ஸ்விடனை வீழ்த்தி உலகக் கிண்ண வாய்ப்பை தக்கவைத்துக் கொண்ட நடப்பு சம்பியன் ஜெர்மனி | தினகரன்

ஸ்விடனை வீழ்த்தி உலகக் கிண்ண வாய்ப்பை தக்கவைத்துக் கொண்ட நடப்பு சம்பியன் ஜெர்மனி

 
மெக்சிகோ, பெல்ஜியம் அணிகளுக்கு வெற்றி 
போட்டி முடியும் நேரத்தில் டோனி க்ரூஸ் போட்ட தீர்க்கமான கோல் மூலம் ஸ்விடன் அணியை 2- - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த நடப்புச் சம்பியன் ஜெர்மனி உலகக் கிண்ணத்தின் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை மயிரிழையில் தக்கவைத்துக் கொண்டது.

எப் குழுவில் மூன்று புள்ளிகளை பெற்றிருக்கும் ஜெர்மனி முதல் போட்டியில் தன்னை வீழ்த்திய மெக்சிகோவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது. ஜெர்மனி அணி நொக் அவுட் சுற்றுக்கு முன்னேற தனது கடைசி குழுநிலை போட்டியில் தென் கொரியாவை வீழ்த்த வேண்டும்.

ஜெர்மனி அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்துடனேயே ரஷ்ய நேரப்படி கடந்த சனிக்கிழமை (23) சொச்சி நகரில் ஸ்வீடனை எதிர்கொண்டது. எனினும் போட்டியின் ஆரம்பம் ஜெர்மனி அணிக்கு சாதகமாக இருக்கவில்லை.

32 ஆவது நிமிடத்தில் விக்டென் கிளாசன் மைதானத்தின் நடுவில் இருந்து கடத்தி வந்த பந்தை ஜெர்மனி பெனால்டி எல்லைக்குள் ஓலா டொய்வொனனிடம் பரிமாற்றியபோது நெஞ்சால் முட்டி பந்தை கட்டுப்படுத்திய அவர் வேகமாக கடத்திச் சென்று கோல்காப்பாளருக்கு மேலால் தட்டிவிட்டு ஸ்வீடனுக்கு முதல் கோலை பெற்றுக் கொடுத்தார். தோற்றால் வெளியேற வேண்டிய நிலையில் இந்த கோல் ஜெர்மனிக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.

போட்டியின் பெரும்பான்மையான நேரம் ஜெர்மனி வீரர்களின் கால்களிலேயே பந்த சுற்றிக் கொண்டிருந்தது.

இதனால் இரண்டாவது பாதி ஆட்டம் ஆரம்பித்த விரைவிலேயே மார்கோ ரியுஸ் ஜெர்மனி அணிக்காக பதில் கோல் போட்டார்.

இந்நிலையில் போட்டி சமநிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் வேளை ஜேரோம் போடென்ஜ் இரண்டாவது மஞ்சள் அட்டை பெற்று வெளியேறியதால் ஜெர்மனி அணி கடைசி பத்து நிமிடங்களும் பத்து வீரர்களுடனேயே ஆட வேண்டி ஏற்பட்டது.

போட்டியின் மேலதிக நேரத்தில் ஆட்டம் நிறுத்தப்படுவதற்கு 3 நிமிடங்களே இருக்கும்போது கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை அருமையாக பயன்படுத்திக் கொண்ட டோனி க்ரூஸ் வலது மூலையிலிருந்து வலைக்குள் உதைத்தார்.

இதன் மூலம் நான்கு முறை உலக சம்பியனான ஜெர்மனி 1962 ஆம் ஆண்டுக்கு பின் அடுத்தடுத்து உலகக் கிண்ணத்தை வென்ற அணியாக இடம்பிடிப்பதற்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

இதன்படி எப் குழுவின் நான்கு அணிகளுக்கும் அடுத்த சுற்றுக்கு முன்னேற தொடர்ந்து வாய்ப்பு உள்ளது. எதிர்வரும் புதன்கிழமை (27) நடைபெறவிருக்கும் இந்த குழுவின் மெக்சிகோ எதிர் ஸ்வீடன் மற்றும் ஜெர்மனி எதிர் தென் கொரியா போட்டிகளின் முடிவுகள் அடிப்படையில் 16 அணிகள் சுற்றுக்கு தேர்வாகும் இரண்டு அணிகளும் தீர்மானிக்கப்படும்.

இதனிடையே தென் கொரியாவுக்கு எதிரான போட்டியில் 2- - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றி மூலம் மெக்சிகோ அணி நடப்புச் சம்பியன் ஜெர்மனி இருக்கும் எப் குழுவில் இருந்து முதல் அணியாக உலகக் கிண்ணத்தின் காலிறுதிக்கு முந்திய சுற்றுக்கு நுழையும் வாய்ப்பை நெருங்கியுள்ளது.

