புறக்கோட்டையில் தீ; இரு கடைகள் எரிந்து நாசம் | தினகரன்


புறக்கோட்டையில் தீ; இரு கடைகள் எரிந்து நாசம்

புறக்கோட்டையில் தீ; இரு கடைகள் எரிந்து நாசம்-Fire at Main Street Pettah-2 Shop Destroyed in Fire

 

உயிர்ச் சேதமின்றி தீ கட்டுப்பாட்டுக்குள்

கொழும்பு, புறக்கோட்டை மெயின் வீதியில் முதலாம் குறுக்குத்தெருவுக்கருகே டி.எஸ்.ஐ காலணிகள் வர்த்தக நிலையத்துக்கு பக்கத்திலுள்ள வர்த்தக நிலையமொன்று திடீரென தீப்பற்றி எரிந்து முற்றாக சேதமாகியுள்ளது.

இன்று (07) காலை சுமார் 10.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வர்த்தக நிலையம் மூடப்பட்டிருந்த போதும் கீழ் தளத்திலிருந்து தீ மிக வேகமாக பரவியது. காற்றின் வேகம், கிழக்கிலிருந்து மேற்கு நோக்கியதாக இருந்ததால் காலணி விற்பனை நிலையத்திற்கு தீ பரவாமல் அதற்கு அடுத்த படியாக இருந்த திரைச் சீலைகள விற்பனை நிலையதில் தீ பரவியது.

குறித்த வர்த்தக நிலையம், பயணப் பொதிகள், கைப் பைகள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படும் வர்த்தக நிலையம் என்பதால் முற்றாக தீ பரவி அது எரிந்து சாம்பலானது.

முதலாவது தீயணைப்பு வாகனம் வந்திருந்த போதும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் போனது. சற்று நேரத்தில் இரண்டாவது தீயணைப்பு வாகனம் வந்த பின்னரே அதற்கடுத்த வர்த்தக நிலையங்களுக்கும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இருப்பினும் திரைச் சீலைகள் விற்பனை நிலையத்துக்கும் பலத்த சேதம் ஏற்பட்டிருந்தது.

இவ்வர்த்தக நிலையத்தில் திடீரென தீப்பிடித்ததற்கான காரணம் என்ன என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமும் காலை 10 மணியளவில் கொழும்பு மெயின் வீதியிலுள்ள அனைத்து கடைகளும் திறக்கப்படும் என்பதால் அனைத்து கடை ஊழியர்களும் தத்தமது கடை உரிமையாளர்கள் கடைகளை திற்க்க வரும் வரை, கடை ஊழியர்கள் காத்திருந்தனர்.

சில கடைகள திறக்கப்பட்டு வர்த்தக நடவடிக்கைகளுக்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்தனர். இந்நிலையிலேயே திடீரென இவ்வாறு தீ விபத்துச் சம்பவம் இடம்பெற்றவுடன் மெயின் வீதி பெரும் அல்லோல கல்லோலப்பட்டது.

கடை ஊழியர்கள் தங்களது கடைகளிலிருந்து வெளியே ஓடினர். அருகிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கும் தீ பரவி விடும் என அஞ்சினர்.
மெயின் வீதியில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டதையடுத்து மெயின் வீதியினூடான போக்குவரத்தை பொலிஸார் தடை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் மிகுந்த பேராட்டத்திற்கு மத்தியில், பொதுமக்கள், பொலிசார், மாநகர சபை தீயணைப்புப் பிரிவு மற்றும் கடற்படையின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

சம்பவம் தொடர்பாக புறக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(கே. அசோக்குமார்)

 


Add new comment

Or log in with...