்வாதிகள் உதிர்க்கின்ற பொறுப்பற்ற வார்த்தைகள்! | தினகரன்

அரசியல்வாதிகள் உதிர்க்கின்ற பொறுப்பற்ற வார்த்தைகள்!

யாழ்குடாநாட்டில் குற்றச் செயல்களை இல்லாதொழிக்க வேண்டுமானால் விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டுமென்ற தோரணையில் பாராளுமன்ற உறுப்பினரான விஜயகலா மகேஸ்வரன் தெரவித்திருந்த கூற்று தொடர்பாக தென்னிலங்கையின் அரசியல்வாதிகளும், புத்திஜீவிகள் பலரும் பொதுவெளியில் வெளிப்படுத்தி வரும் கருத்துகள் இனநல்லிணக்கத்துக்கு ஆரோக்கிமாக இருப்பதாகத் தோன்றவில்லை.

விஜயகலா எம்.பி தெரிவித்திருந்த கூற்று அவரது தனிப்பட்ட கருத்து ஆகும். அக்கருத்தை வெளிப்படுத்தியவர் மீது அரசியல்வாதிகள் கண்டனங்களை முன்வைப்பதானது அவர்களுக்குள்ள உரிமையாகும்.

விஜயகலாவின் கருத்து தவறானதெனக் கண்டிப்பது கூட அரசியல்வாதிகளுக்கு உள்ள அடிப்படை கருத்துச் சுதந்திரம் ஆகும். ஆனால், விஜயகலாவின் கருத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு, இனவாத ரீதியில் வெளிப்படையாகக் கருத்துகளைக் கூறுவதுதான் தவறு.

கடந்த சில தினங்களாக நாட்டின் அரசியல்வாதிகள் மாத்திரமன்றி மதத் தலைவர்கள் சிலரும் கூட வெளிப்படுத்தி வருகின்ற கருத்துகள் ஆரோக்கியமானதாக இல்லை. அவர்களது கருத்துகளில் இனவாதம் பொதிந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.

விஜயகலா எம்.பியின் கருத்தை வடக்கு, கிழக்குத் தமிழினத்தின் ஒட்டுமொத்த கருத்தாகச் சித்திரிக்கும் வகையில் சில அரசியல்வாதிகள் பொறுப்பற்ற முறையில் கருத்து வெளியிட்டு வருகின்றமை வேதனை தருகின்றது. இந்த அரசியல்வாதிகள் கூறுகின்ற கருத்துகளில் அரசியல் வன்மம் தென்படுகின்றது: அரசியல் ஆதாயம் தேடுகின்ற தந்திரோபாயம் மறைந்திருக்கின்றது; விஜயகலா எம்.பியின் கருத்தை அரசியல் தரப்பினர் ஆயுதமாகப் பயன்படுத்தி எதிராளியைத் தாக்குவதற்கு முயற்சிப்பது தெரிகின்றது.

அரசியல்வாதிகளைப் பொறுத்த வரை தாங்கள் எதனையும், எவ்வாறும் பேசலாம் என்றுதான் பலர் நினைக்கின்றார்கள். தாங்கள் கூறுகின்ற கருத்துகளுக்கோ அல்லது ஏனையோர் மீதான அபாண்டமான குற்றச்சாட்டுகளுக்கோ ஆதாரங்கள் அவசியமென்று அவர்கள் எண்ணுவதில்லை. அக்கருத்துகள் நாட்டு மக்கள் மத்தியில் பிரதிகூலமான விளைவுகளை ஏற்படுத்துமென்றும் அவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை.

எதிரிகள் மீது ஆதாரமின்றி வசைபாடுகின்ற உரிமையும் சுதந்திரமும் அரசியல்வாதிகளுக்கு மட்டுமே இருக்கின்றன. இவ்வாறான பொறுப்பற்ற தன்மையுள்ள அரசியல்வாதிகளாலேயே இலங்கை உட்பட ஏராளமான நாடுகளில் அரசியல் என்பது சாக்கடை போல ஆகியிருக்கின்றது.

அரசியல் எதிரிகளை வீழ்த்துவதற்காகவோ அல்லது தான் சார்ந்த மக்கள் மத்தியில் ஆதரவைப் பெருக்கிக் கொள்வதற்காகவோ அவர்கள் இவ்வாறெல்லாம் பொறுப்பின்றிப் பேசுகின்றார்கள். இவ்வாறான பேச்சுகளுக்கு விஜயகலா எம்.பியும் விதிவிலக்கல்ல!

