ஊர்காவற்துறையில் 7 மாத கர்ப்பிணி கூரிய ஆயுதத்தால் கொலை | தினகரன்

ஊர்காவற்துறையில் 7 மாத கர்ப்பிணி கூரிய ஆயுதத்தால் கொலை

 

 
வல்லுறவுக்குட்படுத்தியிருக்கலாம் என சந்தேகம்
 
யாழ். ஊர்காவற்துறை பகுதியில் 7 மாத கர்ப்பணிப் பெண்  கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தினால் யாழில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
யாழ். ஊர்காவற்துறை, கரம்பன் பகுதியில் இந்தக் கொடூரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
 
 
இன்று (23) இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில், ஞானசேகரன் கம்சியா (24) எனும் ஊர்காவற்துறை நீதிமன்றில் கடமையாற்றும் உத்தியோகத்தரின் மனைவியே இவ்வாறு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
 
குறித்த பெண் வீட்டில் தனியாக இருந்த வேளையில், திருடும் நோக்கில் சென்றுள்ள இரும்பு கொள்வனவு செய்யும் இரு இளைஞர்களால் குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
குறித்த இருவரும் பெண்ணைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய பின்னர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
 
சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், கொலை சம்பந்தமாக ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
 
 
இச்சம்பவத்தில் வீட்டில் இருந்த தங்க நகைகளும் திருடப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
ஆரம்ப கட்ட விசாரணைகளை அடுத்து, இரு இளைஞர்கள் யாழ். மண்டைதீவு பகுதியில் வைத்து சந்தேகத்தின்பேரில்  கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
 
கைதுசெய்யப்பட்ட இருவரும், யாழ். சுழிபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
கைதுசெய்யப்பட்ட இரு இளைஞர்களும் பாதுகாப்பின் நிமித்தம் யாழ்.தலைமைப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், இரு இளைஞர்கள் மீதும் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.
 
விசாரணையின் பின்னர் குறித்த இருவரையும் ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளதாகவும் ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
 
(யாழ்ப்பாணம் குறூப் நிருபர் - சுமித்தி தங்கராசா)
 
 

Add new comment

Or log in with...