மஹிந்த சீனாவிடம் பணம் பெற்ற விவகாரம்; விவாதம் கோருகிறது சு.க, ஐ.தே.க | தினகரன்

மஹிந்த சீனாவிடம் பணம் பெற்ற விவகாரம்; விவாதம் கோருகிறது சு.க, ஐ.தே.க

 

தேர்தல் பிரசாரங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீனாவிடமிருந்து பணம் பெற்றிருப்பது தொடர்பாக நம்பக் கூடிய ஆதாரங்கள் இருப்பதால் இனியும் தாமதிக்காது இலஞ்சம் பெற்றது தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் என சுதந்திரக் கட்சி தேசிய அமைப்பாளர் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கோரியுள்ளார். சின்னச் சின்ன திருட்டுகள் பற்றி விசாரிப்பதை விடுத்து இவ்வாறான பாரிய மோசடிகள் குறித்து ஆராய்வது உகந்தது என்று குறிப்பிட்டுள்ள அவர்,

கடந்த ஜனாதிபதி தேர்தலில் சுவர்க்கடிகாரம்,சாரி போன்றவை பகிரப்பட்டதில் இருந்து அவர் பணம் பெற்றது ஊர்ஜிதமாவதாகவும் கூறியுள்ளார்.

இதே வேளை, சீனாவிடமிருந்து 7.6 மில்லியன் டொலர் பணம் பெற்றது தொடர்பில் விரைவாக பாராளுமன்ற விவாதமொன்றை நடத்துமாறு பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமாநாயக்க,சபாநாயகரை கோரியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டை மஹிந்த தரப்பு மறுக்கவோ குற்றஞ்சாட்டியவர்களுக்கு எதிராக வழக்கு தொடரவோ கூட முன்வரவில்லை எனவும் இது தொடர்பில் தான் பல இடங்களில் முறையிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

2015 ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதியின் தேர்தல் பிரசாரங்களுக்காக சைனா மேர்சண்ட் நிறுவனம் 7.6 மில்லியன் ரூபா பணம் வழங்கியதாக நிவ்யோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக நேற்று ஆளும் தரப்பிலுள்ள ஐ.தே.க மற்றும் சு.க அமைச்சர்கள் கருத்து வெளியிட்டார்கள்.

அநுராதபுரத்திலுள்ள தனது இல்லத்தில் நேற்று ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்திய அமைச்சர் துமிந்த திசாநாயக்க,

நிவ்யோர்க் டைம்ஸில் மஹிந்த ராஜபக்‌ஷ இலஞ்சம் பெற்றதாக தெரிவித்துள்ள செய்தியில் உண்மையிருக்கும் என நான் நம்புகிறேன். அந்த செய்தியில் இருந்த தகவல்களும் தேர்தல் காலத்தில் நடந்தவற்றிற்கும் இடையில் தொடர்பிருக்கிறது. எனக்கும் சுவர்க்கடிகாரம்,சாரி என்பன கிடைத்தன. அவை இன்னும் என்னிடம் இருக்கின்றன.தேர்தலுக்காக சீனா கம்பனியிடம் அவர் பணம் பெற்றிருந்தால் அது இலஞ்சம் பெற்றதற்கு ஒப்பானது. இது தொடர்பாக ஆராய்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இந்த செய்தி வெ ளியாகி சில நாட்கள் கடந்தும் அரசாங்க தரப்பில் இன்னும் வாய்திறக்காதது குறித்து எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

இரு மாங்காய் திருடியவனை கூட சிறையில் அடைக்கிறார்கள். சிறிய திருட்டுகளை பற்றி பேசிக்கொண்டிருக்காது பாரிய நிதி மோசடிகள் பற்றி உடனடியாக விசாரணை நடத்துமாறு அரசாங்கத்தை கோருகிறோம்.

இதே வேளை சீன கம்பனியிடம் முன்னாள் ஜனாதிபதி பணம் பெற்றது தொடர்பாக பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு வேளை விவாதமொன்றை நடத்த வேண்டும் என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமாநாயக்க கோரியுள்ளார்.இது தொடர்பில் சபாநாயகரிடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ள அவர், இந்த சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதால் உண்மை நிலையை மக்கள் அறிய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் இரான்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் தேர்தல் பிரசாரங்களுக்கு சீன நிறுவனம் 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கிய விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளின் முடிவுகள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என நிதி மற்றும் வெகுஜன ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரட்ன வலியுறுத்தியுள்ளார்.

குற்றுப் புலனாய்வுப் பிரிவினரோ அல்லது நிதி மோசடி விசாரணைப் பிரிவினரோ இந்தக் குற்றச்சாட்டுக் குறித்த விசாரணைகள் பற்றிய முடிவுகளை பகிரங்கப்படுத்த வேண்டும். விசாரணைகளில் என்ன நடைபெற்றுள்ளது என்பதைத் தெரிந்துகொள்வதற்கான உரிமை நாட்டு மக்களுக்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சைனா ஹாபர் எஞ்சினியரிங் கம்பனியின் ஊடாக 2015ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் தேர்தல் பிரசாரத்துக்கு பணம் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இது தொடர்பில் அண்மையில் நியூயோர்க் பத்திரிகை விரிவான கட்டுரையொன்றை வெளியிட்டிருந்தது. 7.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எவ்வாறு அவருக்கு மாற்றப்பட்டது என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அது மாத்திரமன்றி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஆதரவாக செயற்படும் பௌத்த மதகுரு ஒருவருக்கு 38,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், 1.7 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இரண்டு காசோலைகள் இரண்டு நலன்விரும்பிகளால் அலரிமாளிகைக்கு வழங்கப்பட்டதாகவும் நியூயோர்க் பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...