சிங்கராஜவன அரிய வகை யானைகளை பிடிக்கும் பணி நிறுத்தம் | தினகரன்

சிங்கராஜவன அரிய வகை யானைகளை பிடிக்கும் பணி நிறுத்தம்

சிங்கராஜவன அரிய வகை யானைகளை பிடிக்கும் பணி நிறுத்தம்-President Instruct to Stop Remove Elephant From Singharaja

 

முறையான செயற்பாட்டை எடுக்கும் வரை அங்கேயே விடவும் என ஜனாதபதி பணிப்பு

சிங்கராஜவனத்திலுள்ள அரிய வகை யானைகள் இரண்டையம் பிடிக்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கையை நிறுத்துமாறு, நிலையான அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் சுற்றாடல் அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கமைய குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, வனசீவராசிகள் பிரதியமைச்சர் பாலித தேவரப்பெரும தெரிவித்தார்.

குறித்த அரிய வகை யானைகள் இரண்டையும் ஹொரவபொத்தானை, யானைகள் தடுப்பு மத்தியநிலையத்திற்கு எடுத்துச் செல்ல தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், ஜனாதிபதியினால் அம்முடிவை இடைநிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

உலக பாரம்பரிய சிங்கராஜ வனத்தில் உலவும், அரிய வகை யானைகள் இரண்டையும், முறையான முறைமைகளை திட்டமிட்டு முடிவெடுக்கும் வரை, தொடர்ந்தும் சிங்கராஜவனத்திலேயே வைக்குமாறு, ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

சுற்றாடல் அமைச்சின் செயலாளர் மற்றம் வன பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு குறித்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

ஏதேனுமொரு காரணத்திற்காக, இந்த யானைகள் இரண்டையும் வேறு இடத்திற்கு மாற்ற நேரிடுமாயின், அது குறித்து துறைசார் நிபுணர்களால் மேற்கொள்ளப்படும சம்பூரண அறிவியல் ஆய்வை அடுத்தே அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அதில் தெரிவித்துள்ளார்.

இந்நாட்டிலுள்ள யானை வளத்தை பாதுகாக்கும் நோக்கில், குறித்த விலங்குகளை அதற்கே உரிய நிலத்தில் பாதுகாப்பாக சீவிக்க நடவடிக்கை எடுக்குமாறும், உலக வாழ் மக்களின் கவனத்திற்குள்ளாகியுள்ள மிக சிறப்பான உயிரியல் முக்கியத்துவத்தை கொண்டுள்ள சிங்கராஜ வனத்தின் பெறுமதியையும் பாதுகாப்பது பொறுப்பானதாகும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த யானைகள் இரண்டினாலும் பிரதேசவாசிகளுக்கு ஏற்படும் இடையூறுகளை தடுக்கும் வகையில், குறித்த பகுதியில் அதற்கான வேலிகளை அமைப்பதற்கான நடவடிக்கையை விரைவுபடுத்துமாறும் ஜனாதிபதி, உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
 


Add new comment

Or log in with...