விருப்புவாக்கு முறையில் தேர்தலை நடத்தினால் இனவாதத்துக்கு தூபமிடும் | தினகரன்

விருப்புவாக்கு முறையில் தேர்தலை நடத்தினால் இனவாதத்துக்கு தூபமிடும்

விருப்புவாக்கு முறையில் மாகாண சபைகளுக்குத் தேர்தலை நடத்துவதானது மீண்டும் இனவாதத்துக்கு அத்திவாரம் இடுவதாக அமைந்துவிடும் என உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

மாகாணசபைத் தேர்தல்களை டிசம்பர் மாதத்துக்குள் நடத்த வேண்டும் என்பதற்காக பழைய முறைக்கு மீண்டும் செல்வது நியாயமற்றது. உத்தேச திருத்தச்சட்ட மூலத்தில் உள்ள குறைபாடுகளை சகலரும் இணைந்து நிவர்த்திசெய்தால் ஒன்றரை மாதங்களில் திருத்தச்சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.

மாகாணசபைத் தேர்தல்கள் பிற்போடப்படுவது தொடர்பில் சுமந்திரன் எம்.பி கொண்டுவந்த சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இந்தக் கருத்துக்களை முன்வைத்தார்.

மாகாணசபைத் தேர்தல்களை நடத்தும் பொறுப்பு அரசாங்கத்துக்கு மாத்திரம் உரித்தானது அல்ல. பாராளுமன்றத்தில் உள்ள 225 பேருக்கும் இதற்கான பொறுப்பு உள்ளது. எல்லை மீள்நிர்ணய அறிக்கையை வர்த்தமானிக்கு வழங்க முன்னர் சர்வகட்சிக் குழுவொன்றை கூட்டி கலந்துரையாட வேண்டும் என எல்லை நிர்ணய குழுவின் தலைவரிடம் எழுத்து மூலம் கேட்டிருந்தேன். எனினும்,

அவ்வாறு செய்வதற்கு தமக்கு சட்டரீதியான அனுமதி இல்லையெனக் கூறினார். இவ்வாறான நிலையில் எல்லை நிர்ணய அறிக்கையை நான் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளேன் என்றார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறைபாடுகள் இருப்பதால் தேர்தல் முறையை மாற்ற முடியாது. இதிலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்தே பொருத்தமானதாக இருக்கும். முற்போக்கான புதிய தேர்தல் முறையை மாற்ற வேண்டாம் என தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன. இதிலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யவேண்டும் என அவர்கள் கேட்டுள்ளனர். இலங்கை அரசியல் வரலாற்றில் அமைதியான தேர்தலாக கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் அமைந்தன.

மாகாணசபைத் தேர்தல் குறித்த சட்டத்திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது அதற்கு கையுயர்த்தியவர்கள் தற்பொழுது அதனைக் குறைகூறி வருகின்றனர்.

தேசிய கட்சிகளில் தொங்கிக் கொண்டு இனவாதத்தைப் பரப்பி வாக்குகளைப் பெற்று தமது உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளும் சிறுபான்மைக் கட்சிகள் சில, புதிய முறையில் தமது பங்கு கிடைக்காது போய்விடும் என்பதாலேயே மீண்டும் பழைய முறைக்குச் செல்ல வேண்டும் எனக் குரல்கொடுத்து வருகின்றனர். புதிய முறையில் எந்தவொரு இனத்துக்கும் அநீதி இழைக்கப்படாது.

அரசியல் செய்யும்போது தாம் சார்ந்த இனத்தைப் பற்றி மாத்திரம் யோசிக்கக் கூடாது. அப்படி யோசிப்பதாயின் தனித்துப் போட்டியிட வேண்டும். இதனைவிடுத்து தேசிய கட்சிகளில் தொங்கிக்கொண்டுவந்து உறுப்பினர்களைப் பெற்ற பின்னர் தமது இனத்தை விற்று அரசியல் நடத்துகின்றனர். உத்தேச தேர்தல் முறையின் ஊடாக முஸ்லிம் சமூகத்தின் வாக்குவங்கி குறைவடையாது.

மாகாணசபைத் தேர்தலை நடத்துவதில் தாமதம் ஏற்படுகிறது என்பதற்காக மோசடி நிறைந்த விருப்புவாக்கு முறைக்குச் செல்ல முடியாது. தேர்தல் முறையில் மாற்றம் செய்வது குறித்து பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் வராத கட்சிகளின் தலைவர்கள், இங்குவந்து பாராளுமன்றத்தில் இனத்தைவிற்று அரசியல் செய்யப் பார்ப்பது மோசமான நிலையாகும்.

புதிய மாகாணசபை தேர்தல் சட்டத்தில் குறைபாடு உள்ளது. அந்தக் குறைபாடுகளை சரிசெய்வதற்கு மாற்று யோசனைகளை முன்வைக்கவில்லை. இந்த முறையில் தமது பங்கு கிடைக்காது என்பதால் பழைய முறைக்குச் செல்ல வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

விருப்பு வாக்குமுறையானது பணத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியல் செய்யும் முறையாகும். இது மிகவும் மோசடி நிறைந்த தேர்தல் முறை மாத்திரமன்றி, இனத்தை முதன்மைப் படுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவதால் இது மீண்டுமொரு இனவாதத்துக்கு அத்திவாரம் இடுவதாக அமைந்துவிடும்.

மீண்டும் பழைய முறையில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் முயற்சித்தால் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் மக்களுக்கு வழங்கிய ஆணைக்குத் துரோகம் இழைத்துவிடுவார்கள்.

தற்பொழுது சமர்ப்பித்துள்ள எல்லை மீள்நிர்ணய அறிக்கையின் கீழ் தேர்தலை நடத்த முடியாது. அதில் குறைபாடுகள் உள்ளன. சகல கட்சிகளும் வட்டமேசையில் அமர்ந்து குறைபாடுகளை நிவர்த்திசெய்தால் ஒன்றரை மாதத்துக்குள் நிலைமையை சீர் செய்யமுடியும் என்றார்.

மகேஸ்வரன் பிரசாத்


Add new comment

Or log in with...