இலக்கு நோக்கிய பயணம்; தனியார்துறைக்கும் அழைப்பு | தினகரன்

இலக்கு நோக்கிய பயணம்; தனியார்துறைக்கும் அழைப்பு

நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பை மேம்படுத்துவதிலும், அபிவிருத்தி முயற்சிகளிலும் காணப்படும் பின்னடைவுகள். நெருக்கடிகள் குறித்தும் கலந்துரையாடி கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதற்கு தனியார்துறையினருக்கு பிரதமர் ரணில் விக்கிதமசிங்க அழைப்பு விடுத்திருக்கின்றார். நாட்டைக் கட்டியெழுப்பும் பணியை தனித்து அரசாங்கத்தினால் மட்டும் சாதிக்கக்கூடியதல்லவெனவும் அரசுதுறையோடு தனியார் தறையும் சமபங்காளிகளாக இருக்கவேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தியிருக்கின்றார். தனியார்துறை நிறுவனங்களின் பணிப்பாளர்கள் அமைப்பின் வருடாந்த மாநாட்டின்போதே பிரதமர் இந்த முக்கிய அறிவிப்பை விடுத்திருக்கின்றார்.

பிரதமரின் இந்த அழைப்பு குறித்து சகல தரப்பினரும் ஆழமாக சிந்திக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. எமது நாடு முப்பது வருடங்களுக்கும் மேலாக பல்வேறுபட்ட நெருக்கடிகளையும் எதிர்கொண்ட நாடாகும். அபிவிருத்தியிலும், பொருளாதாரத்திலும் நாம் பாரிய பின்னடைவைக் கண்டிருக்கின்றோம். போதாக்குறைக்கு பாரிய கடன் சுமைக்குள் உழன்று கொண்டிருக்கின்றோம்.

இத்தனைக்கும் மத்தியில் தான் 2015 முதல் நாட்டை புதிய பாதையில் பயணிக்கச் செய்யும் பொறுப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தலையில் சுமந்து கொண்டனர்.

நல்லாட்சி அரசின் இந்தப் பயணம் குறித்து நாட்டு மக்கள் மத்தியில் ஆரம்பத்தில் நம்பிக்கையை வலுப்படுத்தி இருந்தபோதிலும் எதிரும் புதிருமான இரண்டு ஜனநாயகக் கட்சிகள் ஒரே தண்டவாளத்தில் பயணிப்பதென்பது அவ்வளவு இலகுவானதொரு காரியமல்லவென்பதை பயணத்தின் இடைநடுவில் தான் புரிந்துகொள்ளக்கூடியதாக அமைந்தது. ஆனாலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டே பிரதான இரு கட்சிகளும இணைந்து தேசிய அரசாங்கத்தை உருவாக்கி பயணிக்க தொடங்கினார்.

நல்லாட்சிப் பயணத்துக்கு முட்டுக்கட்டடைபோட உள்ளிருந்தும் வெளியே இருநதும் பலர் செயற்பட்டனர். இன்றளவும் செயற்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர். பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் அரசு அதன்பயணத்தை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

எமது வர்த்தகத்துறை மேம்பாடடைய வேண்டுமானால் பாரிய சந்தைகள், அண்டைய நாடுகளதும் மற்றும் உலகச் சந்தையிலும் நாம் பிரவேசிக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தி வருகின்றார். சர்வதேச சந்தையில் எமது உற்பத்திகளுக்கு உயர்ந்த சந்தை வாய்ப்பை பெற்றுக்கொள்வதன் மூலம் நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பை வலிமையடையச் செய்ய முடியும். வெறுமனே உள்ளூர் சந்தையையும், திறைசேரியையும் நம்பி நாட்டை முன்னேற்ற முடியாது.

நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்னமும் நாடு வெளிநாட்டுக் கடனிலேயே தங்கி வாழ்கின்றொம். எதிர்காலத்தில் பிறக்கப் போகும் பிள்ளைகள் கூட கடனாளியாகவே உள்ளனர். ஒரு கடனைச் செலுத்த மற்றொரு கடன் வாங்கும் போக்கையே கடைப்பிடிதது வருகின்றோம். இதிலிருந்து விடுபடாத வரை நாம் முன்னேற முடியாது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். ஜி.எஸ்.பி+ சலுகையுடன் ஐரோப்பிய சந்தைக்குள் பிரவேசிக்க முடியுமானால் நிச்சயமாக பாரிய மாற்றமொன்றின் பக்கம் நாட்டை திருப்ப முடியும் என்ற நம்பிக்கையை பிரதமர் கொண்டிருக்கின்றார்.

பாரிய தனியார் கைத்தொழில் துறைக்கு கைகொடுப்பதன் மூலமும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனமொன்றை ஏற்படுத்துவதன் மூலமும் எம்மால் இலக்கு நோக்கிய பயணத்தில் முன்னேறிச் செல்ல முடியும் என்பதில் அரசு திடமான உறுதிபூண்டிருக்கின்றது. தனியார்துறையினர் அரசுக்கு பக்கபலமாகச் செற்பட முன்வருவதன் மூலம் நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பை உறுதிப்படுத்த முடியும்.

இந்த அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்தை ஸ்தாபிப்பதற்காக 10 பில்லியன் ரூபாவை பங்குச் சந்தையில் விடத் திட்டமிடப்பட்டுள்ளது. எமது வளத்தை வெளியே விடுவதை விட நாம் உள்ளூரிலேயே பயன்படுத்துவதன் மூலம் நாட்டை செழிப்படையச் செய்ய முடியும். இது தொடர்பில் தனியார் துறையினருடன் கலந்துரையாடுவதற்கு வருமாறு பிரதமர் இந்த பகிரங்க அழைப்பின் மூலம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.

இதனை தனியார் துறையினர் சாதகமாக கவனத்தில் கொள்வது வரவேற்கக் கூடியதாகும். வெளி உலகை நம்பிக் கொண்டிருப்பதைவிட எமது கால்களால் ஊன்றுவதைக் கொண்ட நாம் தலைநிமிர முடியும். என்பதே அரசின் இலக்காக காணப்படுகின்றது.

பிரதமரின் இந்த சவால்மிக்க வேண்டுகோளை நம்மில் எத்தனை தொழில் துறையினர் ஏற்றுக்கொள்ளப் போகின்றனர் என்பதே இன்றைய கேள்வியாகும். 22 மில்லியன் மக்களைக் கொண்ட சந்தையில் எம்மால் வேகமாக முன்னேற முடியாது. நாம் முன்னேற வேண்டுமானால் பாரிய சந்தைகளை நாடவேண்டும். உலகச் சந்தையிலும், ஐரோப்பியச் சந்தையிலும் நாம் பிரவேசிக்க வேண்டும். இதன் பொருள் நாம் போட்டிச் சந்தையில் பிரவேசிக்க வேண்டுமென்பதுதான்.

இதற்குத் திறமைமிக்க தனியார் தொழில்துறையினர் முன்வர வேண்டும். பிரதமரின் இந்த அழைப்புக்கு எத்தனை தனியார் தொழில்துறையினர் சாதக சமிக்​ைஞயை காட்டப் போகின்றனர் என்பதை அவதானித்து அடுத்த கட்ட நகர்வுக்குள் நுழைய அரசு எதிர்பார்த்திருக்கின்றது. பிரதமரின் இந்த இலக்கு நோக்கிய பயணம் முன்னேறிச் செல்ல ஒத்துழைப்போமாக!


Add new comment

Or log in with...