டெனீஸ்வரனை நீக்கிய CV யின் உத்தரவுக்கு இடைக்கால தடை | தினகரன்

டெனீஸ்வரனை நீக்கிய CV யின் உத்தரவுக்கு இடைக்கால தடை

டெனீஸ்வரனை நீக்கிய CV யின் உத்தரவுக்கு இடைக்கால தடை-Removing B Deniswaran From NP Ministerial Post-Interim Order

 

அமைச்சுக்களைப் பகிர்ந்து கொண்டோர் அதிலிருந்து உடனடியாக விலகவேண்டும்
- மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

வடக்கு மாகாண போக்குவரத்து, உள்ளூராட்சி மற்றும் மீன்பிடித்துறை அமைச்சிலிருந்து பா. டெனீஸ்வரன் நீக்கப்பட்ட உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண போக்குவரத்து, உள்ளூராட்சி மற்றும் மீன்பிடித்துறை அமைச்சசு பதவியிலிருந்து பா. டெனீஸ்வரன் நீக்கிய உத்தரவுக்கு இடைக்கால தடை விதிப்பதாகவும், அவரது அமைச்சுக்களைப் பகிர்ந்து கொண்டவர்கள் அந்தப் பதவிகளிலிருந்து உடனடியாக விலகவேண்டும் என,
மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டுள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக முன்னாள் மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதியரசர்களான குமுதினி விக்ரமசிங்க மற்றும் ஜனக டி சில்வா ஆகியோரின் முன்னிலையில் இன்று (29) எடுத்துக் கொள்ளப்பட்டபோது நீதிமன்றம் இவ்வுத்தரவை வழங்கியுள்ளது.

குறித்த மனு மீதான விசாரணைகள் நிறைவடையும் வரை குறித்த இடைக்கால தடை அமுலில் இருக்கும் என, நீதிமன்றம் குறித்த உத்தரவில் தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், தம்மை பதவியில் இருந்து நீக்கியது தவறு என்று உத்தரவிடக் கோரி, முன்னாள் மாகாண போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சர் டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு கடந்த 11 ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்பட இருந்த நிலையில் அன்றைய தினம், நீதியரசர்களில் ஒருவர் விடுப்பிலிருந்தமையால், அது மீண்டும் ஜூன் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்ததோடு, அன்றைய தினமும் எடுத்துக்கொள்ளப்படாத நிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போது இவ்வுத்தரவு வழங்கப்பட்டது.

இவ்வுத்தரவை அடுத்து ஊடகவியலாளரிடம் கருத்து தெரிவித்த டெனீஸ்வரன்,

“எனது முயற்சியானது அநீதிக்கெதிரானது. முதலமைச்சர் தான்தோன்றித்தனமாக எடுத்த இந்த முயற்சி தோற்கடிக்கப்பட்டுள்ளது. இதன்படி எனது மக்கள் சேவையை தொடர மீண்டும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

கடந்த காலங்களில் இன மத பேதங்களை மறந்து சேவை செய்தவன் நான். இதனை சகலரும் அறிவர். எதிர்வரும் 09 ஆம் திகதி ஆளுநர், பிரதம செயலாளர் மற்றும் முதலமைச்சர் ஆகியோருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தனது கட்டளை ஒன்றை பிறப்பிக்கும்.

அதாவது என்னை மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டும் என்பதே. அத்துடன் எனது அமைச்சினை தற்போது பிடுங்கி கூறு கூறுகளாக வைத்திருக்கின்ற முதலமைச்சர், அனந்தி சசிதரன் மற்றும் சிவநேசன் உள்ளிட்டோர் பதவி விலகுவது நல்லது.
எனக்கு இந்த நல்லாட்சியில் நீதி கிடைத்துள்ளதை இட்டு சந்தோசம் அடைகின்றேன்” என்றார்.

இது தவிர ஊடகவியலாளரின் மற்றுமொரு கேள்வியான அந்தப் பதவியில் தொடர்ந்து நீடிப்பீர்களா? என கேட்ட போது,
“பதவியேற்ற பின்னர் அதனை துறப்பதனைத் தவிர வேறு என்ன செய்வது? காரணம் இந்த முயற்சி முதலமைச்சரின் தவறை சுட்டிக்காட்டவே நான் வழக்கைத் தொடர்ந்தேன். இது மாத்திரமன்றி பழைய அமைச்சானது எனக்கு கிடைக்கப்பெறும் என்ற நம்பிக்கை வந்துள்ளது.

என்னை நீக்கியவர்களுக்கு எனது அறிவுரையாக இன்னுமொரு புதிய அமைச்சை உருவாக்கி என்னை தவிர்த்து நியமித்த புதியவர்களை நியமித்துவிட்டு எனது பழைய அமைச்சினை தாருங்கள். மக்களுக்கு என்னாலான நிறைய சேவைகளை செய்ய வேண்டி உள்ளன” என்றும் டெனீஸ்வரன் தெரிவித்தார்.

(புங்குடுதீவு குறுப் நிருபர் - பாறுக் ஷிஹான்)

 


Add new comment

Or log in with...