சுமுக நிலைமை திரும்ப மறுக்கும் யாழ். மண்! | தினகரன்

சுமுக நிலைமை திரும்ப மறுக்கும் யாழ். மண்!

வடக்கில் அமைதிச் சூழல் இப்போது இல்லை. யாழ்குடாநாட்டின் இன்றைய நிலைமை தொடர்பாக அன்றாடம் ஊடகங்களில் வெளிவருகின்ற செய்திகளைப் பார்க்கின்ற போது, அந்த உண்மை நன்கு புரிகின்றது.

வாள்வெட்டுக் குழுக்கள் ஆங்காங்கே நடத்துகின்ற அட்டகாசங்கள் அன்றாடம் சாதாரண செய்திகளாகி விட்டன. வாள்வெட்டுக் குழுவினர் எவ்வாறானவர்களை இலக்கு வைக்கின்றனர், ஏன் இலக்கு வைக்கின்றனர் என்பதையெல்லாம் இன்னுமே ஊகித்துக் கொள்ள முடியாதிருக்கின்றது.

வாள்வெட்டுக் குழுக்களின் அகோரத் தாக்குதலில் அகப்பட்டவர்களெல்லாம் எந்தவொரு குற்றச் சம்பவங்களுடனும் தொடர்பற்றவர்கள்; தனிப்பட்ட ரீதியில் பகையாளிகளைக் கொண்டிருக்காதவர்கள்; உண்மையைக் கூறுவதானால் அவர்களில் பலர் அப்பாவிகள்!

அப்படியிருக்க, சாதாரண மக்களையெல்லாம் கூட இலக்கு வைத்து வாள்வெட்டுக் கும்பல்கள் இவ்வாறு தாறுமாறாக அட்டகாசம் நடத்துவது ஏன்?

இதுதான் யாழ்குடா மக்களுக்கு இன்னுமே புரியாத புதிராக இருக்கின்றது.

இந்த வினாவுக்குப் பின்னால் யாழ். மக்களுக்கு வேறு சந்தேகமும் இருக்கின்றது. யாழ்குடாநாட்டில் அமைதியைக் குழப்பி, எந்நேரமும் அங்கு பதற்றமான நிலைமையொன்றை ஏற்படுத்தி வைத்திருக்கும் உள்நோக்கமொன்றை யாராவது கொண்டிருக்கிறார்களா?

இல்லையேல் யாழ். மண்ணில் தீவிரவாத ஆயுதக் குழுக்கள் மீண்டும் உருவெடுத்து விட்டதைப் போன்ற போலியான சூழலொன்றை வெளியுலகுக்குக் காட்டுவதற்கு ஏதாவதொரு தரப்பு முற்படுகின்றதா?

இவ்வாறெல்லாம் பலவிதமான சந்தேகங்கள் இந்த வாள்வெட்டுக் குழுக்கள் தொடர்பாக மக்கள் மத்தியில் உலவுகின்றன. மறைமுகமான நோக்கமொன்றின் வெளிப்பாடுதான் அங்கு இடம்பெறுகின்ற வாள்வெட்டுத் தாக்குதல்கள் என்பதே மக்களின் சந்தேகமாக இருக்கின்றது.

உலகிலேயே மிகவும் பலம் வாய்ந்ததும், முதன்மையானதுமான தீவிரவாத இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அன்றைய காலப் பகுதியில் விளங்கியது. உலக நாடுகள் அத்தனையும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை அன்றைய காலப் பகுதியில் இவ்வாறுதான் கணிப்பிட்டு வைத்திருந்தன.

முப்பது வருட காலமாக தலைவிரித்தாடிய விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகளை முழுமையாக அழித்தொழித்து விட்டதாக அன்றைய அரசாங்கம் உத்தரவாதப்படுத்திக் கூறியிருந்தமை இப்போதும் நினைவிருக்கின்றது.

இலங்கை இராணுவமே பயன்படுத்தாத நவீனரக ஆயுதங்களைக் கொண்டு மூன்று தசாப்த காலமாக போராட்டம் நடத்தி வந்த விடுதலைப் புலிகளை முற்றுமுழுதாக தோற்கடிக்க முடியுமாக இருந்தால், பண்டைக்கால போர் ஆயுதமான வாள்கள் கொண்டு யாழ்குடாநாட்டில் இப்போது ‘காட்டுத் தர்பார்’ நடத்தி வருகின்ற வன்முறைக் கும்பல்களை கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியாதிருப்பது ஏனென்று அங்குள்ள மக்கள் சந்தேகத்துடன் வினவுவதில் நியாயம் இருக்கவே செய்கின்றது.

