உதயங்க நாடு வர எதிர்பார்ப்பு; கணக்கு முடக்கப்பட்ட பின் ரூ. 3 1/2 கோடி பரிமாற்றம்? | தினகரன்

உதயங்க நாடு வர எதிர்பார்ப்பு; கணக்கு முடக்கப்பட்ட பின் ரூ. 3 1/2 கோடி பரிமாற்றம்?

உதயங்க நாடு வர எதிர்பார்ப்பு; கணக்கு முடக்கப்பட்ட பின் ரூ. 3 1/2 கோடி பரிமாற்றம்-Udayanga Weeratunga Expect to Come SL-40 Accounts to Be Chekced

 

  • இராணுவ அதிகாரிகள் ஐவரின் 40 வங்கிக் கணக்குகளை ஆராய அனுமதி
  • அவர் துபாய் சிறையில் தடுத்துவைப்பு - சட்ட மா அதிபர்

இலங்கை விமானப் படைக்கு, மிக் விமான (MIG 27) கொள்வனவில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் இடம்பெறும் வழக்கு விசாரணை தொடர்பில், ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க இலங்கை வர எதிர்பார்ப்பதாக அவரது சட்டத்தரணி நீதிமன்றிற்கு அறிவித்துள்ளார்.

குறித்த வழக்கு இன்று (29) கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது அவருக்காக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் டி சில்வா இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை உதயங்க வீரதுங்க, தற்போது துபாய் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, சட்ட மா அதிபர் திணைக்களம் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளது. எனவே, அவர் இந்நாட்டிற்கு வருவதாயின், இலங்கை அதிகாரிகள் துபாய்க்கு சென்று அவரை அழைத்து வரவேண்டும் எனவும் திணைக்களம் இன்று (29) நீதிமன்றிற்கு தெரியப்படுத்தியது.

மிக் விமான கொள்வனவு தொடர்பான கொடுக்கல் வாங்கலில் சந்தேகத்திற்கிடமான வகையில், இடைத்தரகு செய்ததாக தெரிவிக்கப்படும், இலங்கை விமானப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் ஐவரின், 07 வங்கிகளில் பராமரித்துச் சென்ற 40 வங்கிக் கணக்குகள் தொடர்பில் ஆராய, பொலிஸ் நிதி மோசடி பிரிவினர் விடுத்த வேண்டுகோளுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

அத்துடன், நீதிமன்ற உத்தரவுக்கமைய, உதயங்க வீரதுங்கவின் கணக்குகள், மத்திய வங்கியினால் முடக்கப்பட்டு 07 நாட்களின் பின்னர், இலங்கையிலுள்ள வர்த்தக வங்கி ஒன்றின் அவரது பெயரிலுள்ள கணக்கிலிருந்து, துபாயிலுள்ள வங்கிக் கணக்கொன்றுக்கு ரூபா 3 கோடி 57 இலட்சம் பணம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் விடயம் தொடர்பில் நீதிமன்றிற்கு அறிவிக்கப்பட்டது.

அதற்கமைய, நீதிமன்ற உத்தரவு வழங்கப்பட்டிருந்த நிலையில், அவ்வாறு குறித்த பணப் பரிமாற்றம் எவ்வாறு இடம்பெற்றுள்ளது என்பது தொடர்பில் விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, சட்ட மா அதிபர் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

 


Add new comment

Or log in with...