மாகாணசபை தேர்தலை இழுத்தடிப்பது ஜனநாயக கட்டமைப்பை மீறும் செயல் | தினகரன்

மாகாணசபை தேர்தலை இழுத்தடிப்பது ஜனநாயக கட்டமைப்பை மீறும் செயல்

மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்தாது காலத்தை இழுத்தடிப்பதானது ஜனநாயக கட்டமைப்பின் அடிப்படையை மீறும் செயல் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டினார்.

மாகாண சபைத் தேர்தல் சட்டமூலத்தில் திருத்தங்களைக் கொண்டுவந்து இரண்டு மாதங்களுக்குள் தேர்தலை நடத்தாவிட்டால் 2017ஆம் ஆண்டு 17ஆம் இலக்க மாகாணசபை தேர்தல் சட்டத்தை நீக்கி பழைய முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

மாகாணசபைத் தேர்தல்கள் பிற்போடப்படுவது தொடர்பில் சபை ஒத்திவைப்புப் பிரேரணையை முன்வைத்து உரையாற்றும்போதே சுமந்திரன் எம்.பி இந்தக் கருத்துக்களை முன்வைத்தார்.

கடந்த ஒக்டோபர் மாதம் மூன்று மாகாணசபைகளின் பதவிக்காலங்கள் முடிவடைந்துள்ளன. எதிர்வரும் ஒக்டோபரில் மேலும் மூன்று சபைகளின் பதவிக்காலம் முடிவடையவுள்ளன. இவ்வாறான நிலையில் மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டு ஐந்து மாதங்கள் கடந்துள்ளபோதும் அது சபையில் நிறைவேற்றப்படவில்லையென்றும் சுட்டிக்காட்டினார்.

மாகாணசபை திருத்தச்சட்ட மூலத்துக்கு அமைய எல்லை நிர்ணய அறிக்கை அமைச்சரிடம் கையளிக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குள் சபையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இந்த அறிக்கை பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும். அப்படி நிறைவேற்றப்படாத பட்சத்தில் சபாநாயகர் தலைமையில் மீளாய்வுக் குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும். எல்லை நிர்ணய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு ஐந்து மாதங்கள் கடந்துள்ளபோதும் இதுவரை எந்தக் குழுவும் நியமிக்கப்படவில்லை. எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் தேவையான மறுசீரமைப்புக்களைச் செய்யாவிட்டால் 2017ஆம் ஆண்டு 17ஆம் இலக்க மாகாணசபை தேர்தல் சட்டத்தை அரசாங்கம் நீக்க வேண்டும் என்றார்.

குறித்த கால இடைவெளியில் தேர்தல்களை நடத்துவதே ஜனநாயகக் கட்டமைப்பின் அடிப்படையாகும். இவ்வாறான நிலையில் மூன்று மாகாணங்களில் உள்ள மக்களின் உரிமைகள் மீறப்பட்டுள்ளன. எனவே அரசாங்கம் மாகாணசபைத் தேர்தல் திருத்தச்சட்டத்தில் உரிய மறுசீரமைப்புக்களை மேற்கொண்டு மேலும் காலதாமதப்படுத்தாது தேர்தலை நடத்த வேண்டும்.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிடைத்த அனுபவத்துக்கு அமைய 50க்கு 50 கலப்புமுறையில் தேர்தல் நடத்தப்பட்டால் நிச்சயமாக எந்தவொரு கட்சிக்கும் ஸ்திரமான ஆட்சியை அமைக்க முடியாது. எனவே இந்த விகிதாசாரமானது 70க்கு 30 ஆக மாற்றப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடாகும் என்றும் கூறினார்.

இவ்வாறான நிலையில் 2017ஆம் ஆண்டு 17ஆம் இலக்க மாகாணசபை தேர்தல் சட்டத்தை அரசாங்கம் நீக்கினால் மாகாணசபைத் தேர்தலை பழைய முறையில் நடத்த முடியும். தேர்தலை நடத்திய பின்னர் தேவையான நேரத்தை எடுத்து தேர்தல் மறுசீரமைப்புப் பற்றிக் கலந்துரையாடி தீர்மானத்துக்கு வரமுடியும்.

2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாராளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் ஊடாக அரசியலமைப்பு சபை உருவாக்கப்பட்டது. அரசியலமைப்பு சபையினால் நியமிக்கப்பட்ட வழிநடத்தல் குழுவில் தேர்தல் மறுசீரமைப்புக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு கலந்துரையாடல்கள் நடைபெற்றன. நடைமுறையில் உள்ள விகிதாசார முறையில் காணப்படும் பல்வேறு குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டு கலப்பு முறையிலான தேர்தல் முறையொன்றுக்குச் செல்வது பற்றி யோசனைகள் முன்வைக்கப்பட்டன. இதன் அடிப்படையிலேயே பரீட்ச்சார்த்தமாக உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் புதிய தேர்தல் முறையின் கீழ் நடத்தப்பட்டன.

எனினும், இதனால் பாரிய நடைமுறை பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கவேண்டி ஏற்பட்டது. 60க்கு 40 என்ற விகிதாசார அடிப்படையிலான தேர்தல் முறையினால் தனித்து எந்தவொரு கட்சிக்கும் உள்ளூராட்சி சபையில் ஸ்திரமான ஆட்சியை அமைக்க முடியாது போனது. இவ்வாறான நிலையில் 50க்கு 50 என்ற அடிப்படையில் மாகாணசபைத் தேர்தலுக்குச் சென்றால் எந்தவொரு கட்சிக்கும் மாகாண சபைகளில் ஸ்திரமான ஆட்சியை உருவாக்க முடியாது. எனவே மாகாணசபைத் தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்வது அவசியமானது.

எதுவாக இருந்தாலும், தேர்தல் இழுத்தடிக்கப்பட்டு மக்களின் ஜனநாயக உரிமை மறுக்கப்படக்கூடாது என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

(மகேஸ்வரன் பிரசாத்)

 


Add new comment

Or log in with...