இவ்விடயத்தில் விஜயகலாவை மாத்திரம் குறை கூறுவதற்கில்லை. வடக்கு, கிழக்கு உட்பட நாடெங்கும் உள்ள அரசியல்வாதிகளில் பலர் இவ்வாறுதான் பேசுகின்றார்கள்.

வடக்கு, கிழக்கில் தமிழ் அரசியல்வாதிகளில் ஒரு தரப்பினர் விடுதலைப் புலிகளின் நாமத்தை வைத்துக் கொண்டு இன்னும்தான் அரசியல் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். அதேசமயம் தமிழர் தரப்பைத் தவிர்ந்த ஏனைய தரப்பு அரசியல்வாதிகளுக்கும் புலிகள் விவகாரமே இன்னமும் அரசியலுக்குத் தேவையாகவிருக்கின்றது.

புலம்பெயர் தமிழர்களை புலிகளாகச் சித்திரிப்பது, காணாமல் போனோர் போராட்டம் மற்றும் யுத்தத்தில் உயிரிழந்தோருக்கான நினைவுகூரல் வைபவங்களுக்கு புலிச்சாயம் பூசுதல், தமிழினத்தின் அரசியல் உரிமைக்காகக் குரல் கொடுப்போரை புலிகளின் ஆதரவாளர்கள் என்று நாமகரணம் சூட்டுதல்...

இவ்வாறெல்லாம் மறுதரப்பில் மூன்றாந்தர அரசியல் நகர்ந்து கொண்டிருக்கின்றது. இவ்வாறு பலரது அரசியலுக்கும் ‘புலிகளின் நாமம்’ இன்றும் கைகொடுத்துக் கொண்டிருக்கின்றது.

விஜயகலா எம்.பியின் கருத்துக்கு மாத்திரமன்றி, அக்கருத்துக்கு எதிரான கண்டனங்களுக்கும் ஆதாரமாக புலிகளே உள்ளனர்.

வடக்கு, கிழக்கு தமிழ் இனத்துக்கான அரசியல் உரிமைகளை வழங்கக் கூடாதென்ற தொனியில் தென்னிலங்கை அரசியல்வாதிகளில் பலர் மட்டமான கருத்துக்களையெல்லாம் தெரிவித்துள்ளனர். இவர்களது ஆக்ரோஷப் பேச்சுகள் தவறென்று தென்னிலங்கை பெரும்பான்மை சமூகத்தில் கண்டிக்கக் கூடியவர்கள் கிடையாது. ஆனாலும் விஜயகலாவின் கருத்து மாத்திரம் பெரும் பூகம்பத்தையே கிளப்பியிருக்கின்றது. தனக்குரிய அமைச்சுப் பதவியிலிருந்து விஜயகலா ஒதுங்கிக் கொண்டுள்ள போதிலும், கண்டனங்கள் இன்னமும் அவரைத் துரத்திக் கொண்டேயிருக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற எம்.பியாக விஜயகலா உள்ளதனால், அவரது உரையை வைத்துக் கொண்டு அக்கட்சி மீது களங்கம் ஏற்படுத்துவதற்கு அரசியல் எதிரிகள் முயற்சிப்பது தெரிகின்றது. விஜயகலா எம்.பி இவ்வாறான கருத்தொன்றைக் கூறியிருப்பதனால், புலிகளுக்கு ஆதரவான கட்சியாக ஐ. தே. க செயற்படுகின்றது என்று குற்றம் சுமத்துவதே இக்கண்டனங்களின் அடிப்படை நோக்கமாகும்.

இதனை இன்னும் தெளிவாகக் கூறுவதானால் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது அரசியல் களங்கம் விளைவிப்பதே இவர்களது நோக்கமாக இருக்கின்றது.

விஜயகலா எம்.பியின் உரை பொறுப்பற்ற விதத்தில் அமைந்திருப்பதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகள் ஒருபுறம் இருக்கட்டும்... ஆனால் விஜயகலா மீதான கண்டனக் கருத்துகள் அதனை விடவும் மோசமானதாக அமைந்திருக்கின்றன. அக்கருத்துகள் இனவாதத்தைத் தூண்டுவதாக உள்ளன. அரசியல்வாதிகள் தங்களது கருத்துகளில் கட்டுப்பாடும் நாகரிகமும் பேணுவது அவசியம். இல்லையேல் இனங்களுக்கிடையேயான குரோதம் மென்மேலும் மோசமடைவதை தடுக்க முடியாமல் போய் விடும்.


Add new comment

Or log in with...