Friday, March 29, 2024
Home » பாராளுமன்றக் குழுக் கூட்டங்களில் வெளி நபர்கள் கலந்துகொள்ளலாமா?

பாராளுமன்றக் குழுக் கூட்டங்களில் வெளி நபர்கள் கலந்துகொள்ளலாமா?

- குழுக்களின் பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும்?

by Rizwan Segu Mohideen
November 20, 2023 12:29 pm 0 comment

– இன்று சபாநாயகர் மஹிந்த யாபா விசேட அறிவிப்பு

பாராளுமன்றக் குழுக் கூட்டங்களில் வெளி நபர்கள் கலந்துகொள்ளல் மற்றும் குழுக்களின் பணிகள் தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (20) பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை மேற்கொண்டார்.

பாராளுமன்றத்தில் தற்பொழுது செயற்படும் பல்வேறு குழுக்களின் கூட்டங்களுக்கு குழுவின் உறுப்பினர்கள், குழுவின் தலைவரின் முறையான அனுமதிக்கமைய வருகைதரும் குழுவின் உறுப்பினர்களல்லாத பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட குழுக்களின் பணிகளுக்காக அழைக்கப்பட்டுள்ள ஏனைய நிறுவனங்களின் அதிகாரிகளுக்கும் குறித்த குழுவில் பணியாற்றும் பாராளுமன்ற பணியாளர்களின் அதிகாரிகளுக்கும் மாத்திரம் அந்தக் குழுக் கூட்டங்களில் கலந்துகொள்ள முடியும் எனவும், ஏனைய எந்தவொரு வெளிநபர்களுக்கும் அந்தக் குழுக் கூட்டங்கள் இடம்பெறும் சந்தர்ப்பங்களில் குழு அறைகளுக்கு வருகைதர எந்தவொரு அனுமதியும் இல்லை என்று சபாநாயகர் அறிவித்தார்.

இதற்கு மேலதிகமாக, குழுக்களின் தலைவர்கள் தமது விடயங்களுக்கு அப்பால் குழுக்களின் பணிகளை மேற்கொள்வதன் போக்கு தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் தனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதால், அவை தொடர்பிலும் பாராளுமன்றத்தில் காலகாலமாகப் பின்பற்றப்பட்டுவரும் சம்பிரதாயங்கள் மற்றும் நடைமுறைகள் பாதுகாக்கப்படும் வகையில் செயற்படுவதற்கு அனைத்துக் குழுக்களின் தலைவர்களும் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளின் ஏற்பாடுகளுக்கு அமைய கடப்பாடுடையவர்கள் என்பதையும் சபாநாயகர் மேலும் வலியுறுத்தினார்.

பாராளுமன்ற பணியாளர்களுக்கு மேலதிகமாக குழுக்களின் தலைவர்களினால் குழுவின் பணிகளில் ஒருங்கிணைப்பு மற்றும் ஆலோசனைப் பணிகளுக்காக ஏதாவது வெளி நபர்களின் சேவையை தன்னார்வமாகவோ அல்லது ஏதாவது வகையிலோ பெற விரும்பினால், அதற்கு சபாநாயகரின் எழுத்துமூலமான முன் அனுமதியைப் பெறவேண்டும் என்றும் சபாநாயகரின் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், குழுக்களின் பணிகளை மேற்கொள்ளும் போது பல்வேறு அமைச்சுக்களின், திணைக்களங்களின், நியதிச்சட்ட மற்றும் நியதிச்சட்டம் சாரா நிறுவங்களின் அரச அதிகாரிகளை அழைக்கும் போது அவர்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்காத வகையில் குழுக்களின் பணிகளை மேற்கொள்வதற்கும், பாராளுமன்றத்தின் கௌரவம், அபிமானம் என்பவற்றுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சமநிலையாகவும், குழுவினால் அனுமதிக்கப்படும் விடயங்கள் தொடர்பில் மாத்திரம் ஊடக அறிக்கைகளை வெளியிடுவதற்கும், கடிதங்களைக் கையாளும் போது சம்பந்தப்பட்ட குழுக்களின் பெயர்கள் அடங்கிய உத்தியோகபூர்வ கடிதத் தலைப்புக்கள் சம்பந்தப்பட்ட குழுக்களினால் அனுமதிக்கப்பட்ட விடயங்களைத் தொடர்பாடல் செய்வதற்கு மாத்திரம் பயன்படுத்துவதற்கும், அந்தக் குழுக்களின் உத்தியோகபூர்வ கடிதத் தலைப்புக்கள் எந்த சந்தர்ப்பத்திலும் தனிப்பட்ட அல்லது அரசியல் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தாமல் இருப்பதற்கும், அவ்வாறே, குழுக்களின் பணிகள் தொடர்பான அறிக்கைகள் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கும் போதும் இதுவரை பின்பற்றப்பட்ட நடைமுறைக்கு அமைய மாத்திரம் நடவடிக்கை எடுப்பதற்கும், அனைத்து குழுக்களின் தலைவர்களும் கவனத்திற் கொள்ளவேண்டும் என சபாநாயகர் தனது அறிவித்தலில் வலியுறுத்தினார்.

ஶ்ரீ லங்கா கிரிக்கெட் தொடர்பான விசாரணையின்போது கோப் குழுவின் தலைவரான ரஞ்சித் பண்டார எம்.பி. பக்கச்சார்பாக செயற்பட்டார் எனவும், அவரின் மகனை கோப் குழுவுக்கு அழைத்து வந்தார் எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் கோப் குழுவில் இருந்து விலகுமாறு அவருக்கு எதிரணிகள் அழுத்தம் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT