மாத்தறை கொள்ளை; தப்பிச் சென்ற கார் மடக்கிப் பிடிப்பு | தினகரன்

மாத்தறை கொள்ளை; தப்பிச் சென்ற கார் மடக்கிப் பிடிப்பு

மாத்தறை கொள்ளை; தப்பிச் சென்ற கார் மடக்கிப் பிடிப்பு-Matara Robbery-43 Yr Old Arrested with Car

 

காரை செலுத்திய கார் உரிமையாளரின் கணவன் கைது

மாத்தறை நகரில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் காரையும் அதனை செலுத்தி வந்தவரையும் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த ஜூன் மாதம் 22 ஆம் திகதி இடம்பெற்ற குறித்த கொள்ளைச் சம்பவத்தில் கொள்ளையர்களால் பயன்படுத்தப்பட்ட கார் தொடர்பில் இடம்பெற்ற விசாரணைகளின் அடிப்படையில், இன்று (02) அதிகாலை களுத்துறை மாவட்ட குற்றப் பிரிவு அதிகாரிகளால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

மொரகஹஹேன, தலகல பிரதேசத்தில் வைத்து, குறித்த அல்டோ வகை காருடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதான சந்தேகநபர், 43 வயதான மீகொட, கருவலபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த மடபாதகே கபில குமார என்பவராவார்

கைது செய்யப்பட்டவரின் மனைவியின் (43) பெயரில் குறித்த கார் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கொள்ளையிட வந்தோர், காயமடைந்த நிலையில் குறித்த காரின் மூலம் கராபிட்டி வைத்தியசாலைக்கு அருகில் விடப்பட்டு சென்றமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

மாத்தறை கொள்ளைச் சம்பவம் தொடர்பிலான சந்தேகநபர்களான, கொஸ்கொட தாரக, துப்பாக்கிச் சூட்டில் பலியான சாமர, கொஸ்கொட டில்ஷான் ஆகியோர் தற்போது கைது செய்யப்பட்ட கபில குமாரவிற்கு சொந்தமான மொரகஹஹேன, தலகல பிரதேசத்திலுள்ள குறித்த வீட்டை, வாடகைக்கு பெற்று, கடந்த 4 மாதங்களாக அவ்வீட்டில் தங்கியிருந்தமை தெரியவந்துள்ளது.

அதற்கமைய, செயற்பட்ட களுத்துறை மாவட்ட குற்றப் பிரிவு அதிகாரிகள், பல நாட்களாக குறித்த வீட்டை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்ட நிலையில் இன்று (02) அதிகாலை குறித்த கார், அவ்வீட்டுக்கு வந்த வேளையில் உடனடியாக மடக்கிப் பிடித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் தங்கியிருந்த குறித்த வீட்டில், அவர்கள் பயன்படுத்திய உடைகள் மற்றும் புகைப்படங்கள் சிலவற்றையும் கைப்பற்றியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில், கொஸ்கொட தாரக, கொள்ளைச் சம்பவத்தின்போது தப்பிச் சென்ற 'ஹபரகட வசந்த' என்பவரது மனைவி, உள்ளிட்ட ஐவர் இது வரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி பலியாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவத்தில், பொலிசாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் கான்ஸ்டபிள் ஒருவர் பலியானதோடு, மேலும் ஒரு பொலிசார் மற்றும் பொதுமக்கள் இருவர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...