Friday, March 29, 2024
Home » நூறு ரூபாவுக்கு உருளைக்கிழங்கை கொள்வனவு செய்தால் விவசாயிகள் வருமானமீட்டுவது எவ்வாறு?

நூறு ரூபாவுக்கு உருளைக்கிழங்கை கொள்வனவு செய்தால் விவசாயிகள் வருமானமீட்டுவது எவ்வாறு?

by damith
November 21, 2023 9:47 am 0 comment

இலங்கையில் உருளைக்கிழங்கு உற்பத்திக்கு பிரபல்யமான பிரதேசம் வெலிமடை ஆகும். வெலிமடை பிரதேச செயலாளர் பிரிவுகுட்பட்ட முஸ்லிம்கள் செறிந்து வாழும் சில்மியாபுரம், பொரகஸ், பாதிநாவெல, ரேந்பொல, குருத்தலாவ. அலுகொல்ல, போகாக்கும்புற மாத்திரமன்றி கெப்பெட்டிப்பொல, ரத்தம்ப, அம்பகஸ்தோவ, பொரலந்த போன்ற பிரதேச மக்களும் தமது பிரதான வாழ்வாதார தொழிலாக விவசாயத்தையே நம்பி வாழ்கிறார்கள். மரக்கறி மற்றும் உருளைக்கிழங்கு உற்பத்திக்கு உகந்த சிவப்புநிறம் கலந்த இருவாட்டி மணல் நிலத்தை இப்பிரதேசம் கொண்டுள்ளது. நுவரெலியாவிற்கு அண்மித்த இப் பிரதேசத்தில் இம்முறை அரசாங்கம் வழங்கிய உரமானியம் மூலமும் விவசாயத் திணைக்கள ஆலோசனைகளுக்கு அமைவாகவும் உருளைக்கிழங்கு நல்ல விளைச்சலைத் தந்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். தமது உள்ளூர் உருளைக்கிழங்கு உற்பத்திக்கு அரசாங்கம் நியாயமான விலையை நிர்ணயித்து சந்தைப்படுத்தல் வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என உருளைக்கிழங்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ச.தொ.ச நிறுவனத்தின் மூலம் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு ஒரு கிலோ 40 ரூபா விலை குறைத்துள்ளமையினால் உள்ளூர் உருளைக்கிழங்கின் விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

உள்ளூரில் உற்பத்தியாகும் உருளைக்கிழங்கை 120 –140 ரூபாய் விலையில் மொத்த வியாபாரிகள் கோள்வனவு செய்து வருவதாகவும், இந்த விலையானது தங்களது உற்பத்தி செலவை ஈடுசெய்ய முடியாதுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்தனர். அரசாங்கம் முன்வந்து உள்ளூரில் உற்பத்தியாகும் உருளைக்கிழங்குக்கு நியாயவிலையை நிர்ணயித்து சிறந்த சந்தைவாய்ப்பினைப் பெற்றுத் தர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மொத்த வியாபாரிகள் 120 ரூபாவுக்கு உருளைக்கிழங்கை வாங்கிச் சென்று முன்னூறு ரூபாவுக்கு மேல் விற்பனை செய்கின்றனர். உருளைக்கிழங்குச் செய்கையாளர்கள் வறிய நிலையில் இருக்ைகயில், மொத்த வியாபாரிகளோ இலட்சக்கணக்கில் பணமீட்டுகின்றனர் என்று விவசாயிகள் தெரிவித்தனர். எனவே விவசாய அமைச்சும் வர்த்தக அமைச்சும் இப்பிரதேச உருளைக்கிழங்கு விவசாயிகளின் கோரிக்கைக்கு செவிசாய்த்து உரிய நடவடிக்கை மேற்கொள்வது அவசியமாகும்.

எம்.ஏ.எம்.ஹசனார் (ஊவா சுழற்சி நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT