'சிலுமின', 'ரெச' பிரதம ஆசிரியர் சாமர லக்‌ஷான் காலமானார் | தினகரன்

'சிலுமின', 'ரெச' பிரதம ஆசிரியர் சாமர லக்‌ஷான் காலமானார்

'சிலுமின', 'ரெச' பிரதம ஆசிரியர் சாமர லக்‌ஷான் காலமானார்-Chamara Lakshan Passed Away

 

நமது சகோதர பத்திரிகைகளான 'சிலுமின', 'ரெச' ஆகிய பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர் சாமர லக்‌ஷான் நேற்று (30) காலமானார்.

திடீர் சுகவீனமுற்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சாமர லக்‌ஷான் நேற்று இரவு உயிரிழந்தாரென உறவினர்கள் தெரிவித்தனர்.

இறக்கும் போது இவருக்கு வயது 39 ஆகும்.

மிகச் சிறிய வயதில் இரண்டு தேசியப் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியராகப் பணிபுரிந்த சாமர மிகவும் துடிப்புள்ள இளம் ஊடகவியலாளராவார்.

மத்துகம கன்னங்கர மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற இவர், 'ரிவிர' சிங்களப் பத்திரிகையில் தனது ஊடகப் பணியை ஆரம்பித்தார். அரசியல் துறையில் பட்டதாரியான இவர், சிங்களத்தில் திறமையான எழுத்தாற்றல் பெற்றவர். மிகக் குறுகிய காலத்தில் லேக் ஹவுஸ் நிறுவன பத்திரிகைகளான சிலுமின, ரெச ஆகிய பத்திரிகைகளில் அதிரடி மாற்றங்களை செய்த இவர், பத்திரிகை விற்பனையிலும் சாதனையை ஏற்படுத்தினார்.

ரெச பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியரான சாமர லக்ஷான், லேக்ஹவுஸ் நிறுவனத்தின் முதன்மைப் பத்திரிகையான சிலுமின பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும் அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தார். இந்தப் பத்திரிகையின் இளம் ஆசிரியர் என்ற பெருமையையும் பெற்றார். இவருடைய இளமைத் துடிப்பு மற்றும் தூரநோக்கான சிந்தனைகளுடன் பத்திரிகைகள் புதியதொரு பாதையை நோக்கிப் பயணிக்கத் தொடங்கின. இந்த இரண்டு பத்திரிகைகளுக்கும் இவர் குறைந்த மாதங்களே ஆசிரியராக இருந்தாலும், இந்த மாதங்கள் அவற்றுக்குப் புரட்சிகரமான மாதங்கள் என்பதில் மாற்றுக்கருத்துக் கிடையாது. ரச மற்றும் சிலுமின பத்திரிகைகளில் இளமையான தலைசிறந்த குழுவொன்றுக்குத் தலைமையேற்றுப் பணியாற்றினார்.

சாமர திறமையான மற்றும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஊடகவியலாளர். விளையாட்டுத்துறை மற்றும் அரசியல் தொடர்பில் வரலாறுகளுடன் கூடிய பரந்த ஆய்வுரீதியான தகவல்களைத் தன்னகத்தே கொண்டிருந்தார். விளையாட்டுத்துறை பற்றியோ அல்லது அரசியல் வரலாறுகள் பற்றியோ கண்ணிமைக்கும் நேரத்தில் விடயங்களை நினைவுபடுத்திக் கூறும் அசாத்திய திறமையைக் கொண்டிருந்தார்.

சாமர லக்‌ஷான் குமாரவின் இழப்பானது ஈடுசெய்ய முடியாதது என லேக்‌ஹவுஸ் நிறுவனத்தின் தலைவர் கிரிஷாந்த குரே தெரிவித்தார். "அவருடைய விசுவாசம், நோக்கத்தில் கொண்டிருக்கும் தீவிரத்தன்மை, அறிவுத் திறன், அர்ப்பணிப்பு மற்றும் குறிப்பாக இரக்கம் போன்றன என்னை எப்பொழுதும் ஈர்க்கச் செய்வன. சாமர ஈடுசெய்யமுடியாதவர்" எனக் குறிப்பிட்டார்.

இவரது பிரிவு அவரது குடும்பத்தாருக்கு மட்டுமல்ல, லேக் ஹவுஸ் நிறுவனத்திற்கும் பாரிய இழப்பாகும். அன்னாரது, ஆத்மா சாந்தியடைய தினகரன், ஆசிரியபீடம் பிரார்த்திக்கின்றது.

 


Add new comment

Or log in with...