மக்கள் குழுமியிருக்கின்ற பொது இடங்களில் மோட்டார் சைக்கிள்களில் வந்திறங்கி, கண்ணில் அகப்பட்டவர்களையெல்லாம் வாளால் வெட்டித் தள்ளி விட்டு மாயமாகிச் செல்லும் இவ்வன்முறைக் கும்பல் எது? அவர்களது நோக்கம் என்ன?

யாழ். மக்களுக்கு இன்னும்தான் விடை புரியாதிருக்கின்றது. வாள்வெட்டுக் குழுக்கள் அவ்வப்போது தங்களுக்குள்ளேயும் மோதிக் கொள்கின்றன. இவ்வாறான தாக்குதலொன்று அங்கு நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.

யாழ். மண்ணின் அமைதியைக் குலைத்திருக்கின்ற சம்பவங்களில் வாள்வெட்டுத் தாக்குதல் மட்டுமே பிரதானமானது என்று கூறி விட முடியாது. சிறுமிகள் மீதான வன்முறைகள் நடந்தேறியுள்ளன. வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்களால் வீட்டு உரிமையாளர்கள் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. நகைகளைக் கொள்ளையிடுவதற்காக வயோதிபப் பெண் ஒருவர் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டமை, கணவனைக் கட்டி வைத்து விட்டு குடும்பப் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அங்கிருந்த உடைமைகள் கொள்ளையடிக்கப்பட்டமை போன்றனவெல்லாம் அங்கு இறுதியாக இடம்பெற்ற மோசமான வன்முறைகள் ஆகும்.

இவ்வாறு யாழ்குடாவில் வன்முறைத் தாக்குதல்கள் ஆங்காங்கே தொடர்ந்து கொண்டிருக்கையில், போதைப் பொருள் கடத்தலின் இடைத்தளமாக யாழ்குடாநாடு மாறியுள்ளதாக மற்றொரு அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது.

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்படுகின்ற ‘கேரள கஞ்சா’ கைப்பற்றப்படும் சம்பவங்கள் யாழ்குடாநாட்டில் அடிக்கடி இடம்பெற்று வருவதானாலேயே யாழ்குடாநாடு மீது இப்போது ‘போதைப் பொருள் கடத்தல் தளம்’ என்ற முத்திரை குத்தப்பட்டிருக்கின்றது. இந்தியாவின் மிகக் கிட்டிய தூரத்தில் யாழ் பகுதி அமைந்திருப்பதனால் கேரளாவில் இருந்து கஞ்சாவை இங்கு கடத்தி வருவது இலகுவாக உள்ளது. அதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு ‘கேரள கஞ்சா’ கடத்தப்படுவதாகத் தெரிகின்றது.

இவ்வாறான சமூகவிரோதச் செயற்பாடுகளின் முக்கிய தளமாக யாழ்குடாநாடு மாற்றமடைந்திருப்பது பெரும் கவலை தருகின்றது. இலங்கையின் கல்விக் கோட்டையாகவும், பெரும்பெரும் புத்திஜீவிகள் உதித்த மண்ணாகவும், தமிழர் கலாசாரத்தின் விளைநிலமாகவும், உழைப்பாளிகளுக்குரிய முன்மாதிரி பூமியாகவும் திகழ்ந்த யாழ். மண்ணில் இன்று அரங்கேறுகின்ற கொடுமைகள் அச்சமூட்டுகின்றன. அதிகார பின்புலம் இல்லாமல் இவ்வாறான கொடுமைகள் அங்கே அரங்கேறப் போவதில்லையென யாழ். மக்கள் நம்புவதை அலட்சியப்படுத்த முடியாதிருக்கின்றது.

யாழ்குடாநாடு முன்னர் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த போது சம்பவித்திருக்காத கொடுமைகள், இன்று பொலிஸாரின் கட்டுப்பாட்டில் உள்ள போது இடம்பெறுவதாக அங்குள்ள மக்கள் அபிப்பிராயப்படுவதையும் அறிய முடிகிறது. இக்கருத்து கவனத்தில்கொள்ளப்பட வேண்டியது அவசியம்.

அதேநேரம், தென்னிலங்கையிலிருந்து தண்டனை இடமாற்றம் பெறுகின்ற பொலிஸாரில் பலர் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்படுவதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன. மனக்கிலேசத்துக்கு உள்ளாகியுள்ள அவர்களது கடமைப் பொறுப்பில் மக்கள் சந்தேகப்படவும் வேண்டியுள்ளது.

யுத்தம் முடிவுற்று ஒன்பது வருடங்கள் கடந்து போன நிலையில் அங்குள்ள மக்கள் இன்னும் தான் நிம்மதிக் காற்றைச் சுவாசிக்க முடியாதிருக்கிறது என்பது வேதனையையே தருகின்றது.


Add new comment

Or log in with...