மெக்சிகோ அணி தனது முதல் குழுநிலை போட்டியில் ஜெர்மனியை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்ததோடு தற்போது இரண்டாவது போட்டியிலும் வென்று 6 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இதன் மூலம் இம்முறை உலகக் கிண்ண போட்டியில் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தும் முக்கிய அணிகளில் ஒன்றாக மெக்சிகோ மாறியுள்ளது.

ரொஸ்டொவ் ஒன் டொன்னில் சனிக்கிழமை (23) நடைபெற்ற இந்த போட்டியின் 26 ஆவது நிமிடத்திலேயே பெனால்டி உதை மூலம் மெக்சிகோ அணி முன்னிலை பெற்றது. பெனால்டி எல்லையில் வைத்து தென் கொரிய வீரர் ஜாங் ஹ்யுன் சூ பந்தை தடுக்க முயன்று அது அவரது கையில் பட்டதை அடுத்து வழங்கப்பட்ட பெனால்டியை கார்லோஸ் வேலா இலகுவாக வலைக்குள் புகுத்தினார்.

போட்டியில் ஆதிக்கத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்ட மெக்சிகோ அணி தனது இரண்டாவது கோல் மூலம் அதனை சிறப்பாக வெளிக்காட்டியது. 66 ஆவது நிமிடத்தில் ஹிர்விங் லொசானோ, தென் கொரிய பின்கள வீரர்களை முழுமையாக முறியடித்து ஜாவியர் ஹெர்னன்டஸிடம் பந்தை பரிமாற்ற அதனை அவர் அழகாக கோலாக மாற்றினார்.

வெஸ்ட் ஹாம் கழகத்தின் நட்சத்திர வீரர் ஹெர்னன்டஸ் பெறும் 50 ஆவது சர்வதேச கோலாகவும் இது இருந்தது. இந்த மைல்கல்லை எட்டும் முதல் மெக்சிகோ வீரர் இவராவார்.

போட்டி முடியும் தருவாயில் டொடன்ஹாம் முன்கள வீரர் சொன் ஹியுங் மின் பொனால்டி எல்லைக்கு வெளியில் இருந்து உதைத்த ப்ரீ கிக் மூலம் அபார கோல் ஒன்றை புகுத்தியபோதும் தென் கொரிய அணிக்கு அது தாமதித்து கிடைத்த கோலாகவே இருந்தது.

குறிப்பாக 1986 உலகக் கிண்ணம் தொடக்கம் தென் கொரியா பெனால்டி எல்லைக்கு வெளியில் இருந்து 14 கோல்களை புகுத்தியுள்ளது. இந்த காலப்பிரிவில் அந்த அணி பிரேசில் (16) மற்றும் ஜெர்மனி (15) அணிகளிடம் மாத்திரமே பின்தங்கியுள்ளது.

மறுபுறம் ரொமெலு லுகாகு மற்றும் எடன் ஹசார்ட்டின் இரட்டை கோல்கள் மூலம் துனீசிய அணியை தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் 5–2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் துவம்சம் செய்த பெல்ஜியம் அணி ஜி குழுவில் ஆறு புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை நெருங்கியுள்ளது.

லுகாகுவின் இரட்டை கோல் மூலம் அவர் இம்முறை உலகக் கிண்ணத்தில் தங்கப் பாதணிக்கான போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் முதலிடத்தில் உள்ளார். இருவரும் இதுவரை தலா நான்கு கோல்களை போட்டுள்ளனர்.

எனினும் போட்டி முழுவதிலும் துனீசிய அணி ஆக்கிரமிப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தியதோடு 18 ஆவது நிமிடத்தில் அந்த அணியின் டைலான் ப்ரோன், ப்ரீ கிக் உதையை தலையால் முட்டி கோல் பெற்றார். எனினும் துனீசிய அணியின் போராட்டம் முதல் பாதி ஆட்டத்திலேயே பலவீனப்பட்டது.

முதல் பாதி ஆட்டத்தின் மேலதிக நேரத்தில் வைத்து தோமன் மியுனியர் பரிமாற்றிய பந்தை லுகாகு கோலாக மாற்றி பெல்ஜியம் அணியை வலுவான முன்னிலைக்கு இட்டுச் சென்றார்.

மொஸ்கோவில் சனிக்கிழமை (23) நடைபெற்ற போட்டியின் 6 ஆவது நிமிடத்திலேயே பெனால்டி எல்லைக்குள் ஹாவார்ட் கீழே வீழ்த்தப்பட அதனை பயன்படுத்தி பெல்ஜியம் முதல் கோலை புகுத்தியது. பின்னர் 16 ஆவது நிமிடத்தில் எதிரணி பெனால்டி எல்லையின் கீழ் வலது மூலையில் இருந்த லுகாகு பந்தை வலைக்குள் செலுத்த பெல்ஜியம் அணி 2–0 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை பெற்றது.

 


Add new comment

Or log in with...